சனி, 22 செப்டம்பர், 2018

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

1991இல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ஜெயலலிதா எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் தொடங்கியது!

முன்பெல்லாம், காவல் நிலையங்களில் மகளிர் போலீசாருக்கென ஒரு பிரிவு (விங்) இருந்தது.

இப்போது, இவர்களுக்கு முழுநேரக் காவல் நிலையம்.

விழுப்புரத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இங்கு அங்கு என்று இடம் தேடி அலைந்தனர்.

இறுதியில், தாலுகா காவல் நிலைய வளாகத்திலேயே இடம் தேர்வானது.


அது, தாலுகா இன்ஸ்பெக்டர் குடியிருப்பாக இருந்தக் கட்டடம். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் (ஜீவேந்திரன்) குடியிருப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

புதிய காவல் நிலையத்தின் திறப்பு விழாவுக்கான தேதியும் குறிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா வருவதாகச் சொல்லி, ஹெலிபேடுக்கான இடம் தேடி அலைந்தனர்.

ஆனால், முதல்வர் வரவில்லை.

அன்றைய டிஜிபி எஸ். ஸ்ரீபால்,

08.09.1994 அன்று மாலை 'விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்'தினைத் திறந்து வைத்தார்.


இப்போது, அதே வளாகத்தில் இக்காலத்தில் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது விட்டது.

இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டு லைன் அலுவலகம் என பல்வேறு அவதாரம் எடுத்த அந்தக் கட்டடம் காலப்போக்கில் மறைந்துவிட்டது.

இப்போது அந்த இடத்தில் தான், தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டடம் நின்று கொண்டு இருக்கிறது!

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

திருநீர்மலை - கல்வெட்டுகள் மீது நாமம்...

நாமம் எனப்படும் திருமண்.

வைணவச் சடங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது.

உடலில் எங்கெங்குத் திருமண் காப்பு இடலாம் (ஏறக்குறைய 12 இடங்களில்) என்றெல்லாம் வரையறுக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம்.

ஆனால், திருக்கோயில்களில் எந்தெந்த இடங்களில் திருமண் வரையலாம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை போலும்.

இதோ பாருங்கள்…

நீர் வண்ணப் பெருமாள் திருக்கோயில்.

சென்னை, பல்லாவரம் அருகே திருநீர்மலையில் அமைந்துள்ளது.



மலையடிவாரத்தில் உள்ள இக்கோயில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது.

கோயில் வளாகத்திற்குள் நாம் சுற்றி வரும்போது நம் கண்களில் படும் முக்கிய காட்சி, ஆங்காங்கே, பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் பளீரென்று  பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள திருமண் – நாமங்கள்!



வைணவத்தின் அடையாளங்களுள் முக்கியமானது, வைணவத் திருக்கோயிலில் இருக்க வேண்டியதுதான். தவறில்லை.

ஆனால், பல இடங்களில், கல்வெட்டுகளின் மீது வரையப்பட்டுள்ளது தான் வேதனை!
இக்கல்வெட்டுகள் வரலாற்றை நினைவுகூரும் ஆவணங்கள்.

அதில் போய்,
பட்டை பட்டையாய் வண்ணந் தீட்டுவது, எழுதுவது …

இதெல்லாம் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை..?

திங்கள், 10 செப்டம்பர், 2018

பாரதி...



தேடிச் சோறு நிதம் நின்றதில்லை

பிறர் மனம் வாடப் பேசியதில்லை

நரை கூடிக் கிழப் பருவம் எய்தவில்லை

வேடிக்கை மனிதரைப் போலே இவன் வீழவுமில்லை

இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

பாரதி…

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கல்வெட்டுகளை மீட்க ஒரு முயற்சி...

உண்மையில் இதை, இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும்…

அவர்கள்தானே வெள்ளை அடிப்பது, கல்வெட்டுகளை மறைப்பது போன்ற திருப்பணிகளை(!) செய்து வருகிறார்கள்.

அல்லது எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்து வரும் தொல்லியல் துறை செய்ய வேண்டும்.

ஆனால், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்கள் செய்கிறார்கள்.


விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர்   கிராமத்தில் அமைந்துள்ளது  அபிராமேசுவரர் திருக்கோயில். சோழர் காலத்தியது. தேவார மூவரால் பாடப்பெற்றது.

இக்கோயிலில் வரலாறு சொல்லும் கல்வெட்டுகள் ஏராளம். ஏராளம். இவை அனைத்தும் திருப்பணி எனும் பெயரில், வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என எழுதப்பட்டு, மக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.


இவற்றை மீட்கும் முயற்சியில், விழுப்புரத்தைச் சேர்ந்த நண்பர் அகிலன் தலைமையிலான 'கரிகால சோழன் பசுமை மீட்புப் படை'யினர் மற்றும் நண்பர் நாராயணன் தலைமையிலான ‘யாதும்ஊரே யாவரும் கேளிர்' அமைப்பினர்  இன்று காலை இறங்கியுள்ளனர்.

இவர்களுக்கு கல்வெட்டு ஆய்வாளர் நண்பர் இரமேஷ் ஊக்க சக்தியாக இருக்கிறார்.

இடையில் நாமும் 'பிரஷ்' பிடித்ததில் மனநிறைவு!


திருக்கோயிலில் நல்ல திருப்பணி. நண்பர்களை வாழ்த்துவோம்..!

வியாழன், 6 செப்டம்பர், 2018

விழுப்புரம் ஐயனார் குளம்



இணைப்பில் நீங்கள் பார்ப்பது…

நீராழி மண்டபம்
விசுவரூப ஆஞ்சநேயர்
திருமேனி பாதுகாப்பு மையம்

என எந்த ஆக்கிரமிப்பினாலும் பாதிக்கப்படாத,
இயல்பான, விழுப்புரம் ஐயனார் குளம்.

1990களின் தொடக்கத்தில் நான் எடுத்தப் புகைப்படம்.

விழுப்புரம் நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் அழகான நீர்ப்பிடிப்பு பகுதி.

ஐயனார் குளமாக? ஆஞ்சநேயர் குளமா? மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமல்ல அரசாங்கத்தின் ஆவணங்களும் சொல்கின்றன: இது ஐயனார் குளம் என்று.

இதனை ஆக்கிரமிக்கவும் மீட்கவுமான எத்தனை முயற்சிகள் காலந்தோறும் நடந்து வந்திருக்கின்றன?

நீண்ட வரலாறு கொண்டது விழுப்புரம் ஐயனார் குளம்.

'இது அரசுக்குச் சொந்தமான இடம் தான்'. பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 2000ஆம் தொடக்கத்தில், 'இது நகராட்சிக்கு சொந்தமான இடம். ஆக்கிரமிப்போர் தண்டிக்கப்படுவார்கள்' என குளத்தைச் சுற்றிலும் பேனர்கள் வைக்கப்பட்டதை யாரும் மறக்க இயலாது.

என்ன இருந்தாலும் என்ன செய்வது?

குளம் சீரமைக்கப்பட்டு சிறுவர் பூங்கா அமைக்கப்படும்,
மழைநீர் சேகரிப்பு மையமாக இருக்கும் என்பது போன்ற கடந்த கால அறிவிப்புகள் காற்றில் கரைந்து விட்டன.

குளத்தின் ஒரு பக்கம் கடைகளைக் கட்டி வசூல் செய்கிறது நகராட்சி.

இன்னோரு பக்கத்தில் இல்லாத சொந்தத்தைக் கொண்டாடி வாடகை வசூலிக்கிறது அறநிலையத்துறை.

இதற்கிடையில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு திணிக்கப்படுமோ அங்கெல்லாம் மெல்ல மெல்லத் ஆக்கிரமிப்புகளும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இதில் ஒரு சதவீதம் கூட குளத்தின் பராமரிப்பில் காட்டப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

விழுப்புரம் நகரத்தின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்.

அப்படியானால், ஐயனார் குளம் மட்டுமல்ல நகரத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டும்..!


புதன், 5 செப்டம்பர், 2018

விழுப்புரம்: தரைமட்டமான நூலகக் கட்டடம்...

விழுப்புரம் கிளை நூலகம்.

1950களில் இருந்து, தெற்கு ஐயனார் குளக்கரையில் இயங்கி வந்தது.
1994இல், மாவட்ட பிரிவினைக்குப் பிறகு, மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.பின்னர், 2005இல், பெருந்திட்ட வளாகத்தில், சொந்த கட்டடத்தில் குடியேறியது.


இதற்கிடையில் பழைய கட்டடத்தில் சில மாதங்கள் பகுதி நேர நூலகம் இயங்கி வந்தது. அப்போது ‘இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடு தேவை' என அன்றைய மாவட்ட நூலக அலுவலர் அசோகன், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதினார்.

பிறகு ஒரு நாள் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் ஊர்ப்புற நூலகம் தொடங்கப்பட்டது.

விழுப்புரத்துக்கு கிளை நூலகம் வேண்டுமே, பழைய கட்டடத்தை என்ன செய்வது? என்பது பற்றி எல்லாம் விழுப்புரம் மாவட்ட பொது நூலகத்துறை கவலைப்படவில்லை.

இதன் விளைவு? அண்மையில் பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட இருக்கிறதாம்!

உள்ளூரைச் சேர்ந்த ஆளும்கட்சி வி.ஐ.பி. ஒருவர் இதில் தீவிரம் காட்டுவதால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த இடத்தைக் காப்பாற்ற இப்போது இருக்கும் மாவட்ட நூலக அலுவலர் மேற்கொண்ட கடைசி நேர முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

நூலகக் கட்டடம் இயங்கி வந்த இடம் நூலகத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதற்கான எந்த வித ஆவணமும், விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலகத்தில் இல்லை என்பதுதான் இத்துறையின் அலட்சியத்தின் உச்சக்கட்டம்!

நூலகத்தின் பழைய கட்டடம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்களுக்கு நான் பலமுறை மனு அளித்திருக்கிறேன்.


அத்தனையும் இதோ தரைமட்டமாகப் போய்விட்டது..!

வேதனையுடன்…
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.

நான் வாத்தியார் மகனென்பதில்...




வாத்தியார்…

இவர் மிகவும் கண்டிப்பானவர்.

குறும்பு செய்யும் மாணவர்களின் காதைத் திருகித் தண்டனை கொடுப்பது இவரது தனிச்சிறப்பு.

இதுபற்றி மாணவர்கள் தமதுப் பெற்றோரிடம் புகார் சொன்னால்
' வாத்தியார் செய்ததில் நியாயம் இருக்கும்' என்பார்களாம்.

இவரிடம் திருகு வாங்கிய முன்னாள் மாணவர்கள் பலரும் இந்நாளிலும் நினைவுகூரக் கேட்டதுண்டு.

கண்டிப்பு, மாணவர்களிடம் மட்டுமில்லை. அதிகாரிகளிடமும். எதிலும் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும் என்பார்.

இதனால், விழுப்புரம்
ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில்
சி.கே. (சி.கோதண்டம்) வுக்கு தனி மரியாதை!

முறுக்கிய மீசையுடன் தூய கதராடையில்
வாத்தியார் நடந்துவரும் கம்பீரமே தனி அழகு!

சிறு வயதில்
இவர் கை விரல்களைப் பற்றி வீதியில் நடந்தபோதும்
இப்போதும், ஏன் எப்போதுமே
எனக்குப் பெருமிதம் தான்…

நான் வாத்தியாரின் மகனென்று…

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

ஆங்கிலேயர் காலக் காசு...

என் தந்தையார் திரு.சி.கோதண்டம் (88) அவர்கள்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்.

தம் இளமைக் காலத்தில், பழங்கால காசுகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டியவர்.

அவரது சேகரத்தில் இருந்த சில காசுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,
தன் பேரப் பிள்ளைகளிடம் (என் மகள் மகனிடம்) கொடுத்தார்.

அவர்களும் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

அதில் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது இந்தக் காசு:

ஒரு பக்கத்தில்

 VICTORIA QUEEN

என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,
மணிமகுடம் தரித்த மகாராணியின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.



காசின் இன்னொரு பக்கத்தில்,

HALF
ANNA
--------
INDIA
1862

என எழுதப்பட்டுள்ளது.


இந்தக் காசின் தற்போதைய வயது 160 …!

எதிர்காலத்திலத்திலும், தாத்தா கொடுத்த இந்தக் காசுகளை பத்திரமாய் பாதுகாப்போம் என உறுதியாகச் சொல்கின்றனர் என் பிள்ளைகள்!