திங்கள், 31 டிசம்பர், 2018

சனி, 29 டிசம்பர், 2018

விழுப்புரத்தில் களைகட்டும் மீன் விற்பனை



மீனகாலை நான்கு மணி. விழுப்புரம் எம்.ஜி.ரோடு. நிற்பதற்கு இடமில்லை. அவ்வளவு கூட்டம்!

பரபரக்கிறது மீன் வியாபாரம்.

ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து வாங்கிப் போகிறார்கள்.


வெளியில் வாங்குவதை விட இங்கு வாங்கினால், குறைந்தபட்சம் ஐம்பது அறுபது ரூபாய் கம்மி.

கன்னியாகுமரியில் இருந்து மட்டுமல்ல ஆந்திரா, கேரளாவில் இருந்தும் மீன்கள் விழுப்புரம் கொண்டு வரப்படுகின்றன.


'இங்கிருந்து செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான ஊர்களுக்கு மீன்கள் போவதாக'ச் சொல்லும் நண்பர் குமரன்  Kumaran Villupuram Kakuppam,

'மரக்காணம், கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கும் போவதாகவும்'  சொல்கிறார்.

வியப்பாகத்தான் இருக்கிறது!
விழுப்புரம் மிகப்பெரிய மீன் சந்தையாகவும் மாறியுள்ளது.

மகிழ்ச்சி!

அதிகாலை மீன் விற்பவர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது!

இவர்களால், கடைத் தெருவைச் சேர்ந்த மற்ற வணிகர்களுக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

விழுப்புரம் மிகப்பெரிய வணிகத் தளம். மீன் விற்பனையிலும்.


இதைத் தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் தான் முயற்சி எடுக்க வேண்டும்..!

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

அலையும் அலைப்பேசியும்

விபத்தில் சிக்கியவர்களுக்கு விழுப்புரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் புதுச்சேரிக்குக் கொண்டு செல்வார்கள்.

நேற்று நடந்த ஒருவிபத்தில், புதுச்சேரியில் முதலுதவி கொடுத்து, பிறகு விழுப்புரம் கொண்டு வரப்பட்டது.

என்ன விபத்து? யாருக்கு விபத்து? வாங்கப் பாக்கலாம்!

“அரையாண்டுத்தேர்வு விடுமுறைவிட்டு நாளாச்சுது. அருகிலுள்ள புதுவைக்காவது அழைத்துப் போயேன் பா“ மகன் சித்தார்த்தனின் ஓயாத வேண்டுகோள்.

நேற்று காலை, புதுவைக்கு ரயிலில் பயணம். அங்கிருந்து கடற்கரைக்கு ஜாலியாக ஒருநடை. தொடக்கத்திலேயே நின்றிருந்த, கவர்னர் டுயூப்ளேவை தரிசித்துவிட்டு, கடற்கரையில் காலடி எடுத்து வைத்தோம்.



பிறகு, கிழக்கில் நடைபோட்டோம். அதோ, அந்தப் பழைய பாலத்தின் அருகில் கடல் அலை கரையைத் தொட்டுச் சொல்கிறது. சரி, அங்கேயே போவோம்.

காலை நேரம் என்பதால் அதிகக் கூட்டம் இல்லை. மீனவர்கள் படகுகளையும் வலைகளையும் சரி செய்து கொண்டிருந்தார்கள். சுனாமி நினைவு மணற் சிற்பம் எங்களை வேதனையுடன் பார்த்தது.

துருப்பிடித்து, உருக்குலைந்து நின்றிருந்த அந்தப் பாலம் தனது முந்தைய வரலாற்றுக்கு ஏங்குவதுபோல் தெரிந்தது.


சித்தார்த்தனுக்குக் கொண்டாட்டம். ஆசைத் தீரக்குளித்தான். எனக்கும் மகிழ்ச்சியே.




ஒருமணி நேரத்தையும் கடந்தது. சரி புறப்படலாம் என்றபோதுதான் அந்தப் பேரலை, என் உயரத்துக்கானது வந்தது.

அருகில் நின்றிருந்தப் பாறைகளைப் பிடித்துத் தப்பித்தோம். அப்படியும் பாறைகளில் உரசியதில் சித்தார்த்தனின் கால்களில் பயங்கர சிராய்ப்பு. இரத்தம். பொறுத்துக் கொண்டான்.

எப்படியோ அங்கிருந்து மீண்டு வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்!

கரைக்கு வந்தவுடன் அலைப்பேசியை எடுத்தால் சுவிட்ச் ஆப். எங்களுடன் சேர்ந்து அதுவும் நனைந்திருந்தது. மனசுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.

எப்படியோ, காந்தி வீதி, நேருவீதி என்று அங்குமிங்கும் சுற்றி, அண்ணா சாலையை அடைந்தோம்.

ஒரு செல்போன் சரி பார்க்கும் கடைக்குள் கொண்டு சென்றவுடன், போனை கழட்டிப் பார்த்த ஊழியர் சொன்னார், “இன்னும் சிலமணி நேரம் தாமதித்து இருந்தால் அவ்வளவுதான் போர்டு போயிருக்கும்.“

எப்படியோ சரியான நேரத்துக் கொண்டு வந்துவிட்டோம். ஒரு மணி நேரம் பழுதுப் பார்க்கும் பணி. பிறகு சரி செய்துக் கொடுத்தார்கள். மனசுக்குள் ஒரு நிம்மதி.

ஊருக்குத் திரும்புவதற்கு மட்டும் காசு எடுத்துக் கொண்டு மீதிப்பணம் கட்டணமாகியது.

மீண்டும் ரயில் நிலையத்தை அடைந்து, ரயிலில் உட்காந்தவுடன் வீட்டுக்குப் பேசலாமே, போனை எடுத்தால், டிஸ்பிளே கலர் கலராகத் தெரிகிறது. அவ்வளவுதான் மனசுக்குள் மீண்டும் பதட்டம்.

விழுப்புரம் வந்து சேர்ந்தவுடன் நண்பர் அகிலனைச் சந்தித்தேன். அவரது செல்போன் கடையில் மீண்டும் சிகிச்சை நடந்தது. இறுதியில் டிஸ்பிளே போய்விட்டது என்று தகவல் வந்தது. நம் அளவுக்கு மீறிய தொகையுடன் டிஸ்பிளே மாற்றப்பட்டது.

ஏறக்குறைய காலை 10 மணிக்குத் தொடங்கிய பதட்டம், இரவு 8 மணிக்கு முடிவுக்கு வந்தது. புதுச்சேரியிலும் விழுப்புரத்திலும் எங்களிடம் சொன்னது, “கடல் தண்ணீரில் சிக்கி மீண்டது உங்க போனாகத்தான் இருக்கும்!”.

ஆமாம். ஆன்ட்ராய்டு போனுக்கு கடல் அலை, உப்புத் தண்ணீர் கடுமையான எதிரி. பலருக்கும் இது தெரிந்தும் இருக்கலாம்.

எனக்குத் தெரியாது. என் அனுபவத்தில் உணர்ந்துக் கொண்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே...

திங்கள், 24 டிசம்பர், 2018

சுனாமி: 14ஆம் ஆண்டு நினைவு தினம்...

சுனாமி எனும் ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகிறது.

அதன் வலியும் வடுக்களும் விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராமங்களில் இன்றும் காண்கிறோம்.

ஆழிப்பேரலைக் கோரத்தாண்டவம் ஆடிய சில மணி நேரங்களில் நாம் அங்கிருந்தோம்.

கூனிமேடுக் குப்பம் இங்குதான் அதிக பாதிப்பு என்றார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை வரை கடல் தண்ணீர். ஏறக்குறைய 300 முதல் 500 மீட்டர் வரை தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியிருக்கிறது கடல்!

கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் படகுகள் எல்லாம் ஊருக்குள் வந்து விட்டன.

“தென்னை மரம் உயரத்துக்கு அலை வந்தது” பெரியவர் ஒருவர் சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது.

ஏராளமான வீடுகள் காணாமல் போயிருந்தன

மக்கள் ... கூனிமேடுக்குப்பத்தில் மட்டும் 22 பேர் பலியாகி இருந்தனர். இதேபோல் தந்திராயன் குப்பத்திலும் 22 பேர். முதலியார் குப்பத்தில் 18 பேர். அனிச்சங் குப்பத்தில் 5 பேர்.

இப்படியாக விழுப்புரம் மாவட்டக் கடலோரக் குப்பங்களில் 74 பேரை சுனாமி பலி கொண்டதாகச் சொல்கிறது, புள்ளி விவரம் ஒன்று.

எங்கெங்கும் சடலங்கள்... மரண ஓலங்கள்... இடிந்துப் போய் உட்கார்ந்துவிட்டார் மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன்.

பல இடங்களில் அதிகாரிகளுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கடும் எதிர்ப்பு.

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை, கடல் அரிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுதான்.

வழக்கமாக திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டு இருந்தனவே தவிர, எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.


இதன் கோப ஆவேசத்தை நாங்கள் நேரில் உணர முடிந்தது. சுற்றிவளைப்பு, சிறைபிடிப்பு, ஓட்டமெடுப்பு என்றெல்லாம் அடுத்தநாள் செய்திகளில் கலந்திருந்தன.

13 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். வலிகள் மறைந்திருக்கலாம். வடுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராம மக்களின், மீனவர்களின் கோரிக்கையும் அப்படியே தான் இருக்கின்றன...

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் மறைந்தார்...



வானத்தை வசப்படுத்திய

இந்த மகா கலைஞனை

புற்றுநோய் வென்று விட்டது...

எங்களின் முன்னத்தி ஏரே
சென்று வாருங்கள்...

எமது வீர வணக்கம்...

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

விழுப்புரத்தில் மாரத்தான்

மிகச் சிறப்பாகவே நடந்தது, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை, விழுப்புரத்தில் இன்று (16.12.2018) நடத்திய, மாரத்தான்.

அதிகாலை 6 மணிக்கெல்லாம் பெருந்திட்ட வளாக மைதானம் நிரம்பி வழிந்தது.


சிறுவர் முதல் பெரியவர் வரை, 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

உடற்கல்வி இயக்குனர் திரு. அவர்கள் மிகவும் நேர்த்தியாக மாரத்தான் வீரர்களை ஒருங்கிணைத்தார்.

அடடா… வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளாய் மாரத்தான் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.

உடன், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் நம் தோழர்களும்.

ஓட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள், சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.


அருங்காட்சியகம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்தார். நன்றிங்க ஐயா…


விழுப்புரத்தின் நீங்கா நினைவுகளில் ஒன்றாகியுள்ளது இன்றைய மாரத்தான்.

மகிழ்ச்சி தான்.

இதற்காக கடுமையான உழைப்பினைச் செலுத்திய, விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை தலைவர் அ.அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.


இவர்களை நாம் வாழ்த்துவோம்…


புகைப்படம்: கிருஷ்ணா

சனி, 8 டிசம்பர், 2018

செ.கொத்தமங்கலம்: மக்களை நோக்கி வரலாறு...

“இதையெல்லாம் பல வருசத்துக்கு முன்பே கண்டுபிடித்து விட்டோம். ஆவணப்படுத்தி விட்டோம்” என்பார்கள்.

உண்மை தான்.  மறுக்க இயலாது. வரலாறு ஆவணங்களில் உறங்கிக் கொண்டிருக்கும்!
ஆனால், ஊர் மக்களுக்கு?

அவங்க ஊரில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து அவர்களுக்கே தெரியாது!

விழுப்புரத்தை அடுத்த செ.கொத்தமங்கலம் கள ஆய்வின்போது இந்த நிலவரத்தை மாற்ற நாம் முனைந்தோம்.

கூடுமானவரை அப்பகுதி இளைஞர்களை நம்முடன் அழைத்துச் சென்றோம்.

இது மூத்த தேவி, இது சதிக்கல் என்றெல்லாம் அவர்களுக்கு விளக்கினோம். இவை, அந்தக் கிராமத்தின் பெயரில் blog ஏற்படுத்தி இருந்த, விஜயராமன் போன்றவர்களுக்கு புதிய தகவலாகவே இருந்தது. அறிந்து மகிழ்ந்தார்கள்.

அடுத்தக் கட்டமாக, செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். தலைமை ஆசிரியர் திரு.எம்.தண்டபாணி அவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வமாகவே இருந்தனர்.


சில நிமிட இடைவெளியில், மாணவ மாணவியரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய நாம், செ.கொத்தமங்கலம் கிராமத்தின் தொன்மை குறித்தும் அப்பகுதியில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்தும் விரிவாகவே பேசினோம்.



வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்து மாணவ மாணவியர் அக மகிழ்ந்தார்கள்.

நாம் பேசி முடித்தவுடன் வெளியே ஓடிவந்த மாணவர்கள் சிலர், அங்கிருந்த வரலாற்றுச் சின்னங்களை ஆர்வத்துடன் சுற்றி வந்துப் பார்த்தனர்.

நமக்கும் மகிழ்ச்சி!


இப்போது பத்திரிகைகளிலும் கூட செ.கொத்தமங்கலத்தின் தொன்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஊடகங்களிலும் செய்திகள்...



வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது என்பார்களே, அது இதுதான்.

எத்தனைத் தடைக்கற்கள் வந்தாலும், மக்களிடம் வரலாற்றைக் கொண்டு செல்லும் நம் பணி, மக்கள் ஒத்துழைப்புடன் தொடரும்…

ஏனெனில் வரலாறு,  மக்களுக்குச் சொந்தமானது.

புகைப்படங்கள்: கிருஷ்ணா...

புதன், 5 டிசம்பர், 2018

விழுப்புரம் மாவட்ட ஊர்கள் - ஆங்கிலத்தில்

ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!

இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருக்கிறோம்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அப்போது, “ஊர்களின் பெயர்கள் போகிறப் போக்கில் வைக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.” எனும் வேதனையை வெளிப்படுத்திய நான்,

இதற்கு உதாரணமாக, நடிகர் ஜனகராஜ், அண்ணாமலை படத்தில், நேசமணி பொன்னையா என்பதை நாசமாய் நீ போனீயா என்று படிப்பாரே, அதைச் சுட்டிக் காட்டினேன்.

இதனால், கூட்ட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது.

இந்த நகைச்சுவையில் பொதிந்து கிடக்கும் வருத்தத்தினை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொண்டார்.

ஊர்ப் பெயர்களுக்குப் பின்னால் உள்ள வரலாறு முக்கியம் என்பதை உணர்த்திய மாவட்ட ஆட்சியர், ஆங்கிலத்தில் பெயர் மாற்றும் போது வரலாற்றையும் கவனத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் குழுவினருடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வருவாய் அலுவலரும் கலந்துப் பேசினர்.

சம்பிரதாயத்துக்கு என்று இல்லாமல், உள்ளபடியே சிறப்பான ஆய்வுக் கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது.

மகிழ்ச்சி... அடுத்தடுத்தக் கூட்டங்கள் இருக்கின்றன.