செவ்வாய், 30 ஜூலை, 2019

அருங்காட்சியகங்கள் இயக்குநருடன் சந்திப்பு...

நினைவூட்டல்... அதுவும் அரசுக்கு நினைவூட்டல் என்பது தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை தான்...

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் மதிப்பிற்குரிய செல்வி.கவிதா ராமு ஐ.ஏ.எஸ். அவர்களை,

சென்னை அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று 30.07.2019 செவ்வாய் காலை சந்தித்தேன்.


விழுப்புரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை அவரிடம் பட்டியலிட்டேன்.

ஏராளமான வரலாற்றுத் தரவுகள் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்.

பொறுமையுடன் கேட்டறிந்தார்.

எனது, அருங்காட்சியகம் அவசியமும் அவசரமும், நூலினைக் கொடுத்த போது வியந்தார்!

" இந்த விசயங்கள் நிச்சயம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.

இன்னமும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறோம். இருப்போம்...

வியாழன், 25 ஜூலை, 2019

மண்டகப்பட்டு துவார பாலகர்

விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டுக் குடைவரை...

தமிழகக் கோயில் கலையின்,  வரலாற்றின் மைல் கல்.

புதியதொரு கட்டுமானக் கலையின் தொடக்கம்.

இக்குடைவரையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வாயிற் காப்பவர்கள் (துவார பாலகர்)...


அடடா.. என்ன ஒரு பிரம்மாண்டம்..? என்னவொரு கம்பீரம்? நளினம்?



தமிழகக் கோயில்களில் இப்படியான வர்கள் நிறுத்தப்ப்படுவதற்கான மரபின் தொடக்கப் புள்ளி, மண்டகப்பட்டு வாயிற் காப்பவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சி.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இச்சிற்பங்களை வடித்த அந்தச் சிற்பிகளின் கரங்களுக்கு... அவர்களின் உளிகளுக்கு நம் வாழ்த்துகள்...

ஞாயிறு, 21 ஜூலை, 2019

நூறு உ.வே.சா.க்களில் ஒருவர் கிடைத்து விட்டார்...

தமிழ் இந்து நாளிதழில் கடந்த 18ஆம் தேதி,

தொல்லியல் துறை ஆணையர் திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களின்,

"தகவல் நெடுஞ்சாலையில் தமிழ்" எனும் சிறப்பான கட்டுரை பிரசுரமாகி இருந்தது.

தமிழ் கடந்து வந்தப் பாதை, அதுகடக்க வேண்டிய தூரம் குறித்து மிகவும் விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.

நல்ல வேளையாக, நண்பர் அன்னியூர் சிவா என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இக்கட்டுரை குறித்து நான் எழுதிய கடிதம், இன்றைய 22.07.2019 திங்கள் தமிழ் இந்துவில் பிரசுரமாகி இருக்கிறது.

தலைப்பு: நூறு உ.வே.சா.க்களில் ஒருவர் கிடைத்துவிட்டார்.
நன்றி:
 தமிழ் இந்து ஆசிரியர் மற்றும்
தோழர் அன்னியூர் சிவா
ஆகியோருக்கு...

சனி, 20 ஜூலை, 2019

புதுச்சேரி அரசைப் பாராட்டலாம்...

நல்ல விசயம் தான்… பாருங்கள்…

புதுச்சேரியில், இரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் நீண்ட சாலையின் முந்தைய பெயர்: தெற்கு புல்வார் தெரு.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்த வீதியின் பெயர் மாற்றப்பட்டது. புதுச்சேரியின் மக்கள் தலைவராக விளங்கிய, பிரெஞ்சிந்திய சுதந்தரப் போராட்ட வீரர் வி.சுப்பையா அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.


பெயர் பலகை வைத்ததோடு நில்லாமல், வி.சுப்பையா அவர்கள் குறித்தும், அவரோடு களத்தில் நின்ற அவரது மனைவி சரஸ்வதி சுப்பையா அவர்கள் குறித்தும் வாழ்க்கைக் குறிப்புகள் வீதியில் ஆங்காங்கே சலவைக் கற்களில், ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதப்பட்டுள்ளன.


