வியாழன், 14 மே, 2020

விழுப்புரம் நவாப் தோப்பு தொடக்கப்பள்ளி

இணைப்பில் காணப்படும் இந்தக் கட்டடம், அப்போது விழல் வேயப்பட்டு, கூரைக் கட்டடமாக இருந்தது.


இதன் இன்னொரு பகுதி, வடக்கில், நகராட்சி ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தினுள் நீண்டிருந்தது.

கிழக்கு நோக்கிய திருமுகம். பரந்து விரிந்த மைதானத்தையும் ஓயாமல் இயங்கும் ரயில்களையும் முழுப் பார்வையால் பார்த்து மகிழ்வோம்.

“விழுப்புரம், நவாப் தோப்பு தொடக்கப் பள்ளி”

இங்கு தான் நமதுத் தொடக்கக் கல்வியும் கூட!

முருங்கப் பாளையத் தெருவில் வீடு. பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் போலீஸ் லைன் மட்டுமே.

பள்ளிக்கூடம் அருகில் இருந்தாலும் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்!

அடிக்கடி மட்டம் போடுவேன். அக்கா கலைச்செல்வி, தரத்தர என இழுத்துப் போவார். போலீஸ் லைனின் புழுதி, பல நேரங்களில் நம் கால் சட்டைகளில்.

நவாப் தோப்பு பள்ளியில் நம் படிப்பு, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு என இரண்டாண்டுகள் மட்டுமே!

வீடு, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதால், பள்ளிக்கூடமும் மாறியது.

படித்தது இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்றாலும் நவாப் தோப்பு பள்ளி பற்றிப் பேச நிறையவே இருக்கிறது.

பேசலாம்…

புதன், 13 மே, 2020

வாசிப்பை நேசிக்கும் விழுப்புரம் அண்ணாச்சி

“அண்ணாச்சி” என்று தான் அழைத்துப் பழக்கம். அதனால் இவரதுப் பெயர் சட்டென்று நினைவுக்கு வராது.

1990களின் தொடக்கத்தில், விழுப்புரம், மருதூர் பகுதியில் நாங்கள் வசித்த போது இவரும் இவரதுத் தம்பியும் பழக்கம். மளிகைக் கடை வைத்திருந்தனர்.

அப்புறம் இவர், கன்னியர்குளம் சாலையில் ஐஸ்கிரீம் கடை வைத்தார். நமக்கும் வீடு வெகு அருகில் தான்.

ஒவ்வொரு முறையும் கடையைக் கடக்கும் போதும் பார்ப்பேன்: டேபிளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். படித்துக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் சரித்திர நாவலாக இருக்கும். கடையில் அமர்ந்திருக்கும் இவர் மனைவியும் படித்துக்கொண்டு இருப்பார்.

அடிக்கடி என்னிடமும் புத்தகங்கள் குறித்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்.

சமணர் கழுவேற்றம் நூலாக்கத்தின் போது “அஞ்ஞாடி” நாவலை இவரிடமே பெற்றேன்.

லாக்டவுன்: மருதூரில் உள்ள இவர் வீட்டிற்குச் செல்ல வழிசெய்தது.

தமிழ்ச்செல்வம். “உங்களுக்கு வாசிப்பு வழக்கம் எப்படிங்க அண்ணாச்சி?” கேட்டேன்.

"90 களின் தொடக்கத்தில் என் முதல் மனைவி காலமாயிட்டாங்க. மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டு எனக்குள்ளேயே முடங்கிட்டேன் சார்.

அப்பதான் உலக.துரை வாத்தியார், மனசுக்கு ஓய்வா இருக்கும் ன்னு சில புத்தகங்களைக் குடுத்தாரு. அப்புறம் அரசு நூலகத்துக்குப் போனேன். புத்தகங்களே கதின்னு கிடந்தேன். எனக்குள் நிறைய மாற்றங்கள்.

அன்னிக்கி ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் படிக்கிறத விடல”.


இவரது சேகரிப்பில் எப்படியும் அறுநூறு எழுநூறு புத்தகங்கள் இருக்கும்.

ஆண்டு தோறும் நடக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குத் தவறாமல் போய்விடுவார். அள்ளி வருவார். பெரும்பாலும் நாவல்கள் தாம்.

நூல்கள் வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதற்கு இவர் தயங்குவதில்லை.

இவரது நடவடிக்கைக்கு இவர்தம் மனைவியும் மக்களும் துணையாக நிற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

அண்ணாச்சியின் சொந்த ஊர், சிவகாசி அருகாமையில் இருக்கிற, விளாம்பட்டி கிராமம். நாடார் உறவின் முறை.

இப்போதைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விளாம்பட்டிக்காரர் மட்டுமல்ல: அண்ணாச்சியுடன் 5ஆவது வரைக்கும் ஒன்றாகப் படித்தவராம்!

சரி, இவ்வளவு ஆர்வமா புத்தகங்களைப் படிக்கிற நம்ம அண்ணாச்சி எத்தனையாவது வரைக்கும் படிச்சிருக்காராம்?

“எட்டாவது வரைக்கும் தான் நம்ம படிப்பு” பெருமிதத்துடன் சொல்கிறார் தமிழ்ச்செல்வம்!

(இவரதுத் தொடர்பு எண்: 94439 87245)

செவ்வாய், 12 மே, 2020

விழுப்புரம் ரயில்வே குவார்ட்டரசில் மயில்

விழுப்புரத்தில் இன்று 12.05.2020 பிற்பகல் கொஞ்சம் மழை.

எப்படியும் சாலைகளை நனைத்திருக்கும்.

மாலையில் ஈரக் காற்று…
ஈரமானக் காற்று என்றதும், இதற்குச் சரியான இடம், ரயில்வே குவார்ட்டர்சு தான் நினைவுக்கு வந்தது.

மாலைநேர நடைப் பயிற்சி யாத்திரை, குவார்ட்டர்சு நோக்கி…

ஆமாம். சூழல் இதமாக இருந்தது.

லோகோ ஷெட் ஐ பார்த்து வர யோசனை. நடை சற்றே நீட்டிக்கப்பட்டது.

அந்த இடத்தை நெருங்கும் போது தான் பார்த்தேன்… அழகான ஆண் மயில் ஒன்று, மேய்ச்சலில் இருந்தது.


இந்த இடத்தில்.. மயில் எப்படி?

என யோசிக்கும் போதே, பறந்த மயில் லோக்கோ கட்டிடத்தின் மீதமர்ந்தது.


அங்கிருந்த ஒருவர் சொன்னார்: “இப்பதான். கொஞ்சம் நாளைக்கு முன்னாடி இருந்து தான். நிறைய மயிலு இங்க வந்திருக்குங்க” என்றார்.

அடடா.. இந்த லாக்டவுனில் எங்கிருந்தோ இவை இங்குப் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றன.

வாய்ப்புக் கிடைத்தால், மீண்டும் போய் பார்க்கணும்..!

களையிழந்த விழுப்புரம் கலையரங்கம்

எத்தனைத் தலைவர்களைத் தன் மீது ஏற்றி,
அழகுப் பார்த்திருக்கும் இந்தக் கலையரங்கம்!

எத்தனைக் கைத் தட்டல்களை வாங்கிக் கொடுத்திருக்கும்?

சில நேரங்களில் அவை மகத்தான வாக்குகளாகவும் மாறியிருக்கும்!

இப்போது அத்தனையையும் இழந்து… நினைவுகளை மட்டும் சுமந்து…

நகராட்சி மைதானமே பொலிவிழந்துப்  போன போது…

இந்தக் கலையரங்கம் மட்டும் கலையிழந்தது…

வியப்பிற்குரியது அல்லவே..?

கவர்னர் சென்னாரெட்டி மீது தாக்குதல்

அன்றைய தினம் திண்டிவனம் நகரம் கலவர பூமியாகக் காட்சியளித்தது.

இங்கு நடந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குத் தொடர, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமிக்கு கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கி இருந்தார்.

இதனால் சுப்பிரமணியசாமி மற்றும் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர்.

சு.சாமிக்கு சென்ற இடமெல்லாம் “சிறப்பு”.

இந்நிலையில், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பொறுப்பு வகித்த ஆளுநர் சென்னா ரெட்டி, 10.4.1995 அன்று மாலை சென்னையில் இருந்து புதுவை பயணமானார்.

அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் திண்டிவனத்தில் திரண்டு இருந்தனர்.

அங்கிருக்கும் வீராணம் இல்லத்தில் ஆளுநர் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாகத் திட்டம்.

மாலை 4.30 மணிக்கு ஆளுநரின் கார் திண்டிவனத்திற்குள் நுழைந்தது. வீராணம் இல்லம் நோக்கி வந்த காரை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.

கற்கள், அழுகிய முட்டை, தேங்காய் மட்டை போன்றவை சரமாரியாக வீசப்பட்டன.

இன்னொரு பக்கம், அதிமுகவினரை அப்புறப்படுத்த விழுப்புரம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலிசார் கடும் பிரயத்தனம் செய்தனர்.

இந்த சம்பவங்கள் சுமார் அரைமணி நேரம் நீடித்தன.

இவ்வளவுக்கும், ஆளுநர் சென்னா ரெட்டி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.

பின்னர் அவர் புதுவை புறப்பட்டார். புதுவை சாலையில் கூட இந்த எதிர்ப்பு தொடர்ந்தது. இன்னும் சிறிது தூரத்தில் நின்றிருந்த திமுகவினர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து, பின்னாளில் திமுகவில் இணைந்த, எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் என்னிடம் அளித்த பேட்டியில், “ஒரு வேகத்தில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டோமே தவிர சிந்திக்கும் நிலையில் செயல்படவில்லை” என விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில் இவர் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

(இணைப்பில் உள்ள தினகரன் செய்தியில், 4 எம்.எல்.ஏ. தலைமையில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை. அப்போது சட்டசபை நடந்த நேரம். குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் தான் இருந்தனர். இந்த செய்தி குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக நினைவு)



ஞாயிறு, 3 மே, 2020

பெயர்ப் பலகை

பிரபல பத்திரிகையான தினகரனில் நாம் நிருபரானதும் தோழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!

இந்த மகிழ்ச்சியின் ஊடாகத்தான், நில அளவைத் துறையில் பணியாற்றிய தோழர் பழனி (இப்போதும் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்) அழகானப் பெயர்ப் பலகையை அப்போது (1993) செய்து கொடுத்தார்.


விழுப்புரம், மருதூர், குப்புசாமி நெடுந்தெருவில் வசித்து வந்த வீட்டை இந்த பெயர்ப் பலகை ஆண்டுகள் பல அலங்கரித்தது.

பெயர்ப் பலகை எனும் போது சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

குப்புசாமி நெடுந்தெருவைத் தொடர்ந்து, கன்னியர்குளம் சாலை, சிவராமன் லேஅவுட்டிற்குக் குடி பெயர்ந்தோம். திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தேன்.

ஆறு ஆண்டுகளைக் கடந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் நமக்கும் சின்ன சின்ன உரசல்கள்.

அதில் ஒன்று, பெயர்ப் பலகை.

நாம் இருந்தது வீட்டின் பக்கவாட்டில் உட்புறமாக. முன்புறம், உரிமையாளர் வீட்டின் முகப்பில் பெயர்ப் பலகையை மாட்டியிருந்தோம்.

தேடி வரும் பலரும், அங்கு வந்துதான் “நிருபர் இருக்கிறாரா?” என கேட்பார்கள். பிரச்சினை இல்லாத வரையில் வீட்டு உரிமையாளருக்கு இது பிரச்சினையாகத் தெரியவில்லை.

பிரச்சினை வந்தவுடன், இப்படி பலரும் விசாரிப்பது அவருக்குத் தலைவலியாகப் போய்விட்டது.

ஒருநாள், சத்தம் போடாமல் பெயர்ப் பலகையைக் கழட்டி அவர் வீட்டுக்குள் வைத்துக் கொண்டார். அவர் தான் கழட்டியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவரிடம் கேட்கவில்லை.

நகர காவல் நிலையத்திற்குச் சென்றேன். “ரூ.150 மதிப்புள்ள என் பெயர்ப் பலகையைக் காணவில்லை. வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் இருக்கிறது” எனப் புகார் கொடுத்தேன்.

இதை சீரியசாக எடுத்துக் கொண்ட நம் நண்பர்களும், புகாரில் பேரில் உரிமையாளரை நிலையம் வரவழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், தான் தான் அந்தப் பலகையை கழட்டி வைத்து இருப்பதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர் உடனடியாக வீட்டுக்கு வந்து என்னிடம் எடுத்துக் கொடுத்தார்.

அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து காலி செய்துவிட்டோம் என்பது வேறு விஷயம்..!

செஞ்சியார்

வைகோ தலைமையில் அப்போது தனி அணி உருவாகவில்லை. அதற்கான அடிப்படை முகாந்திரங்கள் நடந்து வந்த நேரம் அது.

அப்போது தான் “விழுப்புரம் பகுதிக்கு நிருபர் தேவை” – எனும் விளம்பரத்தை தினகரன் நாளிதழில் பார்த்தேன். நிச்சயம் பெற்றே தீர வேண்டும். சிபாரிசு தேவை. குறிப்பாக, வைகோ ஆதரவாளர்களாக தினகரன் உரிமையாளர் கேபிகே மற்றும் செஞ்சியார் போன்றவர்கள் இருந்தனர். செஞ்சியார் அவர்களின் சிபாரிசு கிடைத்தால் போதும். 

திமுக பிரமுகர் மரகதபுரம் பன்னீர் அவர்களை அணுகினேன். அவரும் செஞ்சியாரிடம் நேரிடையாகப் பரிந்துரைத்தார்: “செங்குட்டுக்கு நீங்க வாங்கித் தரணும்.”

இதனையேற்றுக் கொண்ட செஞ்சியார் அவர்கள், “உங்களைத் தெரியும் என்று நம்ம அணியினர் கிட்ட கடிதங்களை வாங்கி வாங்க” என்று அனுப்பி விட்டார்.

கடிதங்கள் வாங்கும் படலம் தொடங்கியது.

விழுப்புரம் நகர கழக செயலாளர் வி.என்.வாசன், நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் தெ.பாண்டியன், தொண்டர்படை புல்லட் பி.மணி, வழக்கறிஞர்கள் உலகநாதன், பி.எஸ்.மன்னப்பன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் பாபு கோவிந்தராஜ் ஆகியோரிடம் கடிதங்கள் பெற்றேன்.

ஒருநாள் இரவு அரசூர் சென்றேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரசூர் பாலு அவர்களிடம் கடிதம் பெற்றேன். இதேபோல், இரவு நேரத்தில் கண்டமங்கலம் சென்று, முன்னாள் பெருந்தலைவர் தாமோதரன் அவர்களிடம் கடிதம் பெற்றேன். அப்போது மின்சாரம் இல்லாத சூழலில் லாந்தர் வெளிச்சத்தில் அவர் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

இத்தனைக் கடிதங்களுடன் ஒருநாள் சென்னை பயணம். மரகதபுரம் பன்னீர் அழைத்துச் சென்றார். செஞ்சியார் அவர்களுடன் நேரிடையாக கேபிகே அவர்களைச் சந்திக்கத் திட்டம்.

நாங்கள் போன நேரத்தில் தான் தனி அணிக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஒருநாள் முழுக்க எம்எல்ஏ ஹாஸ்டலில் தவமிருந்தேன்.

அடுத்த நாள் என்னை அழைத்த செஞ்சியார் அவர்கள், “என்னால் நேரில் வர இயலாது. கடிதம் கொடுக்கிறேன்” என லட்டர் பேடை எடுத்து கார் மீது வைத்து எழுதத் தொடங்கினார்.

“மதிப்பிற்குரிய அண்ணார் கேபிகே அவர்களுக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன் எழுதியது.
தினகரன் பத்திரிகை செய்தியாளராக விழுப்புரம் பகுதிக்கு கழகத் தோழர் நண்பர் செங்குட்டுவன் அவர்களை நியமிக்கக் கோருகிறேன். அவருக்கு எல்லா தகுதிகளும் நிரம்ப உண்டு. செய்தி சேகரிக்கும் அனுபவம் உள்ளவர். அவரை செய்தியாளராக நியமிக்க பரிந்துரை செய்யக் கோருகிறேன்.”


இதனைத் தொடர்ந்து 27.8.1993இல் தினகரன் அலுவலகத்தில் நேர்காணல். செய்தி ஆசிரியர் முத்துப்பாண்டியன், எடுத்துச் சென்ற கடிதங்களில் செஞ்சியார் கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்.

1993 செப்டம்பர் 17 முதல் ஏழு ஆண்டுகள், தினகரன் நிருபராக என் பணி தொடர்ந்தது! 

வெள்ளி, 1 மே, 2020

தமிழன்

முரசொலி குழுமத்தில் இருந்து “தமிழன்” என்றொரு நாளிதழ் வெளிவந்தது,  யாருக்கேனும் நினைவு இருக்கிறதா?

1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்தன.

விழுப்புரத்தில் இருந்து நிறைய பேர் அப்ளிகேஷன் போட்டு இருந்தனர். அதில் நானும் ஒருவன்!

இதில், எனக்கும் திமுகவில் இருக்கும் நண்பர் ஒருவருக்கும் தான் ‘இன்டர்வியூ’ அழைப்பு வந்தது.


14.3.1992 பிற்பகல் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அண்ணனுடன் ஆஜரானேன்.

 ஏறக்குறைய நமக்கு நினைவு தெரிந்து சென்னை முதல் பயணமும் அதுவாகத்தான் இருக்கும்!

நேர்காணல் நடத்தியது, எழுத்தாளர் சாவி என நினைவு!

“ஜெர்னலிசம், இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ன வேறுபாடு?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. முடிந்த வரை விடையளித்தேன்.

ஆனாலும் கூட, அந்தத் திமுக நண்பருக்குத்தான் ‘நிருபர்’ வாய்ப்பு வழங்கப்பட்டது.

எந்த ஒரு வேலையானாலும் திறமை மட்டும் இருந்தால் போதாது. சிபாரிசும் அவசியம் என்பதை “தமிழன்” உணர்த்தியது.

அப்புறம், இந்தப் பத்திரிகை எட்டு மாதங்கள் மட்டுமே வந்ததாகவும் நினைவு!

(இணைப்பு: நேர்காணலுக்காக அனுப்பப்பட்டிருந்த தந்தி)