புதன், 17 ஜூலை, 2019

பள்ளிகள் தோறும் நூலகம்; விழுப்புரம் எஸ்.பி.யை பாராட்டுவோம்

“மாற்றம் இங்கிருந்துதான் – மாணவர்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்” என்கிறார், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.சீ.ஜெயக்குமார் அவர்கள்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புற அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து காவல்துறை சார்பில் நூலகங்களை அமைத்து வருகிறார், விழுப்புரம் எஸ்.பி.


“கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இருந்து சாதியப் பிரச்சினைகள் மோதல்கள் உருவாகின்றன. இதைத் தடுப்பது எப்படி? வேறு வழியில் செல்லும் மாணவர்களின் சிந்தனையை ஒழுங்குப்படுத்துவது எப்படி?  என்றெல்லாம் யோசித்த போது தான் அரசுப் பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்துவது என முடிவு செய்தோம்” என்று விளக்கும், எஸ்.பி. ஜெயக்குமார்,

“இது நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. ஒரு சில இடங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உதவி இருப்பதாக தலைமை ஆசிரியர்களிடம் கடிதங்கள் வந்திருக்கின்றன” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இதுவரை 17 அரசுப் பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பெரிய மனதுகொண்ட பலரும் முன்வந்து நூல்களை வாங்கியும் தருகின்றனர்.

மகிழ்ச்சி.

பல இடங்களில் பள்ளி நேரம் முடிந்த பின்னரும் மாணவர்களும் அப்பகுதி இளைஞர்களும் நூலகங்களைப் பயன்படுத்துகிறார்களாம். வாசிப்பின் நேசிப்பு அதிகரித்து இருக்கிறது.

“இம்முயற்சிகளின் முழுப்பலன் இப்போது தெரியாவிட்டாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் தெரியும்” என்று சொல்லும் போது எஸ்.பி. அவர்களின் கண்களில் நம்பிக்கைத் தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டக் காவல்துறையின் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவு தெரிவிப்போம்.

இன்று காலை, எஸ்.பி. அவர்களை நேரில் சந்தித்து நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்...


(அருகில்: ADSP திரு‌.சரவணக் குமார் அவர்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக