வியாழன், 19 அக்டோபர், 2017

நடந்த சில நிகழ்வுகளும்... நடக்கப் போகும்...

சாலை விபத்துகளில் கொத்துக் கொத்தாய் மடியும் மனித உயிர்கள், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்... 
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் அதிகரித்துத்தான் இருக்கின்றன.

இவை, தொலைக்காட்சிகளில் சிலநிமிடச் செய்திகளாகவும், பத்திரிகைகளில் சிலமணி நேர செய்திகளாகவும் நம்முன் வந்து மறைந்துவிடுவதுதான் வேதனைக்குரியது!

இந்நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப்பெரிய சமூக அவலம் மறைந்திருக்கிறது. இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசும், சமூகமும் மௌனமாய்க் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இன்று (வெள்ளி) காலைகூட, நாகப்பட்டிணம் மாவட்டம், பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒருபகுதி இடிந்துவிழுந்து, போக்குவரத்துத் தொழிலாளர் எட்டுபேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மனசு வலிக்கிறது. இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?

அரசுக்கு வேண்டிய இலக்கணங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய அற இலக்கியங்கள் வற்புறுத்திச் சென்ற பிறகும், அவற்றை நமது அரசாங்கங்கள் பார்க்க மறுப்பது ஏன்?


இதோ பாருங்கள், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், பாழடைந்துக் கிடக்கும் கட்டடங்கள். 



இவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உரியவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

புதன், 11 அக்டோபர், 2017

கோலியனூரான் கால்வாய் எப்போது திறந்துவிடப்படும்?

விழுப்புரம் மேம்பாலப் பணி முடிவடைந்து எப்படியும் ஒரு மாதம் ஆகியிருக்கலாம். வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. மகிழ்ச்சி.

எப்படியே துரித கதியில் இந்தப் பணியை முடித்துவிட்டார்கள்.

ஆனால், கோலியனூரான் கால்வாய்..?

மேம்பாலத்துக்கு அடியில் புதியக் கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டது.


இரயில் பாதைக்கு அடியில் செல்லும் கால்வாய் முழுமையாகத் தூர் வாரப்பட வில்லை.

இரயில் நிலையத்தின் கிழக்கில், மூடப்பட்டுப் பின்னர்த் திறக்கப்பட்டக் கால்வாயும் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.


கண்ணன் தியேட்டர் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டக் கால்வாயும் அந்தப்படியே நிற்கிறது. போதாக்குறைக்கு, அதற்கு இரும்புக் வேலி வேறு! தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்க!


இரயில் பாதைக்கு அடியில் கால்வாய் எப்போது சீரமைக்கப் பெறும்? கிழக்குப் பகுதியில் கால்வாய் சீர் செய்யப்படுவது எப்போது? 

இவையெல்லாம் முடிந்து, பண்டிட் ஜவகர்லால் நேரு சந்துப் பகுதியில் கோலியனூரான் கால்வாய் எப்போது திறந்துவிடப்படும்?

பொதுப்பணித்துறைக்கே வெளிச்சம்..! 



திங்கள், 9 அக்டோபர், 2017

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில்...

குமுதம் ரிப்போர்ட்டரின் ஒவ்வொரு இதழிலும், தமிழகத்தின் அமைச்சர்களின் தொகுதி குறித்து ஆய்வு செய்து, ‘உங்கள் அமைச்சரை அரியும் தொடர் எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு என்னைத் தொடர்புக் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் திரு.பெ.கோவிந்தராஜு அவர்கள், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான திரு.சி.வி.சண்முகம் அவர்களது செயல்பாடுக் குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது, ‘விழுப்புரம் நகரில் பல பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது, முடங்கிப் போயிருக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், சீரமைக்கப்படாமல் இருக்கும் கோலியனூரான் கால்வாய், பாழடைந்துக் கிடக்கும் பழைய பஸ் நிலையம், தீர்க்கப்படாமல் இருக்கும் நடைபாதை வியாபாரிகள் பிரச்சனை ஆகியவற்றைப் பட்டியலிட்டேன்.

மேலும், ‘எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை நாங்கள் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க வேண்டும். இதற்கு, குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக ஏதாவது செய்யுங்களேன் என்று வேடிக்கையாகவும் (வேதனையுடனும் தான்!) குறிப்பிட்டேன். 

இன்று (10.10.17) வெளியாகியிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், விழுப்புரம் தொகுதி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. சிறப்பாகவே அலசி இருக்கிறார்கள்.

இதில், என்னுடைய பேட்டியும், படத்துடன் வெளியாகியிருக்கிறது.

16 வருடங்களுக்கு முன்பு நான் நிருபராகப் பணியாற்றிய பத்திரிகையில், இப்போது

என்னுடைய பேட்டி... மகிழ்ச்சிதான்..!


நன்றி, திரு.பெ.கோவிந்தராஜு அவர்களே..!

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தோழர் அமானுதீன் படத்திறப்பு...

திடீரென நிகழ்ந்துவிடும் சிலரது மரணங்கள் நம்மை நிலைகுலையச் செய்திடும். இப்படித்தான் தோழர் அமானுதீன் மரணமும்.

விழுப்புரம் மகாத்மா காந்தி வீதியில் இயங்கிவரும் பானு ஸ்டோர்ஸ் எனும் மளிகைக் கடையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைத்து விதமான பூசைப் பொருட்களும், நாட்டு மருந்துப் பொருள்களும் இங்குக் கிடைக்கும்!

இதன் உரிமையாளர்தான் எஸ்.அமானுதீன்.

வணிகராக இருந்தாலும், முற்போக்குச் சிந்தனையுடையவர். மார்க்சிய லெனினிய அமைப்பில் உள்ள தோழர்களுடன் தொடர்பில் இருப்பவர். தன்னுடையப் பணிகளுக்கு இடையே, உலக நடப்புகளை ஆராய்ந்துத் தெளிபவர்.

என்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டின்போதும், இடையிடையேயும் தோழரைச் சந்திப்பேன். நிறையச் சிந்திக்கும் அவர், இன்னும் எழுதுங்க... மக்களப் பத்தி எழுதுங்க... என்று ஊக்கம் கொடுப்பார்.

குறிப்பாக, ஜல்லிக் கட்டுப் போராட்டத்தின்போது. அதன் பின்னணியில் இருந்த அரசியல் குறித்தெல்லாம், விரிவாகவும், விசனத்துடனும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்தத் தோழர் அமானுதீன், கடந்த இருவாரங்களுக்கு முன்பு திடீரென மறைந்தார். மிகவும் அதிர்ந்தேன். மனதைத் தேற்ற முடியவில்லை!  

அவரதுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு விழுப்புரம் ஆசான் மண்டபத்தில் இன்று (சனி) காலை நடந்தது.

அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.த.வெள்ளையன் அவர்கள் பங்கேற்று, அமானுதீன் படத்தைத் திறந்து வைத்தார்.


முன்னதாக நானும் இந்நிகழ்வில் பங்கேற்று, தோழர் அமானுதீனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.



தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்று இருந்தனர்! 

சனி, 7 அக்டோபர், 2017

ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் சந்திப்பு...

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் ஒரு சந்திப்பு...

நேற்று (சனி) மாலை, சென்னை பல்லாவரத்தில் உள்ள ஐயாவின் அலுவலகத்தில், விழுப்புரம் தோழர் கோ.பாபு அவர்களுடன் இந்தச் சந்திப்பு நடந்தது.

என்னுடைய ‘பழைய பேப்பர் புத்தகத்தினைப் புரட்டிய ஐயா அவர்கள், காலஞ் சென்ற மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரை நினைவுகூர்ந்தார்.

குறிப்பாக, ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம் பற்றி விரிவாகவே பேசினார். மகாத்மா காந்தி வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வாரா? மாட்டாரா? என உலகமே எதிர்பார்த்திருந்த நேரத்தில், அதனை மோப்பம் பிடித்துச் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு நிருபரின் சாதுரியத்தையும் பாராட்டினார். கூடவே, தற்காலப் பத்திரிகையுலகின் நிலவரத்தையும் கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் குறித்தும் பேசினோம். ‘அவர் காலத்தில் தொல்காப்பியம் பதிப்புக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால், திராவிட மொழிக் குடும்பம் என்பதைவிடுத்து, தமிழிய மொழிக்குடும்பம் எனக் கால்டுவெல்  பெயர் சூட்டியிருப்பார் என்பது ஐயா அவர்களின் கருத்தாக இருந்தது.

திராவிட எனும் சொல்லாக்கம் தமிழக அரசியலில் எப்படியெல்லாம் பயன்படுத்தப் பட்டது என்பதை விளக்கிய அவர், அண்மைக்கால அரசியல் குறித்தும் பேசினார்.

ஐயாவின் அனுபவங்கள்.... ஆவணப்படுத்தப்பட வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது.

இந்தச் சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. என்ன, திடீர்னு ஐயாவை? நீங்கள் கேட்கலாம்...

என்னுடைய அடுத்தப் படைப்பு, ‘திணிக்கப்பட்டதா திராவிடம்? தயாராகிவிட்டது. இதற்கான அணிந்துரைக்காகத்தான் ஐயா அவர்களை அணுகியிருந்தோம்.

இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஐயா பழ.நெடுமாறன் அவர்கள், விரைவில் அணிந்துரை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.


காத்திருப்போம்..! 

வியாழன், 5 அக்டோபர், 2017

நடுவராக நான்...

விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையில், காந்தி ஜெயந்தியையொட்டி கடந்த சில நாள்களாக, மாணவ மாணவியருக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, பேச்சுப் போட்டியானது, இன்று பிற்பகல் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இப்போட்டியை ஒருங்கிணைக்கும் நடுவர்களில் ஒருவராக இருக்குமாறு, பள்ளி நிர்வாகி திருவாளர் இல.இரவீந்திரன் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார்.

ஆஹா..! மகிழ்ச்சியான விசயம், ஏற்றுக் கொண்டேன்.

கவிஞர் திருவாளர் விக்கிரமன் அவர்களும், பள்ளி ஆசிரியை திருமதி ஹேமலதா அவர்களும் நடுவர்களாக வீற்றிருந்தனர்.

இவர்களுக்கு நடுவில் நான்!


பரவாயில்லை மாணவர்கள் பொளந்துக் கட்டினார்கள்.


பலரும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்கள். ஒரு மாணவனின் சட்டையில், கையின் ஓரம் துணி கிழிந்திருப்பதைக் கண்டேன்.

அவர்கள் வாழ்க்கையில் வறுமை இருக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளத்தில் வெறுமை இல்லை என்பதை அவர்களது பேச்சுகள் எடுத்துக்காட்டியது.


மகாத்மா காந்தி குறித்துச் சிறப்பாகவே பேசினார்கள். அவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முடிவுகளையும் அங்கேயே அறிவித்தோம்.

அம்மாணவர்களை வாழ்த்திப் பேசிய நான், விழுப்புரம் மாவட்டத்தில் காந்தியின் சுவடுகள் குறித்து நினைவுகூர்ந்தேன்.

மேலும், ‘மகாத்மா காந்தியை நாம் யாரும் பார்த்தது கிடையாது. ஆனால் அவர் பெயரைத் தாங்கியப் பள்ளியில் படிக்கிறீர்கள் என்பதே பெருமிதத்திற்குரியதுதான் என்று சொன்னபோது, அதனைக் காதைப் பிளக்கும் கைத்தட்டல் சப்தத்துடன் மாணவர்கள் அங்கீகரித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று (6.10.17) மாலை பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

நன்றி, திரு.இரவி சார்..!  


                   

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

படைப்பாளிகளை அமரவைத்துச் சிறப்புசெய்தனர்...

நல்ல விசயம்தான்... நேற்று சிறப்பாகவே நடந்தேறியது!

விழுப்புரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பிலான புத்தகக் கண்காட்சியில், தினம் தினம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

அந்த வகையில், விழுப்புரம் படைப்பாளர்களுக்கானப் பாராட்டு விழா நேற்று (ஞாயிறு) மாலை நடந்தது.

இதில், உங்கள் செங்குட்டுவன் உள்பட, 25 படைப்பாளர்கள் பாராட்டப்பட்டனர்.

படைப்பாளிகளை இருக்கையில் அமர வைத்து, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நின்று கொண்டுச் சிறப்பு செய்தனர் என்பது இங்குச் சிறப்புச் செய்தியாகும்.


படைப்பாளர்கள் குறித்த விவரங்களைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. ஓரளவு சிறப்பாக செய்து முடித்ததாகக் கருதுகிறேன்.

இடையிலே, சங்க காலத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்த தமிழ்ப் படைப்பாளர்கள், இன்று பதிப்பாளர்களையும், அரசு நூலகங்களையும் நம்பியிருக்க வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.


இந்நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள்.

இதற்காக, விழுப்புரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தங்க.கணேச.கந்தன், கே.பாலகுரு நாதன், பி.நம்மாழ்வார் உள்ளிட்ட அனைவருக்கும் படைப்பாளர்கள் சார்பிலே நன்றி..!

நண்பர்களே, கடந்த ஒருவார காலமாக நடந்துவந்த விழுப்புரம் புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகின்றது!

 

விழுப்புரத்தை மறந்த சிவாஜியின் வாரிசுகள்...

நடிகர் திலகம் அமெரிக்கா சென்று திரும்பியிருந்த நேரம்.

28.09.1962இல் விழுப்புரம் நகரசபை சார்பில் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சிவாஜி கணேசன், வரும் வழியில் நந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளலார் சத்தியஞான சபைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நகரசபையில் நகரமன்றத் தலைவர் டி.எஸ்.பத்தர் தலைமையில் விழா. அதில், சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை (01.10.1928) வெள்ளிப் பேழையில் வைத்து அவரிடம் கொடுத்தனர்.

இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் “நான் பிறந்தது விழுப்புரத்தில்தான் என உறுதியாகக் கூறி அதற்கான சட்ட பூர்வமான அத்தாட்சியை வழங்கியமைக்கு நன்றி”  தெரிவித்துக் கொண்டார்.

பின்னாளில் தனது சுயசரிதையில் நடிகர் திலகம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “ஒருமுறை எனக்கு விழுப்புரம் முனிசிபாலிட்டியில் வரவேற்பு கொடுத்து கௌரவித்தார்கள். என்னுடைய பிறப்பை பதிவு செய்தாரே ஒரு பியூன், அவருக்கு ஐம்பது அறுபது வயதிருக்கும், அவர் மூலம் எனக்கு அந்த சர்டிபிகேட் பிரசன்ட் செய்தார்கள். அன்று நான் அடைந்த சந்தோஷம் போல் என்றும் அடைந்ததில்லை. என்னுடைய பிறப்பிற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்று, அப்போது நான் தெரிந்து கொண்டேன்.

நடிகர் திலகம் பிறந்தது திருச்சி, தஞ்சாவூர், சூரக்கோட்டை என விதவிதமானத் தகவல்கள் இப்போதும்கூட வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் விவேக்கும் திரைப்படம் ஒன்றில், சூரக்கோட்டைன்னு ஒருஊரு அங்கதான் சிவாஜி பொறந்தாருன்னு வசனம் பேசியிருப்பார்.

இன்றுகூட வசந்த் தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் சீர்காழியின் பிறந்தார்னு போட்டுக்கிட்டு இருக்காங்க. வரலாறு தெரியாதவர்கள். அல்லது தெரிந்தும் திரிப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! இருக்கட்டும்.


28.09.1962இல் விழுப்புரத்தில் நடந்த விழாவில் சிவாஜி கணேசன் பேசும்போது “எனது தாயார் பெயரில் கல்லூரி ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று வரவேற்பில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லாமல் கூடிய விரைவில் அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன். கல்லூரி கட்ட அரசாங்கத்தை எதிர்பார்ப்பதைவிட கலைஞர்களை எதிர்பார்ப்பதுதான் நல்லது. நான் நாடகம் நடத்தி பணம் சேர்த்து கல்லூரி கட்ட முயற்சி செய்கிறேன்என  உறுதியளித்திருந்தார்.

விழுப்புரத்தில் அப்படி எதுவும் கல்லூரி கட்டப்படவில்லை.

சரி, அவரது வாரிசுகளாவது தமது தந்தையார் பிறந்ததன் நினைவாக விழுப்புரத்தில் நினைவுச் சின்னம் அமைத்திருக்க வேண்டும். அவர்களும் மறந்துவிட்டார்கள், விழுப்புரத்தை.


ஆனால், விழுப்புரம் மட்டும் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறது, இந்த மண்ணில் பிறந்து, தனது மடியில் தவழ்ந்த அந்தக் கணேசனை!