சனி, 17 பிப்ரவரி, 2018

சொந்த ஊர்ப்பற்று...

“உங்க ஊர்ல அப்படி என்ன இருக்கு? முன்பெல்லாம் இப்படி யாராவது கேட்டு விட்டால் எனக்குக் கோபம் வரும். என்னதான் இல்ல, இந்த விழுப்புரத்துல?

சோழர்காலக் கோயில்கள் இருக்கு, இசுலாமிய ஆட்சியின் பள்ளிவாசல் இருக்கு, ஆங்கிலேயர்களின் தேவாலயங்கள் இருக்கு. இவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மையப்புள்ளியா இந்த ஊர் இருக்கு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரயில் சந்திப்பு எங்க ஊர்லதான இருக்கு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காஞ்சி சங்கராச்சாரியார் (பெரியவர்) இங்கதான் பொறந்தாங்க. திருக்குறளார் இங்கதான வாழ்ந்து மறைஞ்சாரு. ஒருநாள் முழுக்க இரமணர் இங்க சுற்றித் திரிஞ்சிருக்காரே. இந்திய விடுதலைப் போராட்டத்திலும், பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் இந்த மண்ணின் பங்கு மகத்தான தல்லவா?

பாரதியின் வெளியீடுகள் விடுதலை வீரர்களை ஊடுருவியதும், கலைஞர் தனது முதல் நாடகத்தை அரங்கேற்றியதும், எழுத்தாளர் ஜெயகாந்தன் அரசியல் அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டதும், எழுத்தாளர் சிவசங்கரிக்கு விசாலப் பார்வை ஏற்பட்டதும் இந்த விழுப்புரத்தில்தானே?

குட்டைப் பாவாடை அணிந்த அந்தச் ‘சட்டைக்காரர்கள் பெருமளவில் உலவியதும் இங்கதான!

இப்படியெல்லாம் பதில் சொல்லத் தொடங்கியதன் விளைவு – தேடல் – ஐந்து ஆண்டுகால உழைப்பு – ஏறக்குறைய 270 பக்கங்களில் “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்நூலாக உருவெடுத்தது!

2011 பிப்ரவரியில் சத்தமில்லாமல், வெளியீட்டு விழா எனும் ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல், என் சொந்த வெளியீடாக, முதல் பிரசவம் நிகழ்ந்தது! அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டாவதுப் பதிப்பையும் பார்த்தது. இது என்னைப் பொறுத்த வரையில் சாதனைதான்.

விழுப்புரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நூல், 2500 வீடுகளில் இன்று வாசம் செய்து கொண்டிருக்கிறது. இன்னமும் கேட்கிறார்கள், கையிருப்பில் இல்லை.

இதற்காக என்னுடன் இணைந்து வடம் பிடித்திழுத்த, என் கண்ணீரை துடைத்து விட்டக் கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் நிறையபேர். அத்தனைபேரும் நன்றிக்கு உரியவர்கள். புழுதிப்படர்ந்த விழுப்புரம் தெருக்களில் என் கால்களைச் சுமந்து நடந்த என் செருப்புகளும்கூட!   

“விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலில் சொல்ல மறந்த விசயங்கள் இன்னும் பல இருக்கலாம். ஆனாலும், சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லிவிட்டதாகவே நினைக்கிறேன்.

வெளியூர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் இப்போதும் வருத்தத்துடன் சொல்வார்கள், “இப்படியான ஒரு செயலுக்காக அந்த ஊர் உங்களை உச்சிமுகர்ந்துக் கொண்டாடியிருக்க வேண்டும்.

அப்படியெல்லாம் நடந்ததா? என் உழைப்புக்கானச் சரியான அங்கீகாரம் இந்த மண்ணில் கிடைத்ததா? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது நடந்திருக்கலாம். இதுபற்றியெல்லாம் நான் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கவில்லை. வாழுங் காலத்தில், சொந்த மண்ணில் எவனுக்குத்தான் அங்கீகாரம் கிடைத்தது?

எனக்குள் மிகப்பெரிய சந்தோசம், நிம்மதி. என்னை ஈன்றெடுத்த விழுப்புரம்  மண்ணுக்கு உரிய மரியாதையை நான் செய்துவிட்டேன். இன்னமும் செய்து கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, உங்களைப் போன்றோரின் உதவிகளுடன், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எனதுப் பயணம்..!

அன்புடன், விழுப்புரத்தார் என்கிற கோ.செங்குட்டுவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக