சனி, 29 டிசம்பர், 2018

அலையும் அலைப்பேசியும்

விபத்தில் சிக்கியவர்களுக்கு விழுப்புரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் புதுச்சேரிக்குக் கொண்டு செல்வார்கள்.

நேற்று நடந்த ஒருவிபத்தில், புதுச்சேரியில் முதலுதவி கொடுத்து, பிறகு விழுப்புரம் கொண்டு வரப்பட்டது.

என்ன விபத்து? யாருக்கு விபத்து? வாங்கப் பாக்கலாம்!

“அரையாண்டுத்தேர்வு விடுமுறைவிட்டு நாளாச்சுது. அருகிலுள்ள புதுவைக்காவது அழைத்துப் போயேன் பா“ மகன் சித்தார்த்தனின் ஓயாத வேண்டுகோள்.

நேற்று காலை, புதுவைக்கு ரயிலில் பயணம். அங்கிருந்து கடற்கரைக்கு ஜாலியாக ஒருநடை. தொடக்கத்திலேயே நின்றிருந்த, கவர்னர் டுயூப்ளேவை தரிசித்துவிட்டு, கடற்கரையில் காலடி எடுத்து வைத்தோம்.



பிறகு, கிழக்கில் நடைபோட்டோம். அதோ, அந்தப் பழைய பாலத்தின் அருகில் கடல் அலை கரையைத் தொட்டுச் சொல்கிறது. சரி, அங்கேயே போவோம்.

காலை நேரம் என்பதால் அதிகக் கூட்டம் இல்லை. மீனவர்கள் படகுகளையும் வலைகளையும் சரி செய்து கொண்டிருந்தார்கள். சுனாமி நினைவு மணற் சிற்பம் எங்களை வேதனையுடன் பார்த்தது.

துருப்பிடித்து, உருக்குலைந்து நின்றிருந்த அந்தப் பாலம் தனது முந்தைய வரலாற்றுக்கு ஏங்குவதுபோல் தெரிந்தது.


சித்தார்த்தனுக்குக் கொண்டாட்டம். ஆசைத் தீரக்குளித்தான். எனக்கும் மகிழ்ச்சியே.




ஒருமணி நேரத்தையும் கடந்தது. சரி புறப்படலாம் என்றபோதுதான் அந்தப் பேரலை, என் உயரத்துக்கானது வந்தது.

அருகில் நின்றிருந்தப் பாறைகளைப் பிடித்துத் தப்பித்தோம். அப்படியும் பாறைகளில் உரசியதில் சித்தார்த்தனின் கால்களில் பயங்கர சிராய்ப்பு. இரத்தம். பொறுத்துக் கொண்டான்.

எப்படியோ அங்கிருந்து மீண்டு வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்!

கரைக்கு வந்தவுடன் அலைப்பேசியை எடுத்தால் சுவிட்ச் ஆப். எங்களுடன் சேர்ந்து அதுவும் நனைந்திருந்தது. மனசுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.

எப்படியோ, காந்தி வீதி, நேருவீதி என்று அங்குமிங்கும் சுற்றி, அண்ணா சாலையை அடைந்தோம்.

ஒரு செல்போன் சரி பார்க்கும் கடைக்குள் கொண்டு சென்றவுடன், போனை கழட்டிப் பார்த்த ஊழியர் சொன்னார், “இன்னும் சிலமணி நேரம் தாமதித்து இருந்தால் அவ்வளவுதான் போர்டு போயிருக்கும்.“

எப்படியோ சரியான நேரத்துக் கொண்டு வந்துவிட்டோம். ஒரு மணி நேரம் பழுதுப் பார்க்கும் பணி. பிறகு சரி செய்துக் கொடுத்தார்கள். மனசுக்குள் ஒரு நிம்மதி.

ஊருக்குத் திரும்புவதற்கு மட்டும் காசு எடுத்துக் கொண்டு மீதிப்பணம் கட்டணமாகியது.

மீண்டும் ரயில் நிலையத்தை அடைந்து, ரயிலில் உட்காந்தவுடன் வீட்டுக்குப் பேசலாமே, போனை எடுத்தால், டிஸ்பிளே கலர் கலராகத் தெரிகிறது. அவ்வளவுதான் மனசுக்குள் மீண்டும் பதட்டம்.

விழுப்புரம் வந்து சேர்ந்தவுடன் நண்பர் அகிலனைச் சந்தித்தேன். அவரது செல்போன் கடையில் மீண்டும் சிகிச்சை நடந்தது. இறுதியில் டிஸ்பிளே போய்விட்டது என்று தகவல் வந்தது. நம் அளவுக்கு மீறிய தொகையுடன் டிஸ்பிளே மாற்றப்பட்டது.

ஏறக்குறைய காலை 10 மணிக்குத் தொடங்கிய பதட்டம், இரவு 8 மணிக்கு முடிவுக்கு வந்தது. புதுச்சேரியிலும் விழுப்புரத்திலும் எங்களிடம் சொன்னது, “கடல் தண்ணீரில் சிக்கி மீண்டது உங்க போனாகத்தான் இருக்கும்!”.

ஆமாம். ஆன்ட்ராய்டு போனுக்கு கடல் அலை, உப்புத் தண்ணீர் கடுமையான எதிரி. பலருக்கும் இது தெரிந்தும் இருக்கலாம்.

எனக்குத் தெரியாது. என் அனுபவத்தில் உணர்ந்துக் கொண்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக