வெள்ளி, 9 டிசம்பர், 2022

கடலூர் மணற்கல் தொகுப்பு - திருவக்கரை கல்மரங்கள்!

இதோ என்னைச் சுற்றிலும், மிகப்பெரிய நிலப்பரப்பு விரிந்து கிடக்கிறது. எரிமலைக் குழம்புகள் தணிந்தது போல – வெந்து தணிந்தது காடு! ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும் துளைகள் அல்லது உளைகள்! பாம்பு புற்றுகளை நினைவூட்டி நம்மை பயமுறுத்துகின்றன!

இவற்றைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை.. பரவசப்படலாம்! கொண்டாடலாம்!

மணற் குன்றுகள் கல்லாக இருகிப் போயிருக்கின்றன. கல்மரங்களின் வயது தான் இவற்றின் வயதும். அதாவது 20 மில்லியன் ஆண்டுகள்!

இவற்றில் ஊடாகத்தான் கல்மரங்கள் புதைந்துக் கிடக்கின்றன. இரும்பும் கலந்திருக்கிறது என்பது வியப்பு!

இவற்றிற்குப் புவியியலாளர் வைத்திருக்கும் பெயர்: கடலூர் மணற்கல்; Cuddalore Sand Stone. இது உலகம் முழுவதிலும் உள்ள அறிவியலாளர்களால் அறியப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்!

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலுள்ள அறிவியல் அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த அதிசத்தை நேரில் சந்தித்ததில் ரொம்பவும் சந்தோஷம்!

இவ்வுண்மைகளை விளக்கிச் சொன்ன, புவியியலாளர் ஐயா சபாரத்தினம் அவர்களுக்கும்

இங்கு அழைத்துச் சென்று படம்பிடித்த நண்பர் செல்லிப்பட்டு சதீஷ் குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி!





வியாழன், 8 டிசம்பர், 2022

திருவக்கரையில் புதிதாக உருவாகி வரும் கல்மரப் பூங்கா

கடந்த 2019 ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில்…

“செம்மண் குவாரிகள் மூலம் சுரண்டப்படும் திருவக்கரை கல்மரங்கள்”, “திருவக்கரை கல்மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்” – இப்படியாகத்தான் இருந்தது உள்ளூர் பத்திரிகை செய்தியின் தலைப்புச் செய்திகள்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி ரயில் பாதை ஓரங்களில், ஆலாத்தூர் கிராமச் சாலைகளில் என சகல இடங்களிலும் கொட்டப்பட்டிருந்த செம்மண் இடையே, கல் மரங்கள் காணப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நாம் மேற்கொண்ட முயற்சிகள் தான் மேற்காணும் பத்திரிகை செய்திகள்!

கல்மரம் எனப்படும் கனிம வளம், இயற்கையின் அதிசயம் சுரண்டப்படும் தீவிரத்தை உணர்ந்து கொண்ட பத்திரிகை நண்பர்கள், முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உணர்ந்தது!

அப்போதைய கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திருவக்கரைப் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

விளைவு, மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் “கல்மரப் பூங்கா”விற்கான அடிக்கல்லினை கடந்த 31.01.2021இல் அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் நாட்டினார்.

நேற்று 8.12.22 திருவக்கரை போய் பார்த்தேன். அருங்காட்சியகம், ஆடிட்டோரியம், நூலகம் என பல்வேறு வசதிகளுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது கல்மரப் பூங்கா! பணிகள் முடிந்து ஓரிரு மாதங்களில் திறக்கப்படலாம்!

நாம் வைத்தக் கோரிக்கை நம் கண்முன்னே நிறைவேறுவது, செயல் வடிவம் பெறுவது நமக்கு மகிழ்ச்சி தான்!




புதன், 19 அக்டோபர், 2022

யானை மீது முருகன் சிற்பம் - ஆனாங்கூர், விழுப்புரம்

முருகக் கடவுளின் வாகனமாக யானையும் இருந்திருக்கிறது!


பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, பதிற்றுப்பத்து இதுபற்றி குறிப்பிடுகின்றன.


இவற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருப்பது தான், விழுப்புரம் அருகே ஆனாங்கூர் பகுதியில் இருக்கும் முருகன் சிற்பம்.


இதில், யானை மீது அமர்ந்து பவனி வருகிறார் முருகன்!


இந்த சிற்பத்தின் காலம் பொது ஆண்டு 6-7 ஆகலாம். அதாவது, பல்லவர் காலம்!

தோற்றத்தில் இது இந்திரன் போலக் காணப்படினும் முருகன் சிற்பம் என்றே கூறலாம் என்கிறார் ஆய்வாளர் கோ.முத்துசாமி (ஆவணம் இதழ் 5, 1994)

அந்த வகையில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது ஆனாங்கூர் கிராமமும், இங்கிருக்கும் இந்த முருகன் சிற்பமும்!

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இச்சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தான் மிகப் பெரிய வருத்தம்!

( 19.10.22 புதன் கிழமை காலை நண்பர் வழக்கறிஞர் சாரதி அவர்களுடன் சென்று இந்த சிற்பத்தை பார்த்து வந்தேன்)

வியாழன், 29 செப்டம்பர், 2022

ஆற்காடு - ஆ.கூடலூர் - கோப்பெருஞ்சிங்கன் சிற்பங்கள்

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு மற்றும் ஆ.கூடலூர் கிராமங்களில் கண்டறியப்பட்ட கோப்பெருஞ்சிங்கன் சிற்பங்கள் குறித்தச் செய்தி... நாளிதழ்களில்..

                               தினத்தந்தி 
                                 24.09.2022

                   The New Indian express
                               26.09.2022

                      
                                  தினகரன் 
                                  26.09.2022

       
                        இந்து தமிழ் திசை
                               26.09.2023


கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வேங்கடேசன்

இதோ, அடுத்த மாதம் வந்தால், வயது 83 ஆகப்போகிறது!


தெருமுனையிலேயே நமக்காகக் காத்து நிற்கிறார்.. அன்புடன் கைப் பிடித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்...


உபசரிப்பு... உரையாடல் தொடர்கிறது...


மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஐயா. வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்கள்.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 535 கல்வெட்டுகளும் இவருக்கு அத்துப்படி!



வரலாற்றில் வில்லியனூர், பல்லவன் கண்ட பனைமலைக் கோயில் உள்ளிட்ட 28 நூல்களுக்குச் சொந்தக்காரர்! அடிப்படையில் தமிழாசிரியர்... ஆனால் கல்வெட்டு ஆய்வாளராகப் பரிணமித்து நிற்கிறார்!


இவ்வளவு உழைப்பு, அறிவு, ஆற்றலுக்கும் நான் உரியவன் எனும் கர்வம், கொஞ்சம் கூட இவரிடம் எட்டிப் பார்க்கவில்லை!


"ஐயா, உங்களுடன் ஒரு புகைப்படம்" என்று சொன்னது தான் தாமதம்; ஒரு குழந்தையைப் போல உடன் வந்து ஒட்டி நிற்கிறார்!


சுமார் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, "புறப்படுகிறேன்" என்றேன். "உக்காருங்க போகலாம்" ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்கிறார்.


வில்லியனூர் புறவழிச்சாலை வந்தவர், பஸ் வரட்டும் என காத்து நிற்கிறார். பஸ் வந்தவுடன் நம்மை ஏற்றிவிட்டு, கையசைத்து விடை தருகிறார்...



அதிசயத்து நிற்கிறேன்... ஐயா. வில்லியனூர் வேங்கடேசன் அவர்களைப் பார்த்து....

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஆற்காடு - சயனப் பெருமாள்!

எப்படியும் 10 அடிகள் இருக்கலாம்! ஒரு பிரம்மாண்டத்தை நோக்கி தான் நகர்ந்து இருக்கிறது இந்தப் பாறை! ஆனால் ஏனோ அந்தச் சிற்பியின் முயற்சி முற்றுபெறவில்லை!


வலதுகை மடித்து தலைக்குக் கீழேயும்.. இடதுகை நேராகவும் தொங்கவிடப்பட்டு இருக்கிறது.


கிடந்த நிலையில் காட்சி தருகிறார் விஷ்ணு... செஞ்சி அருகே தொண்டூரில் இருக்கும் விண்ணாம்பாறை நம் நினைவுக்கு வருகிறது.


அதுபோன்ற முயற்சி இங்கும் நடந்திருக்கிறது.


விஷ்ணு தலைக்கு அருகில், தனித்தச் சிற்பமாக மகாலட்சுமி காட்சி தருகிறார்!


இவர்கள் மலையர்குல காலம், அதாவது 13வது நூற்றாண்டு ஆகலாம் என்கிறார் திருமதி Mangai Ragavan அவர்கள்.


"சிவன் படுத்திருக்கிறார். அவர் தலைமாட்டுல பார்வதி வெசனத்தோடு உக்காந்து இருக்காங்க" அந்தப் பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்ற ஒருவர் சொன்னது.


சிரிப்பு வந்தது!


பாறைகள் சூழ்ந்த இடம். சில அடிகளில் பாறைகள் உடைக்கப்பட்டு இருக்கின்றன. சிற்பங்கள் இருப்பதால் இந்த இடம் தப்பி இருக்கிறது.


இது எந்த இடம்?


இடைச்சி கல் அருகில், ஆற்காடு கிராமம். விழுப்புரம் - திருக்கோவலூர் சாலை.


உடன் வந்து உதவிய ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு நன்றி..!

சனி, 10 செப்டம்பர், 2022

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்


பாரதி குறித்து அண்மையில் நான் வாசித்த, என்னை உலுக்கிய புத்தகம் “ பாரதி நினைவுகள்”. நூலாசிரியர்: யதுகிரி அம்மாள்.


பாரதியின் நெருங்கிய நண்பர் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரின் மூத்த புதல்வி. பாரதியின் அபிமான புத்திரி.


பாரதி புதுவையில் இருந்த போது இருவரது குடும்பமும் மிகவும் நெருக்கமாக இருந்தது. 


யதுகிரி அம்மாள் பாரதியின் மடியில் தவழ்ந்த குழந்தை. அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்த சிறுமி. அவருடன் வாதிட்டு விளக்கம் பெற்ற பெண்மணி.


அந்த வகையில் பாரதி குறித்த இவரது எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


இந்நுலைப் பதிப்பித்து வெளியிட்ட பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், “பாரதியின் அன்புக்குப் பாத்திரமான சிறுமி என்ற கோணத்திலிருந்து பாரதியை ஒரு மனிதராக, குடும்பத் தலைவராக நம் முன் கொணர்ந்து நிறுத்துகிறார் யதுகிரி அம்மாள். இதில் அவர் கையாளும் ‘வீட்டு நடை’ அவரது நூலுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது.”


உண்மை தான். 1912 முதல் 1918 வரையிலான அரிய விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் யதுகிரி அம்மாள். 


“பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தன் நோக்கத்தின் படியேதான் நடக்கும் படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே.”


“செல்லம்மா எவ்வளவு முறையிட்டும் பாரதியார் மௌன விரதத்தை மாதக்கணக்காக அனுஷ்டித்தார். ஒருதரம் நாற்பது நாள் விரதமிருந்து கவிதைகள் செய்தார்.”

