திங்கள், 30 டிசம்பர், 2019

விழுப்புரம் மாவட்ட தொல்லியல் தடயங்கள்

விழுப்புரத்தின் தொன்மையைப் பாதுகாப்பதில், ஆவணப்படுத்துவதில் நாம் எந்தளவிற்கு சிரத்தை எடுத்துக் கொள்கிறோமோ...

அதே அளவிற்கு சிரத்தையெடுத்து எழுத்தின் மூலம் தனது பங்களிப்பை செய்து வருகிறார்,

The new Indian express நாளிதழின் விழுப்புரம் செய்தியாளர் செல்வி கிருத்திகா சீனிவாசன் Krithika Srinivasan.
அருங்காட்சியகம் தொடர்பாக நமது முன்னைடுப்புகள் நம் தொடர் பயணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு கட்டுரையொன்று இன்றைய தினம் 30.12.2019 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்துள்ளது.
செய்தியாளர் அவர்களுக்கு நம் நன்றிகள்..!

டி.புதுப்பாளையம் கிராமத்தின் கதைச் சொல்லி!

டி.புதுப்பாளையம் கிராமம்.

அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் பின்னர் திமுகவில் இணைந்து விழுப்புரம் நகர மன்றத் தலைவராகவும் இருந்த, காலஞ்சென்ற எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் அவர்களின் சொந்த ஊர்.

நேற்று, அந்த ஊருக்குப் பயணம். அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சேட்டு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் பழக்கம்.

நல்ல கதைச் சொல்லியாக இருக்கிறார்.


இங்குக் கோயில் கொண்டிருக்கும் முனீஸ்வரர், அருகில் உள்ள நல்ல தண்ணீர் குளம் என்றழைக்கப்படும் "தாசி" குளம், குளக்கரையில் காணப்படும் கல்வெட்டுகள் பற்றியெல்லாம் நிறைய கதைகளைப் பறிமாறிக் கொள்கிறார்.


இந்தக் கதைகளில் வரலாறும் புதைந்து கிடக்கிறது.


குறிப்பாக, "தென்பேர் கிராமத்திற்கு அருகே வடபேர் எனும் கிராமம் இருந்து அழிந்தது. பின்னர் உருவான புதிய கிராமம் தான் இந்தப் புதுப்பாளையம் கிராமம்" என்கிறார் சேட்டு.



பதிவு செய்யப்பட வேண்டிய தகவல்!

புகைப்படங்கள்: கண சரவணகுமார் திருவாமாத்தூர். 

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

தென்பேர் கிராமத்தில்

தென்பேர் கிராமப் பெரியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்;


தங்கள் மண்ணில் கிடைத்த மகத்தான வரலாற்றுச் சின்னங்களை உரிய முறையில் பாதுகாத்து வருகின்றனர்.


பல்லவர் கால ஐயனார் முதல் நாயக்கர் கால ஆஞ்சநேயர் வரையிலான வரலாற்றுத் தடயங்கள் இம்மண்ணில் பதிந்துள்ளன.


இன்று 22.12.19 ஞாயிறு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நம்முடன் கிராமத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சுற்றி சுற்றி வந்தார்கள்.



திறந்தவெளியில் நிற்கும் சிற்பங்கள் முதல் கோயில் கொண்டிருக்கும் சிற்பங்கள் வரை சலிக்காமல் நமக்குக் காட்டினர்.


தங்கள் மண்ணின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல், உந்துதல் இவர்களுக்கு!


சிறியவர் முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

மகிழ்ச்சி. இவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

இம்மண்ணின் மைந்தர் ஆசிரியர் திரு. அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம்மை தென்பேர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல்…


கிராம முக்கியஸ்தர்களை ஒருங்கிணைத்து… அனைவரையும் ஒருங்கே பயணிக்க வைத்த இவர்தம் பாங்கு பாராட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.

தென்பேர் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று. எழுதுவோம்.


புகைப்படங்கள்: திருவாமாத்தூர் கண.சரவணக்குமார்.

சனி, 7 டிசம்பர், 2019

விழுப்புரத்தில் கல்மரப் பூங்கா

மகிழ்ச்சி...
வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம்...

திருவக்கரை கல்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் நம் கோரிக்கையைத் தொடர்ந்து,

" விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் கல் மரப் பூங்கா அமைக்கப்படும்" என நேற்று (07.12.19) அறிவித்து இருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.

கல் மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இந்த அறிவிப்பினை நாம் பார்க்கிறோம்!

மாவட்ட ஆட்சியர் அவர்களின் இந்த அறிவிப்பை வரவேற்போம். அவருக்கு நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.

இந்த விசயத்தை முக்கியப் பிரச்சினையாகக் கருதி, முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது என்பதுடன் மட்டுமல்லாமல்

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற

மதிப்பிற்குரிய நம் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!

இணைப்பில்: இன்றைய (08.12.19 ஞாயிறு) தினமணி மற்றும் தமிழ் இந்து நாளிதழ் செய்திகள்...

                      தமிழ் இந்து 08.12.19

                      தினமணி 08.12.19

நன்றி:
திரு. நீலா நீலவண்ணன்.
திரு. இல.அன்பரசு.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

திருவக்கரை கல்மரங்கள்: செம்மண் குவாரிகளால் சுரண்டப்படும் அவலம்!

கொடுமையாகத்தான் இருக்கிறது..!

அண்மையில், விழுப்புரத்தை அடுத்துள்ள ஆலாத்தூர் கிராமத்திற்குச் சென்றிருந்தோம்.

சின்னஞ்சிறு பாதை. செம்மண் அடித்திருந்தனர்.

சற்று உற்றுப் பார்த்தால், சாலையின் நடுவிலும் பக்கவாட்டிலும் ஏராளமானக் கல் மரத் துண்டுகள்!

திருவக்கரை பகுதியில் இருந்து வந்திருக்கின்றன.

அண்மையில், விக்கிரவாண்டி ரயில் பாதை ஓரங்களிலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் கல் மரங்கள் காணப்படுவது பற்றி நான் வெளியிட்டு இருந்த காணொளி நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்!

மாபெரும் வரலாற்று ஆவணங்களான கல் மரங்கள் இப்படி சுரண்டப்பட்டு வருகின்றன.

இதையெல்லாம் யார் தடுப்பது?

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நேற்று 05.12.2019 வியாழனன்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருக்கிறேன்.

பார்க்கலாம்..!

மாவட்ட ஆட்சியருக்கு மனு தொடர்பான பத்திரிகை செய்திகள்..

                      தமிழ் இந்து 06.12.19

                        தினமணி 06.12.19

                   மாலை முரசு 06.12.19

        The New Indian express 07.12.19

                        தினமலர் 07.12.19

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

பம்பை ஆறு

“வெண்ணெய் உருகுமுன் பெண்ணெய் பெருகும்” என்பதெல்லாம் பழைய மொழியாகிவிட்டது என்பது மட்டுமல்ல, தென் பெண்ணைக்கு இனிப் பொருந்துமா எனத் தெரியவில்லை?


ஆனால், இந்த முதுமொழி, பம்பை ஆற்றுக்கு முற்றிலும் பொருந்தும் போலிருக்கிறது!

பாருங்கள்: இன்று 01.12.2019  ஞாயிறு காலை11 மணியளவில் திருவாமாத்தூர் அடுத்த எடப்பாளையம் பகுதியில் பம்பை ஆற்றைக் கடந்தோம். அப்போது ஆற்றில் தண்ணீர் இல்லை.

அப்போதே எதிர்ப்பட்ட பெண்மணி ஒருவர் சொன்னார்: “ஆற்றில் தண்ணீர் வரப் போகிறது. சீக்கிரம் திரும்பி விடுங்கள்”.

தண்ணீரே இல்லாத ஆற்றில் எப்படி அதற்குள் தண்ணீர் வரும்? எமக்குள் ஒரு அலட்சியம் தான்.

சுமார் இரண்டு மணி நேரம், நமது களப் பயணம் சேற்று வயலில், ஆலாத்தூரின் அன்பு நண்பர்களுடன் தொடர்ந்தது.

திரும்பி வந்து நமக்குத் தூக்கிவாரிப் போட்டது! பம்பை ஆற்றில் முழங்காலுக்கும் மேலே தண்ணீர் கரைபுண்டது!




இன்னும் வருமாம்.
சீக்கிரம் என நண்பர்கள் விரைவுப்படுத்தினர்.


கரை சேர்ந்தோம்..!

வெண்ணெய் உருகுமுன் பம்பை பெருகும்..!


ஆலாத்தூர் கிராமம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று 01.12.2019 ஞாயிறு நீண்டப் பயணம்..!


ஆலாத்தூர் தொடங்கி, திருவாமாத்தூர், எடப்பாளையம் எனத் தொடர்ந்தது!


சேற்றிலும் சகதியிலும் உளுந்து வயல்களிலும் சவுக்கைத் தோப்புகளிலும் நம் பயணம்...

ஒரு வித்தியாசமான அனுபவம் தான்!


இதோ இந்த சிலையைப் பாருங்கள்: இதோ இந்தக் கல்லைப் பாருங்கள்; இது என்னவாக இருக்கும்..?


இவர்களின் வரலாற்று ஆர்வம் ரெக்கை கட்டிப் பறந்தது!

எப்படியும் நான்கு மணி நேரத்துக்கு மேல் கிராமங்களின் ஒவ்வொரு மூலைக்கும் நகர்ந்து சென்றோம்.

ஆலாத்தூர் பெரியவர் திரு.ஜெயராமன் அவர்களும் அந்தக் கிராமத்தின் ஆர்வமிக்க இளைஞர்களும் தான் எங்களின் உந்து சக்தி!


தங்கள் பகுதியின் வரலாறுத் தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இன்று நம்மை வழி நடத்தினர்.

இந்த ஆர்வம் ஒவ்வொரு பகுதியிலும் இருக்க வேண்டும்... இருந்தால்... நிச்சயம் அந்தந்தப் பகுதியின் வரலாறுகள் உயிர்த்தெழும்!


ஆலாத்தூர் நண்பர்களுக்கு நம் நன்றிகள்!

வழக்கம் போல சளைக்காமல் இன்றும் உடன் பயணித்த விஷ்ணுவுக்கும் நன்றி!


குறிப்பாக, ஆலாத்தூர் தடயங்களை நமக்கு அடையாளப்படுத்திய நண்பர் நித்தியானந்தம் அவர்களுக்குச் சிறப்பு நன்றி..!

வேலா சிறப்பு பள்ளி

வேலா சிறப்பு பள்ளி…

விழுப்புரம் – செஞ்சி சாலையில் லட்சுமிபுரத்தில் சிறப்புடன் இயங்கி வருகிறது.

எனக்கு இந்தப் பள்ளியுடனானத் தொடர்பு என்பது 20 ஆண்டுகளைக் கடந்தது ஆகும்.

திரு.மோகன் – இவரது இணையர் ஆகியோரின் இணையற்ற உழைப்பால், தன்னலமற்ற தொண்டினால்,
காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இந்த சிறப்புப் பள்ளி இன்று உயர்ந்து நிற்கிறது.

நம் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்..!


வேலா சிறப்புப் பள்ளியில், மன வளர்ச்சி குன்றிய ஆண்களுக்கான தொழிற் பயிற்சி மையத்தின் தொடக்க விழா இன்று 01.12.2019 ஞாயிறு காலை நடந்தது. மாற்றுத்திறனுடையோர் துறையின் மாவட்ட அதிகாரி உள்ளிட்ட பெரியவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இவ்வினிய நிகழ்வில் நாமும் பங்கேற்று வாழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

வேலா நிறுவனம் மென்மேலும் வளர நம் வாழ்த்துகள்..!

ஞாயிறு, 17 நவம்பர், 2019

எமபுரமா... விழுப்புரம்..?

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று…

“எமப்புரமான விழுப்புரத்தில் பணியாற்றுவதே சவால் தான்”

பத்திரிகையாளர் நண்பர் நீலவண்ணன்
அவர்களின் பதிவு இது!

விழுப்புரத்துக்கு என்று எவ்வளவோ பெருமைகள். இதையெல்லாம் பொறுக்க மாட்டாத எவனோ ஒரு வழிப்போக்கன் எப்பவோ சொல்லிச் சென்றது, “விழுப்புரம் எமப்புரம்”.

உண்மையில், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஒரு சொர்க்க பூமி!

இங்குப் பணியாற்றிய வருவாய், காவல் துறை அதிகாரிகள் பலரும் தங்கள் பணிக்காலத்திற்குப் பிறகு இங்கேயே செட்டிலாகி இருக்கின்றனர்.

ஏன், கேரளாவைச் சேர்ந்த டிஜிபி ஒருவரே விழுப்புரத்தில் செட்டிலானார் (அவர் இப்போது உயிருடன் இல்லை) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

விழுப்புரம் மாவட்டத்தின் உள்பகுதியிலும் கிழக்குக் கடற்கரை சாலையிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்த அதிகாரிகள் பற்றி பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியாதது இல்லை!

அதே நேரம், எதற்கும் ஆசைப்படாமல் யாருக்கும் கார் கதவினைத் திறந்துவிடாமல் யாரைப் பார்த்தும் கூழைக்கும்பிடு போடாமல்…

கடுமையான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்த காலமே விழுப்புரத்தில் சிறப்புடன் பணியாற்றிச் சென்ற அசோக் வர்தன் ஷெட்டி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் ராஜீவ் குமார் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளையும் பார்த்த வரலாறும் விழுப்புரத்துக்கு இருக்கிறது.

அன்பு நண்பரே… அரசுத்துறை அதிகாரிகள் குறித்த உங்களின் பார்வை எப்படியும் இருக்கலாம். உங்கள் அனுபவத்தின் பாற்பட்டது. அதில் நாங்கள் தலையிட முடியாது.

அதற்காக, வந்தாரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும், அதுவும் வளமுடன் வாழ வைக்கும் விழுப்புரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: அன்புடன் வேண்டுகிறேன்!

நண்பரே, முடிந்தால் உங்களால் குறிப்பிடப்படும் அந்த அதிகாரி, தனதுப் பணிக்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டார் என பத்திரிகையில் எழுதுங்கள்! எழுதமுடியும்! எழுதலாம்!

விழுப்புரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியரான திரு.அசோக் வர்தன் ஷெட்டி வந்த புதிதில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும் ஓராண்டில் அவர் ஏன் தூக்கப்பட்டார் என்பதையும் நேர்மையாக நான் பதிவு செய்து இருக்கிறேன்!

அன்பு நண்பர் நீலவண்ணன், விழுப்புரத்தை "எமபுரம்" என்று குறிப்பிட்டதால் தவிர்க்க முடியாத பதிவு இது!

திங்கள், 11 நவம்பர், 2019

எஸ்.மேட்டுப்பாளையம் - குறியீடுகளுடன் பானை ஓடுகள்

அடடா… மகிழ்ச்சி… மகிழ்ச்சி…

நமக்கு மட்டுமல்ல… தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தான்!

கடந்த நவம்பரில் நமது களப் பயணத்தை செ.கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கினோம். இதோ… ஓராண்டாகிறது… இன்னமும் தொடர்கிறது, நம் பயணம்!

செ.கொத்தமங்கலம் தொடங்கிப் பல இடங்களில் உடைந்தத் தாழிகளை, கருப்பு சிவப்பு ஓடுகளின் சில்லுகளைத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக எழுத்துப் பொறிப்புகளைக், குறியீடுகளை நம்மால் (இங்கு நம்மால் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்) காண இயலவில்லை.

அந்த ஏக்கத்தை எஸ்.மேட்டுப்பாளையம் இப்போது தீர்த்து வைத்துள்ளது.


முழுமையானத் தாழிகளை நம்மால் பார்க்க முடிந்தது.

குறியீடுகளுடன் கூடிய ஓடுகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி தானே..!


கி.மு.2-3 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஏறக்குறைய 2300 ஆண்டுகள்!

தமிழ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது பூவரசங்குப்பத்தை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம்.

ஓடுகளின் மீது காணப்பட்டவை கீறல்கள் அல்ல குறியீடுகள் தான் என்பதில் தொடங்கி நமது அனைத்து விதமான ஐயங்களையும் தீர்த்து வைத்து, நமக்கு உதவியாக இருந்த, இருந்து வருகின்ற

தமிழகத்தின் தொல்லியல் அறிஞர் பெருமக்களான மதிப்பிற்குரிய திரு.ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.து.துளசிராமன் அவர்களுக்கும் நாம் பெரிதும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம்.

குறியீடுகள் மட்டுமல்ல… பிற்கால எழுத்தமைதிக்குச் (15-16ஆம் நூற்றாண்டு)சான்றாக விளங்கக் கூடிய ஓடும் கண்டறிந்து இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
             The new Indian express 07.11.19
                    தமிழ் இந்து 07.11.19