அண்மையில், விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலைக்குச் சென்ற நான்,
அதன் தாளாளர் திரு.பெ.சு.இல.இரவீந்திரன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர், பள்ளியின் நூலக அறையினை எனக்குக் காண்பித்தார். அங்கு
ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும், இரவீந்திரன் அவர்களின்
தந்தையார் திருவாளர். பெ.சு.இலட்சுமணசுவாமி அவர்கள் இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்தவை.
என் பார்வையில் பட்ட நூல்களில் ஒன்று, “முற்காலச் சோழர் கலையும்
சிற்பமும்”–எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியது. ஏராளமானப்
புகைப்படங்களுடன் 455 பக்கங்களில் வெளிவந்துள்ள அற்புதமான நூல்.
1966 மார்ச்-ல் முதற்பதிப்பைக் கண்ட இந்நூலின் விலை ரூ.9.
ஆனாலும், அதில் என் கவனத்தைக் கவர்ந்தது, “தமிழ் வெளியீட்டுக் கழகம்,
தமிழ்நாடு–அரசாங்கம்”
என்றிருந்ததுதான். ஆமாம். தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் தான் இந்நிறுவனம்
இயங்கியிருக்கிறது.
1962இல் நிறுவப்பெற்ற தமிழ் வெளியீட்டுக் கழகம் 1966 வரை 136 நூல்களை
வெளியிட்டுள்ளது.
1966ஆம் ஆண்டில் மட்டும், இந்த நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம்,
வரலாறு, அரசியல், உளவியல், தத்துவம், அறவியல், அளவையியல், மானிடவியல், சமூகவியல்,
புவியியல், புள்ளியியல், விலங்கியல், பௌதிகவியல், மருத்துவம், பொதுநூல்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் 72
நூல்கள் வெளியிடப்பட்டிருக் கின்றன.
இந்தியப் பொருளாதாரம் பற்றி மட்டுமல்லாமல், இங்கிலாந்து பொருளாதார
வரலாறு, அமெரிக்காவின் நவீன பொருளாதார வளர்ச்சி, கிரேட் பிரிட்டனில் தொழில்
வாணிபப் புரட்சி, கிரேக்க வரலாறு ஆகியவை குறித்தும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது
இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 101ஆவது வெளியீடான “முற்காலச் சோழர்
கலையும் சிற்பமும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள, அப்போதைய
தமிழக முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள், “தமிழை ஆட்சி மொழியாக அரசாங்கம்
ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழுக்கு ஆக்கம் தேடுகின்ற முறையில், இன்னும் மகத்தான அளவில்
தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் வெளியீட்டுக் கழகம்
நிறுவப்பெற்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.
பரவாயில்லை நல்ல முயற்சிதான். இது எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது
எனும் விவரம் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் காங்கிரசு அரசாங்கம், குறிப்பாக பக்தவச்சலனார்
அரசாங்கம் என்றதுமே வேறு மாதிரியான பிம்பங்கள்தான் நம்முன் வந்து நிற்கின்றன.
ஆனாலும் இதுபோன்ற நல்ல காரியங்களும் தமிழுக்கு நடந்துதான் இருக்கிறது..!