“பாரதியார் முன்போல் இல்லை. அவர் போக்கு வேகமாய் மாறிக்கொண்டு வந்தது. யாரோ அவரை தப்பு வழிகளில் இழுக்கிறார்கள் என்று தோன்றிற்று. ஆனாலும் யாராலும் அவர் போக்கை மாற்ற முடியவில்லை. செல்லம்மாவின் வேண்டுகோள்களையும் தள்ளிவிட்டு அவர் முன்போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. 


பாரதி: யதுகிரி நான் புதிய வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.


நான்: அது என்ன வழி?


பாரதி: சாகாமல் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்கப் போகிறேன்.


நான்: எல்லா அதிசயமும் செய்யலாம். ஆனால் சாகாமல் இருக்க முடியாது என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீர் அதைக் கண்டுபிடித்தால் மிகவும் அதிசயமே. 


பாரதி: நான் பிரயத்தனப்படுகிறேன். அது கட்டாயமாக எட்டும் என்று தோன்றுகிறது.”


நான் அவரை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு! சிவப்பான கண்கள்! துர்ப்பலமான உடம்பு! பார்க்க சகிக்கவில்லை! 

என் மனதில் இருப்பதை அறிந்து கொண்டவர் போல, “நான் புதிய வழியில் யோகசாதனம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது“ என்று அறிவித்தார்.


“சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதியார் வந்திருந்தார்.  ஷேமலாபங்களை விசாரித்து விட்டு எங்கள் வீட்டு வாசலிலே முக ஷவரம் செய்து கொண்டார். “இன்று ஷவரத்துக்கு நாள் நல்லாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்து கொண்டேன் “ என்றார்.


புதன், 7 செப்டம்பர், 2022

கோப்பெருஞ்சிங்கன் - ஆ.கூடலூர்

கண்டேன்… கண்டேன்… கோப்பெருஞ்சிங்கனைக் கண்டேன்…


ஆ.கூடலூர் (ஆயந்தூர் கூடலூர்). விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் முகையூருக்கு முன்னதாகவே இருக்கும் கிராமம்.


இங்கிருக்கும் குளக்கரையில் புதிதாக எழுந்து நிற்கிறது: தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் ஆலயம்.


கிராமத்தில் பல்வேறு இடங்களில் கிடைத்திட்ட இறை சிற்பங்கள் பல, மேற்காணும் ஆலய வளாகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன.


இதோ, விநாயகர் சன்னதியையொட்டி இரண்டு சிற்பங்கள் வெளியே நின்றிருக்கின்றன.


அதில் ஒருவர் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் நின்றிருக்கிறார். இவரை “ரிஷி” என வணங்கி வருகின்றனர் அப்பகுதி மக்கள். 


சுமார் மூன்று அடி உயரம் இருக்கும் இவரைச் சற்று உற்று நோக்குவோம்.


முகத்தில் முறுக்கிய மீசை. கழுத்திலும் கைகளிலும் அழகிய ஆபரணங்கள். நன்றாக சரிந்தத் தொந்தி. இடைகள், குறுவாள்களைத் தாங்கி நிற்கின்றன. இடையைச் சுற்றி அழகான ஆடை. 


இந்த உருவம், வேறொருவரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறதே! ஆமாம். சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் நின்றிருப்பர் நம் நினைவில் வருகிறார். 


ஆம். அவரே தான் இவர்! 

இவரே தான் அவர்!

அவர் வேறு யாருமல்ல; காடவராய மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.


கெடிலம் நதிக்கரையில் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியவர்.  “சகலபுவன சக்கரவர்த்தி, அவணியாளப் பிறந்தான், பரதம்வல்ல பெருமான், தமிழ்நாடு காத்தான்” உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்!


இவர் காலத்தில் ஏராளமான கோயில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகள். திருவெண்ணெய்நல்லூர் – திருவாமாத்தூர் – திருக்கோவிலூர் …


என இப்பகுதிக் கோயில்களின் பட்டியல் இன்னமும் நீளும்!


கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் தில்லை கிழக்கு கோபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது. 


செஞ்சியை அடுத்த அண்ணமங்கலத்தில் பாறையில் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்று இருக்கிறார்.


அதற்கடுத்து, ஆ.கூடலூர் கிராமத்தில் தான், இதோ இங்கு தான் நமக்குத் தனிச் சிற்பமாகக் காட்சி தருகிறார் கோப்பெருஞ்சிங்கன்.


அந்த வகையில் வரலாற்றில் இடம்பெறுகிறது, ஆயந்தூர் கூடலூர்.


உடன் வந்து உதவிய உள்ளூர் நண்பர் ஆசிரியர் திரு. மூர்த்தி, 


வழிகாட்டி உதவிய திருமதி. Mangai Ragavan 


பயணத்தில் உதவிய Radhakrishnan Rajendran 


ஆகியோருக்கு நம் நன்றிகள்..!


அன்புடன்,

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

சனி, 30 ஜூலை, 2022

நெய்வனை - சொர்ணகடேஸ்வரர் கோயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள ஊர் நெய்வனை. இங்கு வீற்றிருப்பவர்: பொற்குடம் கொடுத்த நாயனார். இப்போது, சொர்ணகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவார ஆசிரியர் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றத் தலம்.


கோயில் முழுக்கக் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, மலைய மன்னன் வழிவந்த கிளியூர் மலையமான்கள் (சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு திருக்கோவலூர் உள்ளிட்டப் பகுதிகளின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள்) நெய்வனை கோயிலுக்கு நிவந்தங்கள் செய்துள்ளனர். 


மலைய மன்னர் இருவரது சிற்பங்கள், நெய்வனைக் கோயில் எதிரே இருப்பதாக “மலையமான்கள்” எனும் நூலில், பாகூர் புலவர் சு‌.குப்புசாமி தெரிவித்து இருக்கிறார்.


இன்று 30.07.22 சனிக்கிழமை காலை நண்பர் பாரதிதாசன் உடன் நெய்வனைக் கோயிலுக்குப் போயிருந்த போது இந்தச் சிற்பங்களைத் தேடினேன். கிடைக்கவில்லை.


அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்: “இருபது ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு வெளியே அந்த சிற்பங்கள் நின்றிருந்தன. ஆனால் அவற்றை யாரோ தூக்கிப் போய்விட்டனர்”. 


எனக்குள் பெரும் ஏமாற்றம். அப்படியும் விடாமல் கோயில் வளாகத்தைச் சுற்றி சுற்றி வந்தேன். தலை மட்டும் இல்லாமல் சிறிய அளவிலான சிற்பம் ஒன்று சுற்றுச் சுவர் ஓரமாகக் கிடந்தது.


கைகளை கூப்பி, நின்ற நிலையில் இருக்கிறார். கழுத்து, கை, கால்களில் அணிகலன்கள். இடை முதல் தோள்பட்டை வரை வளைந்து நீண்டிருக்கும் பாம்பு. இவர் யாராக இருக்கும்?


யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஏற்கனவே முழுசாக இருந்த இரண்டு சிற்பங்களைத் தொலைத்து விட்டோம். சேதமடைந்து இருந்தாலும் பரவாயில்லை. இது, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


கோயில் அர்ச்சகர், இளைஞர் விக்னேஷ் வசம் கோரிக்கை வைத்தேன். இதை உடனடியாக ஏற்றுக் கொண்ட அந்த இளைஞர் அங்கிருந்தவர்களையும் துணைக்கு அழைத்து, அந்தச் சிற்பத்தை கோயில் வளாகத்திற்குள் கொண்டு சென்று வைத்தார்.


நிம்மதி: நமக்கு மட்டும் அல்ல; தலை இழந்தும் களையுடன் நின்றிருந்த அந்த அடியவருக்கும் தான்!


திங்கள், 27 ஜூன், 2022

ஜம்பை - வரலாற்றுச் சுரங்கம்

திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை.

சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்து நிற்கும் புளிய மரங்கள். தொலைந்து போன நம்ம கனவு மாதிரி கண் முன்னாடி விரிந்து நிக்குது.

மணலூர்பேட்டை பேரூராட்சி. இதுக்கு அடுத்த ஊருதான் ஜம்பை. அழகான அமைதியான கிராமம்.

இந்த அழகுக்கும் அமைதிக்கும் காரணம், நீண்டு படர்ந்து இருக்கும் ஏரி. சுற்றிலும் இயற்கை எழிலோடு நின்னுட்டு இருக்கும் பசுமைப் படர்ந்த மலைக் குன்றுகள்.


இந்த ஊரோட பழைய பேரு வாளையூர் நகரம். ஆமாம் ங்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த ஊரு நகரம் னு அழைக்கப்பட்டு வந்துச்சு.

முதலாம் ராஜராஜன் காலத்தில் அவனோட சிறப்பு பெயரால நித்தவிநோத புரம் னும் வீரராஜேந்திரன் காலத்துல வீரராஜேந்திர சோழபுரம் னும் அழைக்கப்பட்டு வந்த இந்த ஊரு சண்பை ன்னும் சண்பை எனப்படும் சண்பையான வீரராஜேந்திர சோழபுரம் னும் அழைக்கப்பட்டுச்சு.

சம்பு ங்கறது ஒரு வகை கோரைப் புல். சம்புக் காடு இருந்த பகுதி. சம்பு ஜம்பை ஆயிடுச்சு.

சங்ககாலத்துல மலையமான்கள் ஆட்சிக்கு உட்பட்டும் பல்லவர் காலத்துல அவங்களுக்கு கீழ் ஆட்சி செய்த வாணகோ அரசர்களாலும் அப்புறம் சோழர்களாலும் ஜம்பை ஆளப்பட்டு வந்துச்சு. சோழர் காலத்துல இங்க அரன்மணையும் இருந்து இருக்கு.

ஜம்பையில நிறைய கோவில்கள். காசிநாதர் ஜம்புநாதர் கயிலை நாதர் அல்லி நாதர் கமல நாதர் னு சிவாலயங்களும் சைனி அம்மன் ங்கற சமணக் கோயில் னு நிறைய இருக்கு.

ஜம்பை பழமையான நகரம் அப்படிங்கறதுக்கான உதாரணம் நிறைய பானை ஓடுகள் இருக்கிறது தான். இதுல குறியீட்டோட கூடிய ஓடும் கிடைச்சு இருக்கு.

ஏரியை ஒட்டி நிற்கும் இந்த ஜேஷ்டா மூத்த தேவி பல்லவர் காலத்தவள். இவளுக்குப் பக்கத்திலேயே பாறையில் ஒரு கல்வெட்டு. ராஷ்டிரகூட மன்னனான கன்னரத் தேவன் ஆட்சி காலத்தை சேர்ந்ததாகும்.

இங்க இருக்கும் கோயில்கள்ல ஜம்புநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது.


இந்தக் கோயிலுக்குள்ள போன உடனே நம்மை வரவேற்கிறது இந்த அழகான சிம்மத் தூண்.

சோழர் கலைப் பாணிக்கு எடுத்துக் காட்டான கலைநயம் மிக்க தூண்கள் கோயில தாங்கி பிடிச்சு நிக்குது.

கருவறையில அருளே உருவாகக் காட்சி தர்றாரு ஜம்புநாதர்.

அழகிய சிற்பங்களோட தொகுப்பா இருக்கு இந்தக் கோயில்.

அப்புறம் கோயில் முழுக்க நிறைய கல்வெட்டுகள்.. இவை பராந்தகன் காலம் முதல் விஜயநகரர் காலம் வரையிலானவை. அந்தந்த காலக்கட்டங்கள் ல நிகழ்ந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகள பட்டியலிட்டு சொல்லுது இந்தக் கல்வெட்டுகள்.

ஜம்புநாதர் கோயில் வளாகத்தில் தனி சன்னதியில இருக்காங்க அகிலாண்ட ஈஸ்வரி அம்மன்.

இதோ இவை கோயில் வளாகத்தில் இருக்கும் நடுகற்கள்.. தலைப்பலி சிற்பங்கள். காளையுடன் போரிட்டு இறந்த மற்றும் கோயில் பணி தடை இல்லாமல் நடக்க தன்னையே பலி கொடுத்தவன் னு ரெண்டு பேரோட நடுகல் சிற்பங்கள் தான் இது.

அப்புறம் கோயிலுக்கு வெளியே மண்ணுக்குள் புதைஞ்சு வணங்கும் நிலையில் இருக்கும் ரெண்டு சிற்பங்கள்.. இவங்க எப்ப வெளியே வருவாங்களோ தெரியல.







சனி, 4 ஜூன், 2022

கடலூர்: கடலில் மூழ்கிய கப்பல்

நாலு வருஷத்துக்கு முன்னாடி 2018 செப்டம்பர் ல ஒரு நாள் மத்தியானம் கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து மோட்டார் படகுல ஒரு கடல் பயணம்..


இந்தக் கடல் பயணம் ங்கறது எனக்கு முதல் அனுபவம் புது அனுபவமும் கூட.


ஆனாலும் நண்பர் பாபு அவர் குடும்பத்தினர் அப்புறம் நண்பர்கள் பிரபு, பாலா தமிழ் உள்ளூர் நண்பர் கமல் னு நண்பர்கள் பட்டாளமும் கூட வந்ததால பயம் ஓரளவுக்கு குறைஞ்சது ன்னு சொல்லலாம்.


கடலூர் துறைமுகம் வரைக்கும் ஆன பயணம் இது. 


சுனாமியால பாதிக்கப்பட்ட தீவுக் கூட்டங்கள பாத்தோம்.


இதோ துறைமுகத்துத்துக்குள்ள போகுது மோட்டார் படகு.


நம்மை சுத்தியும் தண்ணீர். தனிச்சு விட்ட மாதிரி மனசுக்குள்ள பயம். மனசு படபடன்னு அடிக்குது.


அப்பதான் நண்பர் கமல் சொன்னாரு கடலூர் டைட்டானிக் கப்பலை பாக்கப் போறோம் ன்னு.


மனசுக்குள்ள இப்ப பெரிய எதிர்பார்ப்பு எட்டிப் பாக்குது.


அதோ கடலுக்குள்ள நீண்ட இரும்பு கம்பம் மாதிரி நின்னுட்டு இருந்துச்சு.



கமல் திரும்பவும் சொன்னாரு இது கம்பம் இல்ல. கடலுக்குள் மூழ்கி இருக்கும் கப்பலோட ஒரு பகுதி.


இப்ப அதுக்கு பக்கத்திலியே நம்ம படகு போகுது. சுத்தி வந்துச்சு. ஓ.. இதுதான் அந்த கடலூர் டைட்டானிக் கப்பலா?


நெருக்கத்துலப் பாத்தோம்.

1970களோட இறுதியில கடலூர் துறைமுகம் வந்த இந்த கப்பல் புயல் ல சிக்கி தரைதட்டி நின்னு இருக்கு. உடைஞ்சும் போயிருக்கு. அப்புறம் அப்டியே கடலுக்குள்ள மூழ்கிடுச்சாம்.


கப்பலோட உரிமையாளர் அப்பப்ப கடலூர் வருவாராம்.  சில்வர் பீச் ல நின்னு தன்னோட கப்பல பாத்துட்டு போவாராம். கொடும தான் இல்லீங்களா. 


கடல் பயணம் ஒரு திகிலான அனுபவம் தான். கூடவே மூழ்கி இருக்கும் ஒரு கப்பலையும் ல்ல பாத்துட்டு வந்திருக்கோம்.


இதப் பத்திய நினைவுகள் எனக்குள் ஓடிக்கிட்டு இருந்துச்சு.


அப்பதான் புதுச்சேரியில் இருந்து நண்பர் ரமணி அவர் இப்ப இல்ல காலமாயிட்டார்.


அப்ப அவர் சொன்னாரு சார் இந்த கப்பல் விஜயகாந்த் படத்துல வந்திருக்கு அப்படின்னு.


நானும் ரமணி சொன்ன பிறகு தான் பாத்தேன்.


தூரத்து இடி முழக்கம். விஜயகாந்த் நடிச்சு 1980 டிசம்பர் ல வந்த படம். தேவனாம்பட்டினம் கடற்கரையில் எடுத்தப் படம்.


இந்த படத்துல வர்ற உள்ளம் எல்லாம் தள்ளாடுதே பாட்டு. நம்மலாள இன்னிக்கும் மறக்க முடியாத பாட்டு இல்லீங்களா?


படம் ஆரம்பிச்ச 20வது நிமிஷத்துல கதாநாயகனும் கதாநாயகியும் கடற்கரையில உக்காந்து பேசுவாங்க. அப்ப அவங்க பிண்ணனியில இந்த கப்பல் முழுசா தெரியும்.

அப்புறம் இன்னொரு காட்சியில கதாநாயகி கப்பலை காமிச்சு சொல்வாங்க:


இந்த கப்பல் கூட வேற ஒரு சீமையில இருந்து வந்து தான தரைதட்டுச்சு. அந்த மாதிரி நாமும் வேற ஒரு ஊருக்கு போனாக்கா நிம்மதியா வாழலாம் னு



அப்போ கதாநாயகன் விஜயகாந்த் சொல்வாரு தரைதட்டி நிக்கற கப்பல் மாதிரி நாம நிக்க வேணாம். நடுக்கடல்ல பயணமாகுற நாட்டுப் படகு போல தலைநிமிர்ந்து வாழலாம் னு.



இதுக்கு பிறகும் கூட தூரத்து இடி முழக்கம் படத்தோட பல இடங்கள் ல இந்த கப்பல் தலை காட்டும்.


தரைதட்டி முழுசா நின்னுட்டு இருந்த கப்பலோட கடைசி பாகத்தை தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி நாங்க பார்த்தது.


அப்புறம் 1980கள்ல எல்லாம் இந்த கப்பல வேடிக்கை பாக்கறது தான் கடலூர் மக்களோட பொழுது போக்கா இருந்துச்சு. இப்படியா ஒரு மாசி மகத்தப்ப கடற்கரைக்கு வந்த ஒரு கூட்டம் கப்பல பாக்க மீன்பிடி படகு ல போயிருக்காங்க. அப்ப அந்த படகு கடல் ல கவிழ்ந்த விபத்து ல 16 பேர் வரைக்கும் இறந்தாங்கலாம்.


இந்த சோக நினைவ நம்மோட பகிர்ந்து கிட்டாரு கடலூர் பற்குணம் அவர்கள்.

 மாபெரும் சோகம் தான்.


அண்மையில விசாரிச்சேன். திரும்பவும் போய் அந்த கப்பல பார்க்கலாமா ன்னு. கடலூர் நண்பர்கள் சொன்னாங்க.


இப்ப அதுக்கூட இல்ல. அதுவும் கடலுக்குள் ள மூழ்கிடிச்சு ன்னு.


இப்போதைக்கு நம்ம கிட்ட எஞ்சி நிக்கறது மூழ்கிப் போன கப்பலோட நினைவுகள் மட்டும் தான்.


இதுபற்றிய அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனல் பதிவைப் பார்க்க...

https://youtu.be/1vHgofv2N-c