வியாழன், 31 மே, 2018

                                                விழுப்புரம்நகராட்சி
 தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா நகராட்சி பேருந்து நிலையக் கடைகள் 01.08.1970 அன்று
அரசு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு என்.வி.நடராசன் அவர்களால்திறந்து வைக்கப்பட்டது.
மு.சண்முகம் எம்.எல்.ஏ.
நகராட்சி மன்றத் தலைவர்.

பெ.இ.பத்மநாப மேனன்
நகராட்சி ஆணையாளர்.

ந.சங்கிலிராஜ்
நகராட்சி பொறியர்
ச.தண்டபாணி
ஒப்பந்தக்காரர்.





கற்குவியலுக்கு இடையில் தான்,
இந்த அடிக்கல்லும் இருக்கிறது.

விழுப்புரம் திருவள்ளுவர் பஸ் நிலையக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பாகவே,
மேற்காணும் அடிக்கல்லை ஆவணப்படுத்தி விட்டேன்..!

- விழுப்புரத்தார்( கோ.செங்குட்டுவன்)

புதன், 30 மே, 2018

விழுப்புரம் திருவள்ளுவர் பஸ்நிலையம்

' திருவள்ளுவர் பஸ் நிலையம்'
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் ( இப்போதைய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்) வந்த நின்ற இந்த இடம், இப்படித்தான் அழைக்கப்பட்டது!

கீழே பஸ்நிலையம். மேலே ஓட்டுநர், நடத்துநர் ஓய்வறைகள்.
வெளியே, நேரு வீதியில் வாடகைக்கு கடைகள்.

கடைகளை மையப்படுத்திய இந்தக் கட்டடம், 1970 இல் திறக்கப்பட்டதாகும். திறந்து வைத்தவர்: அப்போதைய பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்கள்.

திருவள்ளுவர் பஸ் நிலைய நிழலில் ஒதுங்காத விழுப்புரம் வாசிகள் இருக்க முடியாது!

2000 ஆம் ஆண்டில் புதிய பஸ் நிலையம் வந்ததில் இருந்து எல்லாம் மாறியது.

 விழுப்புரம் பழைய  பஸ் நிலையம் குறிப்பாக திருவள்ளுவர் பஸ்நிலையம் தன் அடையாளத்தை இழந்தது!

பாழடைந்த அந்தக் கட்டடத்தின் முன்புறம் கடைகள் மட்டுமே இயங்கி வந்தன.

ஏறக்குறைய 50 ஆண்டுகளை நெருங்கிவிட்ட இந்தக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் எனும் நிலை

அண்மையில் அங்கிருந்த கடைகள் காலி செய்யப்பட்ட நிலையில்,
இப்போது அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறது விழுப்புரம் நகராட்சி..!

- விழுப்புரத்தார் ( கோ.செங்குட்டுவன்)




வெள்ளி, 25 மே, 2018

காடுவெட்டி குரு மறைந்தார்

2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்த நேரம்.

ஆண்டிமடத்தில் இருந்த அவரது தொகுதி அலுவலகத்தில், அவரை முதன் முதலாக சந்தித்தேன். குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக…

எங்கள் உரையாடல் பலமணி நேரம் நீடித்தது.

தமிழ்நாடு விடுதலைப் படை, வீரப்பன், தேவாரம் என் பல திசைகளிலும் என் நேர்காணல் பயணித்தது.

அவரோ அதற்கெல்லாம் சளைக்கவில்லை.

மேலும், டாக்டர் ராமதாஸ் மீது பழி சொல்பவனின் தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியதாக தகவல் வெளியான நேரம் அது. இதுபற்றியும் என் கேள்வி இருந்தது.

அவர் சட்டென்று பின் வரும் வகையில் விளக்கமளித்தார்:
‘'நாடோடியாக இருந்த இந்த சமுதாயத்தை ஆளுகின்ற சமுதாயமாகவும் இந்த சமுதாயத்தின் ஆதரவு இல்லாமல் இங்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பவர் டாக்டர் அய்யா தான். அவரைப் பற்றி ஒருவன் குறை சொல்கிறான் அவனையும் நாம் தலைவனாக ஏற்றுக் கொள்கிறோம் என்றால் நாம் உண்மையான வன்னியராக இருக்க முடியாது என்று தான் பேசினேனே தவிர யாருடைய தலையையும் எடுப்பேன் என்று பேசவில்லை.’

தன் தலைவர் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். பேட்டியின் இடையில் சொன்னார், ' அய்யாவை நாங்கள் தலைவராக அல்ல தெய்வமாகும் பார்க்கிறோம்.’

இப்படியான ஒரு முரட்டு பக்தரை, காடுவெட்டியாரை இழந்து நிற்கிறது அந்த இயக்கம்..!
- விழுப்புரத்தார் ( கோ.செங்குட்டுவன்)


திங்கள், 14 மே, 2018

மதம் மக்களின் அபின்

'மதம் மக்களுக்கு அபின்'
கார்ல் மார்க்ஸின் இந்த எழுத்து, ஏதோ குறிப்பிட்ட மதத்துக்கானது என்பது, நம் உள்ளூர்ப் பொதுவுடைமை நண்பர்களின் நம்பிக்கை!

பின்னே பாருங்களேன், சைவ வைணவத்தின் மீது விழுந்துப் புராண்டு புராண்டு எனப் புராண்டுவார்கள். தவறில்லை செய்யட்டும்!

ஆனால் மற்ற மதங்களின் மீது?

 விமர்சனங்களாவது எந்தளவுக்கு வைக்கின்றனர் என்பது கேள்விக்குறியே?

விமர்சனம் வைப்பது ஒரு பக்கமிருந்தாலும், சில நேரங்களில் மற்ற மதங்களை அங்கீகரிக்கவும் செய்யும் போது தான் மார்க்ஸின் எழுத்து நம் நினைவுக்கு வருகிறது.

எனது ' சமணர் கழுவேற்றம்' நூல் தயாராகிக் கொண்டிருந்த நேரம்.

விழுப்புரம் காந்தி சிலை அருகே, இதுபற்றி எனக்கும் பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவருக்கும் கடும் வாக்குவாதம்.

அப்போது அந்த நண்பர் சொன்னார், ' சமண பௌத்த மதங்கள் புரட்சிகரமானவை.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நான் அவரிடம் அமைதியாகக் கேட்டேன், ' மகிழ்ச்சி. அப்படியானால் உங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு இவற்றில் சேர்ந்து விடலாமே?'


புதன், 9 மே, 2018

தச்சூர் முருகன்


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள, தச்சூரில் கண்டெடுக்கப்பட்ட, பல்லவர் காலச் சிற்பங்கள் குறித்து, கடந்த மாதம் 13ஆம் தேதி என்னுடையப் பதிவினை நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.

அப்படி கண்டெடுக்கப்பட்டச் சிற்பங்களில் ஒன்றுதான், இணைப்பில் உள்ள முருகன் சிற்பம்.

இப்போது இவர் இருப்பதோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு கிடங்கில்.

பிரபல சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் கடத்தப்பட்டுக் கடல் கடந்துச் சென்றிருக்கிறார்.

இதற்கு உடந்தையாக இருந்தது யார்? இதற்காக எத்தனைக் கோடிகள் கை மாறின? எனும் விவரங்கள் எல்லாம் தெரியவில்லை.

இந்தச் சிலையை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவர ‘பொயட்ரி ஸ்டோன் விஜயகுமார் போன்ற நண்பர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் முடியவில்லை!

காரணம்? அமெரிக்க போலீஸ் கேட்பதெல்லாம், ‘இது உங்கள் நாட்டில் காணாமல் போனதுதான் என்பதற்கான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையைக் கொடுங்கள் என்பதுதான்.

இங்குதான், முதல் தகவல் அறிக்கையும் இல்லை: ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையே?

யாராவதுப் புகார் கொடுத்திருந்தால்தானே, போலிசும் வழக்குப் பதிவு செய்யும்?

சிலை காணாமல் போனது குறித்து இதுவரை எந்தப் புகாரும் இல்லை.

தெரிந்து கொள்ளுங்கள், நமது வரலாற்றுச் சின்னங்கள், கலைப்பொருட்கள், நம் கண்முன்னே எந்தளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதை..!

செவ்வாய், 8 மே, 2018

இரயிலை பார்க்க வந்த ஆடுகள்




விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனியில் பார்த்திருக்கிறேன்.
மந்தை மந்தையாக ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.

இன்று காலை, அந்த ஆடுகளுக்குச் சின்ன ஆசை.

எத்தனை நாள் தான் இரயில் நிலையத்துக்கு வெளியேயே சுற்றிக் கொண்டிருப்பது?

ஒரு மாற்றத்துக்காக இரயில் நிலையத்துக்குள் புகுந்து விட்டன.

சாவகாசமாக, தண்டவாளங்களில் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகள்,
இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதும்,
இரயில் எழுப்பும் சத்தத்தைக் கேட்டு பின்னோக்கி ஓடி வருவதும்,
பின்னர் இரயிலை நோக்கிச் செல்வதும்,
அழகான விளையாட்டு தான்!

பின்னர் ரயில்வே நிர்வாகம் நம்மிடமும் ஏதாவது கட்டணம் வசூலித்துவிடுமோ?  எனும் பயத்தோடு என்னவோ,
மீண்டும் குவார்ட்டர்ஸ் பக்கமே நடையைக் கட்டிவிட்டன!

புதன், 2 மே, 2018

கூவாகம் திருவிழா: அரவாணிகளுக்கு மட்டுமானதா?

கூவாகம்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்.
இங்குள்ள கூத்தாண்டவர், உலகம் முழுவதும் அறியப்பட்டவராக இருக்கிறார்.
இவர் குடிகொண்டிருக்கும் கோயிலின் வயது, அதிகப்பட்சமாக, 150 இருக்கலாம்!
1901இல் டபிள்யு பிரான்சிஸ் என்பவரால் வெளியிடப்பட்ட 'தென்னார்க்காடு மாவட்ட விவரங்க் குறிப்பி'ல் இக்கோயில் திருவிழா குறித்த குறிப்பு இருக்கிறது.
கூவாகம் கூத்தாண்டவர், திருவெண்ணெய் நல்லூர் சுற்றுவட்டார மக்களின் குல தெய்வமாவார்.
இப்பகுதியைச் சார்ந்த பலரும் தங்கள் குழந்தைகளுக்கு, கூத்தன், கூத்தாண்டவர் எனப் பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தங்களின் நேர்த்திக் கடனாக, ஆண்கள் இங்கு, கோயில் பூசாரி கையால் தாலி தரித்துக் கொள்கின்றனர்.
கூத்தாண்டவர் விளைச்சலுக்கான தெய்வமும் ஆவார்.
தேரோட்டத்தின் போது இதற்கான வெளிப்பாட்டினை நாம் பார்க்கலாம்.
கூத்தாண்டவர் கோயில் திருவிழா, நான்கைந்து கிராமங்களைச் சேர்ந்துக் கொண்டாடும் திருவிழா ஆகும்.
அனைத்துச் சாதியினரும் பங்கெடுக்கும் பண்பாட்டுத் திருவிழா.
வட தமிழகத்தில் பாரதம் எந்தளவுக்குத் தாக்கம் பெற்றிருக்கிறது என்பதற்கு, கூவாகம் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இங்கு அரவாணிகள் வருகை என்பது, 20 ஆண்டுகளுக்குள்ளாகத்தான்.
திருவிழாவில் அரவாணிகள் மட்டும் பங்கேற்கவில்லை. அரவாணிகளும் பங்கேற்கிறார்கள். இதுதான் உண்மை.
இவ்வளவுப் பின்புலத்தையும் மறைத்துவிட்டு,
கூவாகம் திருவிழா ஏதோ அரவாணிகளுக்கானத் திருவிழாவாக, சிலர்  உருவகப்படுத்த முற்படுவது வேதனைக்கு உரியது..!

விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)

செவ்வாய், 1 மே, 2018

மூடப்படுகிறது: விழுப்புரம் ரயில்வே பள்ளி




தெற்கு ரயில்வே சார்பில் 9 ரயில்வே பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன

இதில், தமிழ்நாட்டில் 8 பள்ளிகளும், கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒன்றுமாகும்.

தற்போது இந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாம்.

தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது ரயில்வே பள்ளிகளை நம்பியுள்ள பெற்றோரையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் நாட்டில் இயங்கிவரும் ரயில்வே பள்ளிகளில், விழுப்புரம் ரயில்வே இருபாலர் பள்ளியும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பள்ளி 1924இல் தொடங்கப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தை ஒட்டி, பரந்து விரிந்த நிலப்பரப்பில் இயங்கி வருகிறது.

விழுப்புரத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது, ரயில்வே இருபாலர் பள்ளி.

இப்போது, இந்த அடையாளத்தை இழக்கிறது விழுப்புரம்.

இது, வரலாற்றுச் சோகம் தான்..!

-விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)
(இணைப்பில்: இன்றைய தினகரன் செய்தி)