திடீரென நிகழ்ந்துவிடும் சிலரது மரணங்கள் நம்மை
நிலைகுலையச் செய்திடும். இப்படித்தான் தோழர் அமானுதீன் மரணமும்.
விழுப்புரம் மகாத்மா காந்தி வீதியில்
இயங்கிவரும் பானு ஸ்டோர்ஸ் எனும் மளிகைக் கடையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அனைத்து விதமான பூசைப் பொருட்களும், நாட்டு மருந்துப் பொருள்களும் இங்குக்
கிடைக்கும்!
இதன் உரிமையாளர்தான் எஸ்.அமானுதீன்.
வணிகராக இருந்தாலும், முற்போக்குச்
சிந்தனையுடையவர். மார்க்சிய லெனினிய அமைப்பில் உள்ள தோழர்களுடன் தொடர்பில்
இருப்பவர். தன்னுடையப் பணிகளுக்கு இடையே, உலக நடப்புகளை ஆராய்ந்துத் தெளிபவர்.
என்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டின்போதும்,
இடையிடையேயும் தோழரைச் சந்திப்பேன். நிறையச் சிந்திக்கும் அவர், இன்னும்
எழுதுங்க... மக்களப் பத்தி எழுதுங்க... என்று ஊக்கம் கொடுப்பார்.
குறிப்பாக, ஜல்லிக் கட்டுப் போராட்டத்தின்போது.
அதன் பின்னணியில் இருந்த அரசியல் குறித்தெல்லாம், விரிவாகவும், விசனத்துடனும்
என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அந்தத் தோழர் அமானுதீன், கடந்த இருவாரங்களுக்கு
முன்பு திடீரென மறைந்தார். மிகவும் அதிர்ந்தேன். மனதைத் தேற்ற முடியவில்லை!
அவரதுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
விழுப்புரம் ஆசான் மண்டபத்தில் இன்று (சனி) காலை நடந்தது.
அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்
திரு.த.வெள்ளையன் அவர்கள் பங்கேற்று, அமானுதீன் படத்தைத் திறந்து வைத்தார்.
முன்னதாக நானும் இந்நிகழ்வில் பங்கேற்று, தோழர்
அமானுதீனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.
தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட
ஏராளமானோர் இதில் பங்கேற்று இருந்தனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக