விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அப்போதுதான், சர்வதேச நகரமாக உருவாகிக்
கொண்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்ட தமிழக அரங்கிற்கான அடிக்கல்
நாட்டுவிழா, 1973ஆம் ஆண்டு, அக்டோபரில் நடந்தது.
விழாவுக்குத் தலைமை அமைச்சர் நாவலர். இதில் பங்கேற்ற, முதல்வர்
கலைஞர், தமிழக அரங்குக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதன் சுருக்கம் வருமாறு:
‘விழாத் தலைவர் நம் நாவலர் அவர்கள் புறநானூறு பாடிய பெரும்புலவன்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற
கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து ஓதியிருக்கிறான் என்று
குறிப்பிட்டார்கள்.
அவர் அப்படிக்
குறிப்பிட்டபோது ஓர் இளம் நண்பர் வேகமாக என் பின்னே ஓடிவந்து ஒருவேளை அந்தப்
புறநானூற்றுக் கவிஞன் இந்தக் கிராமத்திலேதான் பிறந்திருப்பானோ என்று என்னிடத்தில்
கேட்டார்.
அவன் இந்தக்
கிராமத்தில் பிறந்தானோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாதும் ஊரே யாவரும்
கேளிர் என்ற அந்த முழக்கம் தமிழ்நாட்டிலே இருந்து உலகுக்கு அறிவிக்கப்பட்டது
என்பது புறநானூற்றுக் காலத்திலே மாத்திரம் அல்ல, அதற்குப் பிறகு பல்லாண்டு காலம்
கடந்தபிறகு இப்போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறிவிப்பதும் தமிழ்நாட்டிலே
இருந்துதான் என்று எண்ணுகிற நேரத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு பல்வேறு
உணர்ச்சிகளுக்கு, பல்வேறு உன்னதமான நிலைகளுக்கு வழிகாட்டுகிற நாடாகும்.
ஆரோவில் என்றால்
பிரெஞ்சு மொழியில் புதிய நகர் அல்லது புதிய வாழ்வு உதயம் என்று பொருள். பிரெஞ்சு
மொழியில் சொல்லிப் பார்த்தாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தையும்
தமிழையும் இணைத்துச் சொல்லிப் பார்த்தாலும் ஒரு வகையிலே இது பொருத்தமாக
இருக்கிறது.
...உள்ளபடியே இது ஒரு
மகத்தான சாதனையாகும். இந்த மகத்தான சாதனையினுடைய விளைவை உடனடியாக நாம் காணமுடியுமா
என்றால் – நாளைக்கோ, நாளைய மறுநாளைக்கோ கண்டுவிட முடியுமா என்றால்- இயலாது.
ஆனால் இதற்கு ஒரு
பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் இன்றைக்கே நிச்சயித்துக்கூற முடியும்.
அந்த எதிர்காலத்தை இப்போதே அமைத்துக் காட்ட இயலாது.
...ஒரு இணைப்பு – அதாவது
ஒரு சங்கமம் - மாநிலத்துக்கு மாநிலம் அல்ல
– நாட்டுக்கு நாடு – உலகத்திலே இருக்கிற பல்வேறு நாடுகளுக்கு இடையே இங்கே
உருவாகிறது.
நாங்கள் உலக
அளவிலேகூட இணைப்பை விரும்புகிறவர்கள். இணையாமல் இருக்கிற தன்மையை எந்த நேரத்திலும்
நாங்கள் விரும்பாதவர்கள். நாங்கள் என்றைக்கும் உலக அரங்கத்தில் இணைப்பை
விரும்புகிறவர்கள்.
இந்த ஆரோவில் நகரம்
நல்ல முறையிலே வளர்வதைத் தமிழ்நாடு அரசு தனக்குற்ற ஒரு இலட்சியமாகக் கொண்டு
ஓத்துழைப்பை எந்த அளவுக்குத் தருமோ அந்த அளவுக்குத் தரும்.’
இவ்வாறு கலைஞர்
பேசினார்.
ஆரோவில் இன்று வளர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகவும்
மாறியிருக்கிறது...
நினைவுகளுக்காக...
விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக