புதன், 5 செப்டம்பர், 2018

விழுப்புரம்: தரைமட்டமான நூலகக் கட்டடம்...

விழுப்புரம் கிளை நூலகம்.

1950களில் இருந்து, தெற்கு ஐயனார் குளக்கரையில் இயங்கி வந்தது.
1994இல், மாவட்ட பிரிவினைக்குப் பிறகு, மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.பின்னர், 2005இல், பெருந்திட்ட வளாகத்தில், சொந்த கட்டடத்தில் குடியேறியது.


இதற்கிடையில் பழைய கட்டடத்தில் சில மாதங்கள் பகுதி நேர நூலகம் இயங்கி வந்தது. அப்போது ‘இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடு தேவை' என அன்றைய மாவட்ட நூலக அலுவலர் அசோகன், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதினார்.

பிறகு ஒரு நாள் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் ஊர்ப்புற நூலகம் தொடங்கப்பட்டது.

விழுப்புரத்துக்கு கிளை நூலகம் வேண்டுமே, பழைய கட்டடத்தை என்ன செய்வது? என்பது பற்றி எல்லாம் விழுப்புரம் மாவட்ட பொது நூலகத்துறை கவலைப்படவில்லை.

இதன் விளைவு? அண்மையில் பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட இருக்கிறதாம்!

உள்ளூரைச் சேர்ந்த ஆளும்கட்சி வி.ஐ.பி. ஒருவர் இதில் தீவிரம் காட்டுவதால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த இடத்தைக் காப்பாற்ற இப்போது இருக்கும் மாவட்ட நூலக அலுவலர் மேற்கொண்ட கடைசி நேர முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

நூலகக் கட்டடம் இயங்கி வந்த இடம் நூலகத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதற்கான எந்த வித ஆவணமும், விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலகத்தில் இல்லை என்பதுதான் இத்துறையின் அலட்சியத்தின் உச்சக்கட்டம்!

நூலகத்தின் பழைய கட்டடம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்களுக்கு நான் பலமுறை மனு அளித்திருக்கிறேன்.


அத்தனையும் இதோ தரைமட்டமாகப் போய்விட்டது..!

வேதனையுடன்…
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக