எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அவ்வளவாகப்
பரிச்சயமில்லை.
கிழக்குப் பதிப்பகத்தார், அவரது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு
வருகிறார்கள். அந்த வகையில் வெளியான, ‘அபிப்ராய சிந்தாமணி’யினை அண்மையில் வாசித்தேன்.
தலையணை சைஸ். ஆனாலும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஜெயமோகன்
அவர்கள் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதப்பட்ட ‘பகடி’க் கட்டுரைகளின் தொகுப்பு அது. மொத்தம் 108 கட்டுரைகள் இதில்
இடம்பெற்றுள்ளன. அதென்ன நூற்றியெட்டு? ஏதாவது காரணம் இருக்கக் கூடும்!
பெரும்பாலானக் கட்டுரைகளில் குமரி மாவட்ட பேச்சு வழக்குத்தான்.
‘கொஞ்சு தமிழ் குமரி’ என தனியாக ஒரு கட்டுரையும் இருக்கிறது.
கட்டுரைகளின் ஊடாக, எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது
மீரான், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, நாகார்ஜுனன், சுந்தரராமசாமி, சாருநிவேதிதா
ஆகியோர் வந்துச் செல்கின்றனர்.
இரண்டாவது கட்டுரையான, ‘கனவின் கதை’, ‘நான் கடவுள்’ படத்துக்காக ஜெயமோகன், காசியில் தங்கியிருந்த அனுபவத்தின் பதிவு.
சடலங்கள் எரிக்கப்படுவதை இயல்பாகச் சொல்லிச் செல்கிறார் ஆனாலும் நம்மைச் சற்று
மிரள வைக்கிறது. மற்றபடி எல்லாம் பகடிகள்தாம்!
குறிப்பாக, புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு இவர் சொல்லும் சில
ஆலோசனைகள் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.
‘உங்களுக்கு ஒரு பெயர் தேவை. புனைபெயர்! புனைபெயர் இல்லாத கவிஞன்
மல்லிகை சூடாத விலைமகள் போல. புனைபெயரில் என்ன இருக்கிறது என்று என்று எண்ண
வேண்டாம். உங்கள் அனைத்துக் கவிதைகளுக்கும் அர்த்தம் அளிக்கும் முதல் புள்ளி
புனைபெயர்தான் என்பது புதுக்கவிதையின் ஆரம்பப் பாடம்’ என்று தொடங்கும் இக்கட்டுரை,
‘புதுக்கவிதை எழுதுவதனால் என்ன லாபம் என்ற வினா எப்போதாவது வந்து
உங்களை மதுக்கடை நோக்கி உந்தக்கூடும். புதுக்கவிதை எழுதுபவனுக்குப் பணமோ புகழோ
கிடைப்பதில்லையாயினும் தமிழ் மக்களின் கவிதையுணர்வைக் குறை சொல்லவும் தமிழ்க்
கவிதையின் தர வீழ்ச்சியைப்பற்றி வருந்தவும் உரிமை கிடைக்கிறது. இது வாழ்நாள்
முழுக்கச் செல்லுபடியாகக் கூடியதுமாகும். ஆகவே எழுதுக கவிதை!’ என்பதாக முடிகிறது.
மேலும், நீங்களும் பின்நவீனத்துவக் கட்டுரை வனையலாம், நீங்களும்
மேடைப் பேச்சாளாராகலாம், போன்ற கட்டுரைகள் இந்த வகையைச் சேர்ந்தவைதாம்.
மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள் என, 25 பொய்களை
அடுக்கிச் செல்கிறார். ‘பாராட்டி எழுதும் விமரிசனங்கள் எனக்கு மகிழ்ச்சியை
அளிப்பதில்லை. என்னை விமரிசிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நான் ஒருபோதும்
சன்மானத்தை வைத்து பத்திரிகைகளை அளப்பதில்லை. இலக்கிய வம்புகளை நான் படிப்பதே
இல்லை. எனக்கு சாதிமத நம்பிக்கைகள் இல்லை. என் குழந்தைகள் கலப்புத் திருமணம்
செய்துகொண்டால் ஆதரிப்பேன். ஆனால் அவர்களை கட்டாயப் படுத்த மாட்டேன். நான் டிவி
சீரியல்களை பார்ப்பதே இல்லை (அதில் வரும் பெண்களை ஏறிட்டும் பார்க்க மாட்டேன்’ போன்ற பொய்கள் நம்மை இரசிக்க வைக்கின்றன.
72ஆவது கட்டுரையான ‘அச்சுப் பிழை’ எள்ளல் துள்ளல்கள் நிறைந்தது. ‘என்னை மூத்திரம் நனைத்தாய் நீ’ எனும் புகழ்பெற்ற பின்நவீன ஆபாச கவிதை பலநூறு நுண்வாசிப்புகளுக்கு
ஆளானதாம். ஆனால் உண்மையில் அதன் வரி இப்படி இருக்க வேண்டுமாம்: ‘என்னை மாத்திரம்
நனைத்தாய் நீ’
.
‘இப்போதெல்லாம் நான் அச்சுப் பிழைகளுக்குப் பழகிவிட்டேன்’ என்று சொல்லும் ஜெயமோகன்,
‘வரலாறு தமிழுக்கு அளித்த ஒரு தனித்தன்மையாக ஏன் நாம் அச்சுப் பிழைகளை
எடுத்துக் கொள்ளக்கூடாது?’ என்று நக்கலடிக்கிறார்.
ஓரிடத்தில், ‘தமிழர்கள் சாதிகளைப் பற்றியும் பாலுறவுப் பற்றியும் பேச
மாட்டார்கள் ராப்பகலாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்’
என்கிறார்
ஜெயமோகன்.
எனக்கு இது பகடியாகப்
படவில்லை. எதார்த்தமாகவே தெரிகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக