திங்கள், 24 டிசம்பர், 2018

சுனாமி: 14ஆம் ஆண்டு நினைவு தினம்...

சுனாமி எனும் ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகிறது.

அதன் வலியும் வடுக்களும் விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராமங்களில் இன்றும் காண்கிறோம்.

ஆழிப்பேரலைக் கோரத்தாண்டவம் ஆடிய சில மணி நேரங்களில் நாம் அங்கிருந்தோம்.

கூனிமேடுக் குப்பம் இங்குதான் அதிக பாதிப்பு என்றார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை வரை கடல் தண்ணீர். ஏறக்குறைய 300 முதல் 500 மீட்டர் வரை தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியிருக்கிறது கடல்!

கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் படகுகள் எல்லாம் ஊருக்குள் வந்து விட்டன.

“தென்னை மரம் உயரத்துக்கு அலை வந்தது” பெரியவர் ஒருவர் சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது.

ஏராளமான வீடுகள் காணாமல் போயிருந்தன

மக்கள் ... கூனிமேடுக்குப்பத்தில் மட்டும் 22 பேர் பலியாகி இருந்தனர். இதேபோல் தந்திராயன் குப்பத்திலும் 22 பேர். முதலியார் குப்பத்தில் 18 பேர். அனிச்சங் குப்பத்தில் 5 பேர்.

இப்படியாக விழுப்புரம் மாவட்டக் கடலோரக் குப்பங்களில் 74 பேரை சுனாமி பலி கொண்டதாகச் சொல்கிறது, புள்ளி விவரம் ஒன்று.

எங்கெங்கும் சடலங்கள்... மரண ஓலங்கள்... இடிந்துப் போய் உட்கார்ந்துவிட்டார் மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன்.

பல இடங்களில் அதிகாரிகளுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கடும் எதிர்ப்பு.

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை, கடல் அரிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுதான்.

வழக்கமாக திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டு இருந்தனவே தவிர, எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.


இதன் கோப ஆவேசத்தை நாங்கள் நேரில் உணர முடிந்தது. சுற்றிவளைப்பு, சிறைபிடிப்பு, ஓட்டமெடுப்பு என்றெல்லாம் அடுத்தநாள் செய்திகளில் கலந்திருந்தன.

13 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். வலிகள் மறைந்திருக்கலாம். வடுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

விழுப்புரம் மாவட்டக் கடலோரக் கிராம மக்களின், மீனவர்களின் கோரிக்கையும் அப்படியே தான் இருக்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக