வியாழன், 14 டிசம்பர், 2023

தேவனூர் நெடுங்கல்

தேவனூர்... 

விழுப்புரம் – திருக்கோவலூர் சாலையில், அரகண்டநல்லூருக்கு அடுத்து வடக்காக செல்ல வேண்டும். தேவனூரை அடைந்தாலும் கிராமத்தின் கிழக்கில் சுமார் 2 கி.மீ. பயணிக்க வேண்டும். 

விழுப்புரம் – காட்பாடி ரயில் பாதை குறுக்கிடும். அதையும் கடந்து, ஏரிக்கரையின் மீது பயணம்....

நீர் நிரம்பி, அழகாகக் காட்சியளிக்கிறது தேவனூர் ஏரி. இதன் முடிவில், வலது பக்கம் சற்றே திரும்பிப் பார்க்கிறோம்...

அட... விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்தோங்கி நிற்கும், தட்டையான ஒற்றைப் பாறை! நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது! நம்மை மட்டுமல்ல; உலகின் பார்வையையும் கவர்ந்துள்ளது இந்த ஒற்றைப் பாறை!

இறந்தவர்களின் நினைவாக அல்லது அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நடப்படும் குத்துக்கல் எனப்படும் நெடுங்கல்!

இதனைச் சுற்றிலும் கல் வட்டங்களும் இருக்கின்றன. இதன் வயது 5000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

உலகிலுள்ள நெடுங்கல் வரிசையில் இடம்பிடித்துள்ளது, தேவனூர் நெடுங்கல்!

சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளது. அவற்றை ஓரளவுக்கு அகற்றி அருகில் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார் நண்பர், ஆசிரியர் சிலம்பரசன் அவர்கள்.

பிரம்மாண்டப் பாறையின் ஒரு பக்கம் உடைந்து போய் இருக்கிறது. மேலே, இரு விரிசல்கள்! ஆம்: எத்தனை மழை, புயல், வெய்யில் அனைத்தும் இத்தனை ஆண்டுகாலம் சந்தித்து இன்றும் நின்று இருக்கிறதே! 

நினைவுச் சின்னத்தின் மீது எழுப்பப்பட்ட மாபெரும் வரலாற்று நினைவுச் சின்னம் இது.

1878இல் வெளியிடப்பட்ட தென்னார்க்காடு மாவட்ட  கையேட்டில், தேவனூர் நெடுங்கல் இடம்பெற்றுள்ளது.

145 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை இதைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை?

உண்மையில் இது பாதுகாக்கப்பட வேண்டும்... பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும்..!

(இன்று 14.12.23 வியாழக்கிழமை உடன் வந்து உதவிய நண்பர், ஆசிரியர் திரு.சிலம்பரசன் அவர்களுக்கு மிக்க நன்றி!)

திங்கள், 2 அக்டோபர், 2023

மெச்சத்தகுந்த பணியாற்றியவர் விருது - விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து 17 ஆண்டுகளாகக் களத்தில் நிற்பதற்காக...

விழுப்புரத்தில் நேற்று (01.10.23 ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற, விழுப்புரம் கொண்டாட்டம் நிகழ்வில், 

"மெச்சத் தகுந்தப் பணியாற்றியவர்"  விருது வழங்கிச் சிறப்பித்த, நண்பர் நூ.ரஃபி உள்ளிட்ட டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் நண்பர்களுக்கு நன்றிகள்!




சனி, 12 ஆகஸ்ட், 2023

எசாலம் செப்பேடு

 சிவபெருமானின் திருவடிகளில் பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்த இராஜேந்திர சோழரின் பிறந்த நாள் இன்று 12 ஆகஸ்ட் ...

--------------------------------------------------------------------

விழுப்புரம் மாவட்டம், எசாலம், இராமநாத ஈஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 


"எசாலம் செப்பேட்டின்"‌‌ காலம்: 

பொது ஆண்டு 1027 


கண்டெடுக்கப்பட்ட நாள்:

11.08.1987


செப்பேட்டின் தற்போதைய இருப்பிடம்: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலகம், எழும்பூர், சென்னை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


எசாலம் செப்பேட்டின் வடமொழி சுலோகத்தின் ஒரு பகுதி, இராஜேந்திரச் சோழரை இப்படியாகப் புகழ்கிறது...

*******************************************


“ராஜராஜனுடைய மகனான ராஜேந்திர சோழன் சௌந்தர்யத்தின் திருமாளிகை. வீரத்தின் விசால விளையாட்டுத் திடல். துணிவு, பேரறிவு, காதல், கருணை போன்றவற்றின் பிறப்பிடம். உலக உயிர்களை மகிழ்விக்கும் சக்ரவர்த்தி. கல்வியாகிய நதிக்குக் கடல் போன்றவன். உதயத்தின் இருப்பிடம்.


சாளுக்கிய அரசனான ஜெயசிம்மனை போர்க்களத்தில் தோற்கடித்து அவன் புகழை மங்கச் செய்தான். வீரம் நிறைந்த தம் படைவீரர்களாலும் கீர்த்தியாலும் திசைகளை மறைத்தான். எடுப்பான நகில்களை உடையவளும் குணங்கள் நிறைந்தவளுமான கங்கையை தன் நாட்டிற்குக் கொண்டு சென்றான். செல்வத்தை அடைந்த அவன் கடினமின்றியே கங்கை நீரை பெற்றதினால் ஆகாய கங்கையைக் கொண்டு வந்த பகீரதனை வென்றவன் ஆனான்.


நற்குணங்களின் தொகுதியான ராஜேந்திர சோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினான். சிவபெருமானின் திருவடிகளில் பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்தான்.”





ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

விழுப்புரம் அருங்காட்சியகம்: ஐஏஎஸ் அதிகாரி நேரில் ஆய்வு

 திருமிகு. ம.அரவிந்த் ஐஏஎஸ் அவர்கள்.. தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை ஆணையர்... இன்று 6.8.23 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுப்புரம் வருகை தந்தார்!

சர்க்யூட் ஹவுசில் ஆணையரைச் சந்தித்த நான், 2005ஆம் ஆண்டில் இருந்து அருங்காட்சியகத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை எடுத்துச் சொன்னேன்...

உன்னிப்பாகக் கவனித்த ஆணையர், “வருவதற்கு முன்பாகக் கூட உங்கள் மின்னஞ்சல் பார்த்துவிட்டு தான் வந்தேன்” என்றார். மகிழ்ச்சி!


தொடர்ந்து, பெருந்திட்ட வளாகத்தில் ஏற்கனவே அருங்காட்சியகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆணையர் பார்வையிட்டார். 




பின்னர், கோலியனூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...

ஆனாலும், இன்னும் ஏதாவது இடங்கள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்துங்கள் என வருவாய்த் துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்துப் புறப்படும் போது அவரிடம் சொன்னேன்: விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகிறது. இடத்தை முடிவு செய்து பணிகளை விரைவுப்படுத்துங்கள் சார்.”

“கண்டிப்பாக” என்றார். நம்முடைய கால் நூற்றாண்டுக் கனவு நனவாகும் அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்..!

(நாள் முழுவதும் உடனிருந்து புகைப்படங்கள் எடுத்து உதவிய நண்பர் ஜவகர் அவர்களுக்கு மிக்க நன்றி!)


ஞாயிறு, 30 ஜூலை, 2023

விழுப்புரம் அருங்காட்சியகம்: துறையின் திடீர் கோரிக்கை

 பெரிய அளவிலான அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் வேண்டும்.. அருங்காட்சியகங்கள் துறை திடீர் கோரிக்கை!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அவர்கள், இப்படி ஒரு கோரிக்கையை அண்மையில் முன்வைத்திருக்கிறார்!

2022 ஜனவரியில் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட இடம் தான் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் இருப்பது.

எல்லாம் முடிந்து, நிலநிர்வாக ஆணையரின் அனுமதிக்காக மட்டுமே காத்திருக்கும் சூழலில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து அருங்காட்சியகங்கள் துறை இப்படியான ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது.

பெரிய அளவிலான அருங்காட்சியகம் எனவே கூடுதல் இடம் தேவை: ஒருவேளை நியாயமானது தான்! ஆனால், அவர்கள் சொல்லியிருக்கும் காரணம் தான் விசித்திரமானது.

பெருந்திட்ட வளாகம் நெடுஞ்சாலையில் இருந்து உள்ளடங்கி இருப்பதால் பார்வையாளர்கள் வருவதற்குக் குறைவான வாய்ப்பு இருக்கிறதாம்!

அடப்பாவமே! இங்கேயே பார்வையாளர்களுக்கு வாய்ப்பு குறைவு என்றால், விழுப்புரத்துக்கு வெளியே தேசியநெடுஞ்சாலையில் வைத்தால் யார் வருவார்கள்?

‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என ரோட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியதுதான்!

இதையெல்லாம் அருங்காட்சியகத் துறைக்கு யார் தான் புரிய வைப்பது?

ஆனாலும் ஊதுகிற சங்கை ஊதுவோம் என்று அருங்காட்சியகங்கள் துறை ஆணையருக்கு மின்னஞ்சல் ஒன்றை நேற்று (29.07.23)  அனுப்பி இருக்கிறேன்..!

அதுதொடர்பான இன்றைய 30.07.23 பத்திரிகை செய்திகள்... 






சனி, 29 ஜூலை, 2023

விழுப்புரம் அருங்காட்சியகம்: 2 ஏக்கர் நிலம் தேவை!

அனுப்புநர்:

எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்,

ஒருங்கிணைப்பாளர்:

அருங்காட்சியகம் அமைப்பு - கூட்டமைப்பு,

விழுப்புரம்.

அலைபேசி: 9944622046.


பெறுநர்:

திருமிகு. ஆணையர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை,

சென்னை.


மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆணையர் அவர்களுக்கு,

பொருள்: விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான மாற்று இடம் எனும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோருதல் - விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கக் கோருதல் தொடர்பாக.


வணக்கம்.

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைய வேண்டும் என்பது எங்களின் கால்நூற்றாண்டைக் கடந்த கனவு. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த 4.8.2022 அன்று ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 


இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டாகப் போகும் நிலையில் கடந்த 11ம் தேதி அன்று மரியாதைக்குரிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து அருங்காட்சியகப் பணிகளைத் துரிதப்படுத்தக்கோரி மனு அளித்தேன். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் தற்போது தீவிரப்படுத்தி இருக்கிறது.


இந்நிலையில் மதிப்பிற்குரிய ஆணையர் அவர்களின் கடிதம் ஒன்று, கடலூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் அவர்களின் மூலமாக கடந்த புதனன்று (26.07.2023) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்ததாகவும் அதில், "விரிவான புதிய அருங்காட்சியகம் அமைவதற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிகிறேன்.


மேலும், "தற்போது பெருந்திட்ட வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் நெடுஞ்சாலையில் இருந்து உள்ளடங்கி இருப்பதால் பார்வையாளர்கள் வருவதற்குக் குறைவான வாய்ப்பு இருப்பதாகவும்" தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் அறிகிறேன்.


விழுப்புரத்தில் அருங்காட்சியகத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டாகிவிட்டது.


நிலநிர்வாக ஆணையர் அவர்களின் முன்நுழைவு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு மட்டுமே நிலுவையில் உள்ளன. இவையும் கிடைத்துவிட்டால் பணிகளைத் தொடங்கி விடலாம். இதற்கான நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் துரிதப்படுத்தி இருக்கிறது.


விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் த.மோகன் இ.ஆ.ப. அவர்கள் கடந்த 2021 செப்டம்பரில் அரசுக்குப் பரிந்துரை செய்தார். 


07.01.2022 அன்று அருங்காட்சியகங்கள் துறை உதவி இயக்குநர் திருமதி. துளசிபிருந்தா அவர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் 12.01.2022 அன்று விழுப்புரம் வருகை தந்த தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் திரு.எஸ்.ஏ.இராமு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். 


இதன் பின்னரே விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேற்காணும் நிகழ்வுகள் நடந்தேறி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது திடீரென அருங்காட்சியகம் அமைக்க புதிதாக இடம் கேட்பது என்பது பணிகளை மேலும் தாமதப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.


தற்போது விழுப்புரத்தில் அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பெருந்திட்ட வளாகம், நகரத்தின் மையப்பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இடமாகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களில் சில நூறு பேர்களாவது அருங்காட்சியகம் பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


மாவட்ட மைய நூலகம் இந்த வளாகத்திலேயே இருப்பதால் கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் எளிதில் வந்து செல்லுவதற்கு ஏதுவான இடமாகவும், பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இருக்கிறது.


புறநகரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர் வருகையே கேள்விக்குறியாகிவிடும் என்பது தான் நடைமுறை உண்மை. 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை‌' எனும் நிலை ஏற்படலாம்! பார்வையாளர்களை அருங்காட்சியகம் நோக்கி இழுத்து வர (இதுதான் எதார்த்தம்) கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.


எனவே, மரியாதைக்குரிய ஆணையர் அவர்களின் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்ய பணிவுடன் வேண்டுகிறேன். 


அனைத்து நிலைகளிலும் ஏற்புடையதாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கும் பணிகளைத் தொடங்குவதற்குத் தயாராகவும் இருக்கின்ற, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அருங்காட்சியகம் அமைவதற்கும், அதற்கானப் பணிகளை துரிதப்படுத்தவும் ஆவண செய்யுமாறும் மதிப்பிற்குரிய தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி!


இப்படிக்கு,


(கோ.செங்குட்டுவன்)

ஒருங்கிணைப்பாளர்,

அருங்காட்சியகம் அமைப்பு- கூட்டமைப்பு, விழுப்புரம்.

22.07.23

விழுப்புரம்.

நகல்:


உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

விழுப்புரம்.


உயர்திரு. மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,

விழுப்புரம்.


இணைப்பு:

விழுப்புரம் அருங்காட்சியகம் தொடர்பான எமது முன்னெடுப்புகள் சில...









திங்கள், 24 ஜூலை, 2023

வரலாற்றில் பேரங்கியூர் கிராமம்

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென்பெண்ணை ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் கிராமம் தான் பேரங்கியூர்.


இந்த கிராமத்துக்குள் நுழைந்ததுமே என் சிறுவயது நினைவுகள் என்னை வந்து தொற்றிக் கொள்கின்றன.

ஆமாம். பேரங்கியூர் கிராமம் என் தாத்தா வீரபத்திர படையாட்சி பாட்டி தனலட்சுமி ஆகியோர் வாழ்ந்த ஊர். என் தாய் விட்டோபாய் பிறந்த மண். இந்த படத்துல குட்டிப் பையனா நின்னுட்டு இருக்கிறது நான் தான்.

சின்ன வயசுல ஸ்கூலுக்கு லீவு விட்டவுடன் இங்க வந்துடுவோம். அடுத்த ஒரு மாதம் நம் வாசம் இங்கதான். அந்த நினைவுகளை அசைபோட்ட படி இதோ பேரங்கியூருக்குள்ள நான் பயணிக்கிறேன்.

சின்ன சின்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்னமும் கிராமம் எனும் தனது தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது இந்தப் பேரங்கியூர். அப்போது பார்த்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி போஸ்ட் ஆஃபீஸ்.

பெரிதும் விவசாயத்தையே நம்பி இருக்கும் இந்தக் கிராமம் ஏரி மற்றும் ஆற்று நீரால் பயனடைந்து வருகின்றன. கிராமத்தின் மொத்த ஆயக்கட்டு 129.190 எக்டேர் என்கிறது இதோ இந்த பழைய கணக்கு ஒன்று.


நிலத்தின் வளத்துக்கு மட்டும் அல்ல வரலாற்றின் சிறப்புக்கும் உரியது பேரங்கியூர். இதோ இங்கிருக்கும் பல்லவர் கால அதாவது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜேஷ்டா மற்றும் சோழர் கால சப்த மாதர்களின் சிற்பங்களே இதற்கு சாட்சி.

இங்கிருக்கும் வைணவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்.

கோயிலின் வாயிலில் பார்த்தோம். பெண் தெய்வத்தின் சிற்பம். இவர் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

கிராம மக்களின் வழிபடு தெய்வமாக விளங்குகிறாள் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன். இங்கும் கூட பல்லவர் கால கொற்றவை காட்சி அளிக்கிறாள்.

பேரங்கியூர் கிராமத்தின் வரலாற்றுச் சிறப்பை நீடித்து நின்று இன்றும் சொல்கிறது அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்.

பராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அருளே உருவாகக் காட்சியளிக்கிறார் திருமூலநாதர். இதோ அன்னை அபிராமி அழகே உருவாகக் காட்சியளிக்கிறாள்.

சோழர் கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலின் திருச்சுற்றில் அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் கோயில் திருச்சுற்றில் கல்லெழுத்துகளும். இவ்வூர் பேரிங்கூர் என்று அழைக்கப்பட்டு வந்தது உள்ளிட்ட பல தகவல்களைச் சொல்கின்றன இந்தக் கல்வெட்டுகள்.‌

இதோ இங்க பாருங்களேன். சோழர் கால அளவுகோல்.

அப்புறம் இணையர் ஒருவருடன் மட்டும் காணப்படும் ஐயனார் சிற்பம். மகாராஜ லீலாசனத்தில் அற்புதமாக அமர்ந்திருக்கும் இந்தச் சிற்பத்தின் காலம் பல்லவர் காலத்தின் இறுதி மற்றும் சோழர் கால தொடக்கம் னு சொல்லலாம். ஆமாம் ங்க ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவர் இந்த ஐயனார்.

2019 ஆகஸ்ட் இறுதியில் இந்தச் சிற்பத்தை ஆய்வு செய்து இந்த வரலாற்றை பேரங்கியூர் மக்களிடம் சொன்னோம். 

இப்ப இந்தக் கோயிலுக்கானத் திருப்பணிகள் வேகமா நடந்துட்டு வருது. 17.09.23 ல கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து இருக்காங்க.

பழமைவாய்ந்த ஐயனார் சிற்பம் தான் இங்க மூலவரா இருக்கப் போகிறார். மகிழ்ச்சி தான்.

ஐயனார் கோயிலுக்கானத் திருப்பணிகளுக்குப் பலரது உதவியையும் இவங்க நாடி இருக்காங்க.

இன்னும் இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் இந்த கிராமத்தில் இருக்கலாம். மீண்டும் மீண்டும் பேரங்கியூர் வரலாம். நான் மட்டும் இல்ல. நீங்களும் தான்.


(பேரங்கியூர் வரலாறு குறித்த அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளிவிரிவான காணொளி கீழ்க்காணும் இணைப்பில்...)


https://youtu.be/v68q6EMUeMM

 


வியாழன், 20 ஜூலை, 2023

ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் - வாதானூர் - விழுப்புரம் மாவட்டம்

அடடா... ஒரே இடத்தில் இத்தனை உறைகிணறுகளா..?

வாதானூர்...

புதுவை எல்லையில் அமைந்துள்ள தமிழகக் கிராமம். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.

இங்கிருக்கும் அத்திக்குளம். இதில் தான் இந்த அதிசயம்... கண்களுக்கு எட்டியவரையில் எப்படியும் 20க்கும் மேற்பட்ட உறைகிணறுகள். இன்னும் இன்னும் ஏராளமாக இருக்கக்கூடும்!

நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளத்தைச் சீரமைக்கும் போது தான் இந்த உறைகிணறுகள் வெளிப்பட்டு இருக்கின்றன.

இவற்றின் காலம், சங்ககாலம் என்று சொல்லலாம். ஆம். 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை.


நீரைத் தேக்கி வைக்கவும் தேக்கி வைத்த நீரை தெளிய வைத்து அருந்தவும் ஆன ஒரு ஏற்பாடு தான் இந்த உறைகிணறுகள்!


ஒரே இடத்தில் இத்தனை உறைகிணறுகளா? நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளன இந்த உறைகிணறுகள். இந்த இடத்தில் இன்னமும் கூட நிறைய இருக்கலாம்! இருக்கின்றன. “உங்கள் பணி இவற்றை சிதைக்காமல் இருக்கட்டும்” நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கேட்டுக் கொண்டேன்.


விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் கூட இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த உறைகிணறுகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...


இத்தருணத்தில் உரிய நேரத்தில் தகவல் அளித்த ஐயா அண்ணமங்கலம் முனுசாமி, உடன் இருந்து ஒத்துழைத்த வாதானூர் ஊராட்சி மன்றத் தலைவர் க.இளவரசன் ஆகியோருக்கும், வரலாற்றை ஆர்வமுடன் கேட்டறிந்த கிராமப் பொதுமக்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றிகள்..!

                            தினத்தந்தி

                              21.07.23

https://m.dinamalar.com/detail-amp.php?id=3381730 


                     இந்து தமிழ் திசை

                              22.07.23

                            தினகரன்

                              23.07.23

                          தினமணி

                             24.07.23


செவ்வாய், 4 ஜூலை, 2023

தினகரனில் எனது அறிக்கை - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

1991 ஜுன் மாதத்தில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல் மிகவும் தீவிரமாக நடந்து வந்தது.


இதனைக் கண்டித்து நெம்புகோல் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.


மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் திமுக பிரமுகர் பி.செல்லையன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்போது ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழல் இல்லாமல் போய்விட்டது.


இதற்கிடையில் நாங்கள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரசார் தகவல் பரப்பினர். இதனைக் கண்டித்தும் மாற்று தேதியை அறிவித்தும் நெம்புகோல் செயற்குழு உறுப்பினரான எனது அறிக்கை, 


29.06.1991 தினகரன் நாளிதழில் "செங்குட்டுவன் அறிக்கை" என்றே தலைப்பிடப்பட்டுச் சிறப்பாக கீழ்க்காணும் பிரசுரமானது: ஆனால் எனக்கு அப்போது தெரியாது, அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பத்திரிகைக்கு நாம் செய்தியாளர் ஆவோம் என்று!



திங்கள், 3 ஜூலை, 2023

கணையாழியில் பிசுரமான கடிதம் - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

1991 மே 21இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்...


இதனைத் தொடர்ந்து ஈழப்போராளிகளை விமரிசித்து "கணையாழி" மே மாத இதழில் கட்டுரை ஒன்று வெளியானது.


அந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட கடிதம் ஒன்றினைக் கணையாழிக்கு எழுதினேன்.


அப்போது என் கையெழுத்து நன்றாகவே இருக்காது. (இப்போதும் அப்படித்தான்). இணைப்பில் இருக்கும் அக்கடிதத்தின் நகலைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்!  


இதைப் படித்துப் புரிந்து எப்படித்தான் பிரசுரம் செய்தார்களோ? கணையாழி குழுவினருக்கே வெளிச்சம்!


அடுத்தடுத்த இதழ்களில் இதுதொடர்பான விவாதங்கள் தொடர்ந்தன. பின்னர் "இறுதி விவாத மேடை" எனும் தலைப்பில் மீண்டும் நான் எழுதிய கடிதம் ஒன்று 10 பக்க அளவில் பிரசுரிக்கப்பட்டது. 


அந்த இதழ் என் வசம் இல்லை!


முதலும் முடிவும் ஆன கவிதை - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

விழுப்புரம் பொதுப்பணித்துறையில் அப்போதைய செயற்பொறியாளராக இருந்த, தமிழறிஞர் கொடுமுடி ச.சண்முகன், விழுப்புரம் இலக்கியக் கழகங்கள் மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம் ஏற்பாட்டின் பேரில் “தேசிய நீர்வள நாள் கவியரங்கம்” 01.06.1991 அன்று நடந்தது.


தலைமை தாங்கிய பேராசிரியர் த.பழபலய் "நீயும் எழுது” என பணித்தார். கவிதை எனும் பெயரில் ஏதோ எழுதினேன்.


தமிழாய்ந்த வெண்ணெய் வேலனார், சிவலிங்கம், கு.சம்பந்தம், ஆகிய  அறிஞர் பெருமக்களுடன் நானும்...


பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். அவர்களின் துறை ஏற்பாடு ஆயிற்றே!


“என் கவிதையில் கொஞ்சம் வறட்சி தென்படும். ஏனென்றால் நல்ல தண்ணீர் குடித்து நாள்கள் பலவாகின்றன. எனவே பொருத்தருள வேண்டுகிறேன்” -  என்று தொடங்கி,


“நம் நாடு செழிக்க நீர்வளம் கொழிக்க வீட்டுக்கு ஒரு யூக்ளிபட்ஸ் மரம் வளர்ப்போம். காட்டுக்கு ஒரு வீரப்பனை வளர்ப்போம்”  - என முடித்தேன்! 


அரசாங்கத்தின் சார்பில் ஆன நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசை, அரசின் திட்டங்களை, அரசியல்வாதிகளை நக்கல் நையாண்டி செய்து “கவிதை” படித்தேன்.


நல்ல வரவேற்பு... கைதட்டல்கள்!


ஆனாலும், இதுவே எனது முதலும் முடிவும் ஆன கவிதை (?). அதன் பிறகு இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நான் எப்போதும் இறங்கவில்லை!


(இறங்கி இருந்தால், வருடத்திற்கு இரண்டு கவிதை (?) புத்தகங்கள் வெளிவந்து உங்களைத் தொந்தரவு செய்திருக்கும். நல்ல வேளை நீங்களும் தப்பித்தீர்கள்!)








சனி, 1 ஜூலை, 2023

தினப்புரட்சி நிருபர் ஆனேன் - எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்

அப்போதெல்லாம் ‘நெம்புகோல்’ அமைப்பின் சார்பிலான அறிக்கைகள் என் பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகும்!


அதிலும் குறிப்பாக ‘தினப்புரட்சி’ நாளிதழில் நிறைய பிரசுரமாகும். இந்நாளேடு, பாமக சார்பில் நடத்தப்பட்டது. முற்போக்கு அமைப்புகளுக்கான முகாமாகத் திகழ்ந்தது.


அப்போது தான் தோழர்கள் சொன்னார்கள்: “நீங்கள் ஏன் பத்திரிகையாளர் ஆகக் கூடாது?”. அந்த முயற்சியில் இறங்கினேன்.


இதற்கிடையில் 17.81991 அன்று பேராசிரியர் கல்யாணி அவர்களின் ஏற்பாட்டில் டியூஷன் ஒழிப்பு மாநாடு நடந்தது. அதில் தினப்புரட்சி ஆசிரியரும் பாமக தலைவருமான பேராசிரியர் தீரனும பங்கேற்றார். மாநாடு முடித்து இரவு அவரது வேனில் தான் நாங்கள் விழுப்புரம் திரும்பினோம்.


அப்போது பேராசிரியர்கள் பழமலய், கல்யாணி ஆகியோர் தீரனிடம் சொன்னார்கள்: “ இவர் எழுத்துப் பணியில் ஆர்வம் உடையவர். தினப்புரட்சியில் நிருபராக வேண்டும் என்று விரும்புகிறார்”. இதை கனிவுடன் கேட்ட தீரன் அவர்கள், “சரி. விண்ணப்பம் போடச்சொல்லுங்கள்” என்றார். விழுப்புரம் வந்தவுடன் நானும் விண்ணப்பித்தேன்.


இரண்டு மூன்று மாதங்கள் உருண்டோடின. இதற்கிடையில் 1991 டிசம்பர் மாத இறுதியில் சென்னை பயணமான பேராசிரியர் பழமலய் அவர்கள் என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.  


சென்னை சென்றதும், நேராக வன்னிய தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் இயங்கி வந்த தினப்புரட்சி அலுவலகம் சென்றோம். அங்கு ஆசிரியரிடம் என்னை பேராசிரியர் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.


அடுத்த சில நிமிடங்களில் தனது கையெழுத்துடன் கூடிய அடையாள அட்டையை பேராசிரியர் தீரன் அவர்கள் என்னிடம் வழங்கினார்.


“இவர் தினப்புரட்சி நாளேட்டின் பகுதிநேர நிருபராகப் பணிபுரிகிறார்”.


21.12.1991ம் தேதி தினப்புரட்சி நிருபர் ஆனேன்! 20 ஆண்டுகால பத்திரிகை பிரவேசம் அன்று தொடங்கியது...