காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் அவர்களுக்கும் விழுப்புரத்திற்கும் மிக
நெருங்கியத் தொடர்பு உண்டு.
அவரதுத் தந்தையார் விழுப்புரம் இரயில்வே லோக்கோ ஷெட்டில்
ஹெட்கிளார்க்காக வேலைப் பார்த்தவர்.
அந்தக் காரணத்தினால் ஜெயேந்திரர் அவர்களின் தொடக்கக் காலப் படிப்பும் இங்குதான்.
விழுப்புரம் பீமநாயக்கன் தோப்புப் பள்ளிக்கூடத்தில்தான் அவர் பயின்றார்.
காஞ்சி பீடாதி அவர்கள் விழுப்புரம் சங்கர மடத்திற்கு எப்போது
வந்தாலும், போலீஸ் எஸ்கார்டு வாகனம் பின்தொடரும். மடத்திலும் பலத்த போலீஸ்
பாதுகாப்புப் போடப்படும். அவர் எத்தனைநாள் தங்கியிருக்கிறாரோ அத்தனை நாளும்!
அவரிடம் ஆசி பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் வரிசைக்கட்டி நிற்கும். அதிகாரிகளும்,
அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்களும்கூட வருவார்கள்.
அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் தவறாமல் விழுப்புரம் மடத்துக்கு
ஆஜராகி விடுவோம். முகம் சுளிக்காமல், புன்சிரிப்புடன் பீடாதிபதி எங்களைச்
சந்திப்பார். வழக்கம்போல் நான்தான் எடக்குமடக்காகக் கேள்விகளைக் கேட்பேன். அவரும்
தயங்காமல் பதில் சொல்லுவார்.
இப்படித்தான் ஒருமுறை நான் கேட்ட ஒரு கேள்வியும் இவர் அளித்தப்
பதிலும் மிகப்பெரிய சர்சைக்குள்ளானது. ஆனாலும் அவர் பத்திரிகையாளர்களை (என்னையும்)
சந்திப்பதை ஒருபோதும் அவர் தவிர்க்கவில்லை.
ஒருமுறை, தான் படித்த விழுப்புரம் பீமநாயக்கன் தோப்புப் பள்ளிக்கூடத்தைப்
பீடாதிபதி அவர்கள் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்கு வந்த திமுக நகரமன்றத்
தலைவர் ஜனகராஜ் அவர்களுக்கு சால்லை அணிவித்து ஆசி வழங்கினார். இந்தச் செய்தியும்,
புகைப்படமும் அன்றைக்கு அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாகப் பேசப்பட்டது.
விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலுக்காக நேர்காணல் வேண்டும்.
விழுப்புரம் மகாலட்சுமி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் 28.09.2010 அன்று, என்னைக்
காஞ்சி மடத்துக்கு அழைத்துச் சென்றார். பீடாதிபதி அவர்களை அவரது அறையில்
சந்தித்தேன்.
பொதுவாக அங்கு அவரிடம் ஆசி பெற வருபவர்கள் மேல்சட்டையைக்
கழட்டிவிட்டுத் தான் உள்ளே செல்கிறார்கள். ஆனால் எனக்கு எந்தக் கட்டுப்பாடும்
கிடையாது. மேல்சட்டையுடனேயே, அவர் அருகில் நின்று, கேள்விகளைக் கேட்டுப்
பதில்களைப் பதிவு செய்தேன்.
விழுப்புரம் பீமநாயக்கன் தோப்புப் பள்ளியில் தான் பயின்ற அந்த
நாட்களை, தனக்குப் பாடம் நடத்திய தமிழ் வாத்தியாரை, அந்த உச்சிக்குடுமி வைத்த
முதலியாரை, நினைவுகூர்ந்த அவர்,
‘மகா பெரியவர் விழுப்புரம் வந்திருந்தபோது என் தந்தையார் அவர்
சந்தித்தார். அப்போது உன் மகனை வேதம் படிக்க அழைத்து வா என அவர் சொன்னதின் பேரில்
நான் வேதம் படிக்கச் சென்றேன்’ என முதல் ஆவணி அவிட்டத்தின்போது நடந்த மறக்க முடியாத நிகழ்வைப்
பகிர்ந்து கொண்டார்.
ஆமாம். மறைந்த காஞ்சி பீடாதிபதி அவர்களை விழுப்புரமும் என்றும்
மறக்காது..!