அதோடு அந்த வீதியின் பழைய (பிரெஞ்சு) பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

ஏதோ தலைவர்களின் பெயர்களை வைத்தோம் என்று இல்லாமல், அவர்கள் குறித்தக் குறிப்புகளும் நம் கண்களில் படுகிறது..!

நல்ல விசயம் தான்… புதுச்சேரி அரசை (இதை யார் செய்து இருந்தாலும்) நாம் பாராட்டத்தான் வேண்டும்..!

வியாழன், 18 ஜூலை, 2019

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு வாழ்த்துகள்...

எனக்குள் ஆச்சரியம்தான்..! எப்படி இவரால் இப்படி பேச முடிகிறது?

“நிர்வாகச் சீர்கேட்டிற்கு நீங்கள் தான் காரணம்”
மாவட்ட நிர்வாகத்தின் உயர்ந்த, முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை நோக்கி, இவரால் எப்படி சுட்டுவிரல் நீட்ட முடிகிறது?

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.த.குமாரவேல் அவர்கள்.



விழுப்புரத்தில் பணியேற்று பத்து மாதங்கள் தான் ஆகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் திடீர் இடமாறுதல். அதுவும் மாற்று இடம் எதுவுமில்லை. காத்திருப்போர் பட்டியலில்!

அப்போது தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.டி.ஓ. அவர்கள், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டினார்.

அதே கையோடு சென்னை உயர்நீதிமன்றம் சென்ற அவர், தனது பணி மாறுதல் உத்தரவுக்குத் இடைக்காலத் தடை உத்தரவும் பெற்றார்.

அதே வேகத்தில், தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தார்.

எனக்கும், எல்லோருக்கும் ஆச்சரியந்தான்.
எப்படி இவரால் உறுதியாக நிற்க முடிகிறது?

அப்போது தான் வருவாய்த் துறையில் இருக்கும் நண்பர்கள் சொன்னார்கள்:
 “அவர் கை சுத்தம்.”

இப்படியான நேர்மையான அதிகாரியை, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை நேற்று நேரில் சந்தித்தேன்.


கரங்களை இறுகப் பற்றி பாராட்டினேன்.

வாழ்த்துகள் ஆர்.டி.ஓ. சார்..!

புதன், 17 ஜூலை, 2019

பள்ளிகள் தோறும் நூலகம்; விழுப்புரம் எஸ்.பி.யை பாராட்டுவோம்

“மாற்றம் இங்கிருந்துதான் – மாணவர்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்” என்கிறார், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.சீ.ஜெயக்குமார் அவர்கள்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புற அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து காவல்துறை சார்பில் நூலகங்களை அமைத்து வருகிறார், விழுப்புரம் எஸ்.பி.


“கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இருந்து சாதியப் பிரச்சினைகள் மோதல்கள் உருவாகின்றன. இதைத் தடுப்பது எப்படி? வேறு வழியில் செல்லும் மாணவர்களின் சிந்தனையை ஒழுங்குப்படுத்துவது எப்படி?  என்றெல்லாம் யோசித்த போது தான் அரசுப் பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்துவது என முடிவு செய்தோம்” என்று விளக்கும், எஸ்.பி. ஜெயக்குமார்,

“இது நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. ஒரு சில இடங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உதவி இருப்பதாக தலைமை ஆசிரியர்களிடம் கடிதங்கள் வந்திருக்கின்றன” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இதுவரை 17 அரசுப் பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பெரிய மனதுகொண்ட பலரும் முன்வந்து நூல்களை வாங்கியும் தருகின்றனர்.

மகிழ்ச்சி.

பல இடங்களில் பள்ளி நேரம் முடிந்த பின்னரும் மாணவர்களும் அப்பகுதி இளைஞர்களும் நூலகங்களைப் பயன்படுத்துகிறார்களாம். வாசிப்பின் நேசிப்பு அதிகரித்து இருக்கிறது.

“இம்முயற்சிகளின் முழுப்பலன் இப்போது தெரியாவிட்டாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் தெரியும்” என்று சொல்லும் போது எஸ்.பி. அவர்களின் கண்களில் நம்பிக்கைத் தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டக் காவல்துறையின் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவு தெரிவிப்போம்.

இன்று காலை, எஸ்.பி. அவர்களை நேரில் சந்தித்து நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்...


(அருகில்: ADSP திரு‌.சரவணக் குமார் அவர்கள்)

திங்கள், 8 ஜூலை, 2019

'உண்மை'யில் பிரசுரமாகி இருக்கும் விந்தனின் 'திருந்திய திருமணம்' சிறுகதை

கடந்த சில நாள்களுக்கு முன்பு பேராசிரியர் பழமலையை சந்திக்கச் சென்றிருந்தேன்.

பேசிவிட்டுக் கிளம்பும் தறுவாயில், ஜுன் 16-30 உண்மை (தி.க.வின் மாதமிருமுறை வெளியீடு) இதழை என்னிடம் கொடுத்தார்.


“இதில் விந்தன் கதை வந்திருக்குப் படி” என்றவர், “இதை எப்படி இதில் (உண்மை) போட்டாங்கன்னு தெரியல” என்றும் சொன்னார்.

(ஜுன் 30 - விந்தனின் நினைவு நாளையொட்டி, அவரதுக் கதை பிரசுரம் ஆகியிருக்கிறது.)

“உண்மை” இதழை வாங்கி வந்தக் கையோடு, அதில் இடம்பெற்றிருந்த, விந்தனின் “திருந்திய திருமணம்” கதையைப் படித்தேன். படித்தேன். படித்துக் கொண்டே இருக்கிறேன்.

சிரித்தேன். சிரித்தேன். சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

மகனின் தமிழ்ப் பற்று, சிகாமணி எனும் பெயரை முடிமணியாக்கி இருக்கிறது, எனத் தொடங்கும் நக்கல், நையாண்டிகள் கதை முழுவதும் தொடர்கின்றன.

ஒரு இடத்தில் தன் தாயிடம் பேசத் தொடங்கும் முடிமணி, “தாயே தலைவணங்குகிறேன்” என்று சொல்ல, அதற்கு அவன் தாய், “என்னடா இது நாடகத்திலே வேஷம் போடும் கூத்தாடிப் பயல்கள் மாதிரி? பிள்ளையா, லட்சணமா பேசேன்” என்று எரிந்து விழுகிறாள்.

முடிமணி தன் 'திருந்திய திருமணம்' (சீர்திருத்த திருமணம்) குறித்துத் தந்தையிடமும் ஆசிரியர் அறிவழகனாரிடமும் தொடர்ந்து விவாதிக்கிறான்.

இதன் விளைவாக அவனுள் பல சிந்தனைகள். இடையிடையே “சிக்கலான கேள்வி: சிந்திக்க வேண்டிய கேள்வி”கள் தலைகாட்டுகின்றன.

இதனால் முடிமணி, சிந்திக்கிறான். சிந்திக்கிறான். சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். முடிமணியின் தந்தை கூட, கொட்டாவி விடுகிறார். விடுகிறார். விட்டுக் கொண்டே இருக்கிறார்.  (இவற்றில் இருந்து தான் கலைஞரின் 'ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' எனும் வசனம் உருவானதாகவும் சொல்வார்கள்.)

திருந்திய திருமணம் தொடர்பாக முடிமணிக்குள் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து, காதலித்தப் பெண்ணை ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துக் கொண்டு ஓடி விடுகிறான்.

“திருந்திய திருமணம் வீழ்க; திருட்டுத் திருமணம் வாழ்க” அறிவழகனார் அறையலுற்றார்.

கதை முழுவதும் அன்றைய கழகத்தவரின் சீர்திருத்தத் திருமணம், அடுக்குமொழிப் பேச்சு, இழுத்துக் கொண்டு ஓடும் திருட்டுத் திருமணம்  குறித்து நக்கல், நையாண்டிகள் நிரம்பியுள்ளன.

“திருந்திய திருமணம்” படித்து முடித்தவுடன் எனக்குள்ளும் எழுந்தது சந்தேகம். “எப்படி இதை 'உண்மை'யில் போட்டாங்க?”

சிந்திக்கிறேன். சிந்திக்கிறேன். சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்…