வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கரி என்ஜின் நினைவுகள்...

நமக்குத் தொடக்கக் கல்வி எல்லாம், விழுப்புரம் ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த நவாப்தோப்பு  தொடக்கப் பள்ளிதான்.

அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, நம் மாலைநேர பொழுதுபோக்கு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல் தான்.

மாலைநேர தென்றல் காற்று நம் உடலைத் தழுவிச் செல்லும்.
அதே நேரம்
காற்றில் மிதந்து வரும் கரித்துகள்கள் நம் ஆடையை கழுவிச் செல்லும்.

ஆமாம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கரி என்ஜின்கள் செய்யும் குறும்புகள் இவை.

கூடவே எனும் அதன் ஹாரன் சத்தமும், ‘சிக்கு புக்கு'  என என்ஜினின் இரைச்சலும் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அணையா அடுப்பு இங்குதான் முதன் முதலில் பார்த்தோம். கனன்றுக் கொண்டு இருக்கும் அதன் வாய்க்குள் சவுலில் எப்போதும் கரியை எடுத்துக் கட்டிக் கொண்டே இருப்பார்கள்.

கீழ்ப்பெரும்பாக்கம் கரி மேடு. அந்தப் பக்கம் போனாலே, காலில் கரித்துகளுடன் தான் வீடு திரும்ப வேண்டும்.

இப்போதெல்லாம் ரயிலில் ஏறியதும் ஜன்னலோர சீட்டுக்கு முண்டியடிக்கிறோமே.. அப்போது?

ஜன்னலோரமா? வேண்டவே வேண்டாம்.
என்ஜினில் இருந்து வெளியேறும் கரித் துகள், கண்ணுக்குள் சென்று உறுத்துமே, அந்த அவஸ்தை இன்னும் மறக்க முடியல.

இது எல்லாம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்காத, நாம் தொலைத்து விட்ட அனுபவங்கள்.




கடந்த வாரம் சென்னை சென்றிருந்த போது, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்,

அந்தக் கரி என்ஜினைப் பார்த்தபோது எழுந்த நினைவலைகள்..!

புதன், 29 ஆகஸ்ட், 2018

சென்னை சென்ட்ரல் ரயில் மியூசியம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பில் அமைந்துள்ளது இந்தக் கண்ணாடியால் ஆன குளிரூட்டப்பட்ட அறை!

வெளியில் இருந்துப் பார்க்கும் போது, அலுவலகம் போன்ற ஒரு மிரட்சியை ஏற்படுத்தும்.

நானும் அப்படித்தான் பார்த்தேன். ஆனால் அந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகைதான் என்னையும் என் மகனையும் உள்ளே செல்ல உந்தியது.

'ரயில் மியூசியம்'

கண்ணாடிக் கதவைத் திறந்து தயக்கத்துடன் அடியெடுத்து வைத்தோம்.

உள்ளே பெண்மணி ஒருவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தார்.
'பார்க்கலாமா?'
' உம். பாருங்க' . அனுமதி கிடைத்துவிட்டது.

சிறியதும் பெரியதும் ஆன  ரயில் பொம்மைகள்.

குழந்தைகள் பார்க்கலாம். சித்தார்த்தன் ரசித்தான்.



'புகைப்படம் எடுக்கலாமா?' மீண்டும் கேள்வி.
கேட்டுக் கொள்வது நல்லது தானே?

'தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்'.
மீண்டும் அனுமதி.

சித்தார்த்தனுக்குச் சொல்லவா வேண்டும்? வளைத்து வளைத்து படம் பிடித்தான். என்னையும் நிற்க வைத்து!



இந்த மியூசியம் ஐஆர்டிசி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது போதாது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்னும் விரிவாக்கப்பட்ட மியூசியம் தேவை.

ரயில் நிலையத்துக்கு உள்ளே இருக்கின்றனவே
நூற்றாண்டுக்கு முந்திய, பெரிய அளவிலான, கருப்பு வெள்ளைப்  புகைப்படங்கள்.

அருகில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் வளாகத்தில் அமைதியாக நின்று கொண்டு இருக்கிறதே
அந்தக் கால கரி என்ஜின்…

இவற்றினையும் உள்ளடக்கிய, விரிவுப்படுத்தப்பட்ட மியூசியம் அவசியம் தேவைதான்.

சரி, இருக்கின்ற இந்த சின்ன இடத்தையும் எத்தனைப் பேர் பார்த்திருத்கிறார்களோ யாம் அறியோம்!



ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

சென்னை நண்பர்கள் நலமன்றத்தில் புனிதவதிக்குப் பாராட்டு

சென்னை நண்பர்கள் நலமன்றத்தின் 33ஆவது ஆண்டு விழா
புரசைவாக்கம், தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் இன்று (26.08.2018) நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு.

சிறப்பு விருந்தினர், பசுமைத் தாயகம் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலும், வந்திருந்த மாணவர்களில் முதலிடத்தையும் பெற்ற என் மகள் செ.புனிதவதி, இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார்.


மகிழ்ச்சியான தருணம்!

விழாவில் முக்கிய விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்ற திரு. கி.தனவேல் ஐ.ஏ.எஸ். அவர்கள்,

முன்னதாக என் மகளிடம் பேசிய போது, வாழ்த்துக்கள் தெரிவித்த அவர்,
 பி.காம். படிப்புடன் யு.பி.எஸ்.சி. தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அவற்றில் நீங்கள் தேர்ச்சி பெறுவதற்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்  எனக் கேட்டுக் கொண்டார்.


சிறப்பு வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அனுபவமிக்க வார்த்தைகள்.
கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்!



புதன், 22 ஆகஸ்ட், 2018

விழுப்புரத்தில் தெருக்கூத்து...


வி.மருதூர்.

விழுப்புரம் நகரத்தின் ஒரு பகுதி. ஆனால், கிராமியத் தன்மையை இழக்காத பகுதி!


இன்றும் கூட இந்தப் பகுதியில் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

விடிய விடிய நடக்கும் தெருக்கூத்தினை, ஏராளமான ஆண்களும் பெண்களும் அமர்ந்து ரசிக்கின்றனர்.


இன்று காலை, அந்த வழியாக செல்லும் போது தான் கவனித்தேன், பதினெட்டாம் போர் காட்சி, அரங்கேறிக் கொண்டு இருந்தது.

நடிப்பு: முத்தாண்டிக்குப்பம் கலைஞர்கள்.

கூத்துக் கலைஞர்களை மட்டுமல்ல, அவர்களோடு மற்றும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.



மகிழ்ச்சியாக இருந்தது!

இதேபோல், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் கூட ஆண்டு தோறும் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது.

நம் மண்ணின் மணம் மாறாமல் அப்படியே வைத்திருக்க இப்போதும் போராடும் தெருக்கூத்துக் கலைக்கும், அதன் கலைஞர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகள்..!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

அம்மா...



அம்மா…

உன் வாழ்நாளின் பெரும்பகுதி
விறகு அடுப்புடன் போராடினாய்!

உன் மூச்சுக் காற்றின் முக்கால்வாசி
அடுப்பூதும் ஊதாங்கோலில் கரைந்தது!

ஐந்து பிள்ளைகள்
அழகாய் ஈன்றெடுத்தாய்.

அதில் கடைக்குட்டியான என் மீதுதான்
உனக்குப் பாசம் அதிகம்.

நள்ளிரவைக் கடந்து நான்
வீட்டுக்கு வந்தாலும்
விழித்திருந்துச் சோறிடுவாய்.

பக்கத்தில் இருக்கும்
பேரங்கியூரில் உன் தாய் வீடு.
ஒரு நாள் கூட தங்கியதில்லை.
ஓடி வந்து விடுவாய் எங்களுக்காக...

உன்னைவிட்டு நான்
பிரிந்ததில்லை
என்னைவிட்டு
ஏன் பிரிந்தாய் அம்மா?

நீ மறைந்து நான்காண்டுகளாம்…
இல்லை இல்லை இன்றும் நீ
எங்களுடன்தான்…



திங்கள், 20 ஆகஸ்ட், 2018

விழுப்புரம் கால்பந்தாட்ட போட்டி

தண்டபாணியார் கால்பந்து அகாடமி.

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில், கடந்த பதினாறு ஆண்டுகளாக இயங்கி வரும் அமைப்பு.

இதன் சார்பிலான, சுதந்திர தின விழா கால்பந்தாட்டப் போட்டி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பாகவே நடந்தது.

இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (19.08.2018) மாலை நடந்தது.

விழுப்புரம் டிஎஸ்பி சங்கர், இந்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் ஆகியோருடன் இவ்விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

அரசியல், வரலாறு, இலக்கியம் சார்ந்த மேடைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தது வரும் நமக்கு, இந்த விளையாட்டு மேடை அனுபவம் புதிதும் முதலாவதுமாகும்.

ஆனாலும், விளையாட்டில் முத்திரைப் பதித்த விழுப்புரம் ரயில்வே இன்ஸ்டியூட் மைதானம் மற்றும் நகராட்சிப் பள்ளியில் மைதானம் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்தும்,

இந்த மைதானங்களில் விளையாடி அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வெற்றி பெற்ற வீரர்கள் குறித்தும் விரிவாகப் பேசினேன்.

விழுப்புரத்தின் இந்த விளையாட்டு வரலாறு மீண்டும் திரும்புகிறது.

தண்டபாணியார் கால்பந்து அகாடமி இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சிதான்.

உம். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கூட, தண்டபாணியார் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

அந்த அணியின் வீரர்களுக்கு வாழ்த்துகள், வணக்கங்கள்..!


புதன், 15 ஆகஸ்ட், 2018

விழுப்புரம் லோகோ ஷெட் அலுவலகம் இடிப்பு

விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக இருந்தது.

பிரம்மாண்டமான இரண்டு அரச மரங்களுக்கு இ
டையில் அமைந்திருந்தது, அந்தக் கட்டடம்.

லோக்கோ ஷெட் பணியாளர்களுக்கான அலுவலகம் இங்கிருந்தக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது.

அந்தப் பணிமனை தன் இருப்பை இழந்ததும், இந்தக் கட்டடமும் தன் அடையாளத்தை இழந்தது!

ஆனாலும், வடக்கு இரயில்வே காலனியின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நின்றிருந்தது.

காலனியில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே!

இதற்கு, இந்தக் கட்டடமும் தப்பவில்லை. முழுவதுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.

நெடிதுயர்ந்த இரண்டு அரச மரங்கள் காற்றில் சலசலத்துக் கொண்டு இருக்கின்றன.

அதில் ஒரு மரத்தின் அடியில் இப்போதும் தலையில்லாமல் அமர்ந்து இருக்கிறார் புத்தர்!

இடிக்கப்பட்டு இருப்பது பழைய கட்டடம் மட்டும் அல்ல,

காலனியில் இருந்து, கீழ்ப்பெரும்பாக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறதே, அந்த நீண்ட மதிற் சுவர், அதன் ஒரு பகுதியும் கூட இடிக்கப்பட்டு உள்ளது!
எஞ்சிய மதிலும் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை..!


(விழுப்புரம் கோ.செங்குட்டுவன்)