வெள்ளி, 29 டிசம்பர், 2017

சிறகடித்துப் பறக்கும்...

அண்மையில் சென்னை திருவான்மியூர் சென்றிருந்த நான், அங்குள்ள புகழ்ப் பெற்ற அருள்மிகு மருந்தீசுவரர்க் கோயிலுக்குள் வலம் வந்தேன்.

ஏராளமானக் கல்வெட்டுகள், சிற்பங்கள். அம்பிகையின் வளாகத்துக்கு வெளியே, 19ஆம் நூற்றாண்டைய குறிப்பிட்ட வகுப்பினரின் சாசனங்கள் என வரலாற்று விவரங்கள் கோயிலில் விரவியுள்ளன. நீங்களும் அறிந்திருப்பீர்கள்!  

ஆனாலும், என் கவனத்தை, என் கவனத்தை மட்டுமல்ல அங்கு வந்திருந்தவர்களின் கவனங்களைப் பெரிதும் கவர்ந்தவை, வளாகத்துக்குள் படபடவெனச் சிறகடித்துக் கொண்டிருந்த அந்தப் புறாக்கள்தாம்.

கோயிலுக்கு வருபவர்களில் சிலர் கையோடு தானியங்களைக் கொண்டு வருகின்றனர். அவற்றை வளாகத்துக்குள் பரப்புகின்றனர்.

இதோ, அவற்றினைச் சுற்றி வளைக்கும் அந்தப் புறாக்கள், (இதில் சில காகங்களும் அடக்கம்) ஆவலுடன் கொத்தித் தின்கின்றன.

யாரும் அருகில் வரும் சமயத்தில், படபடவெனச் சிறகையடித்து (தற்காலிகமாக) அங்கிருந்துப் பறக்கின்றன.


இக்காட்சியினை அழகியலோடு படம் பிடித்தவர்களின் நானும் ஒருவன். அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக...  




செவ்வாய், 26 டிசம்பர், 2017

விழுப்புரம் மருதூர் ஏரி...

மருதூர்ப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வசித்தவன். அந்த வகையில் இந்த ஏரியும், ஏரி சார்ந்த நிலங்களும் எனக்கு மிகவும் பரிச்சயம்.


ரயில்வே லைனில் அமர்ந்து கொண்டு, கிழக்கில் அழகிய வயல்வெளிகளையும், மேற்கில் நீண்டு வளைந்துள்ள இந்தப் பிரம்மாண்ட ஏரியையும் இரசித்துக் கொண்டுப் பாடப்புத்தகத்தை மண்டையில் ஏற்ற முயற்சித்தக் காலங்கள் மறக்க முடியாதவை.

ஆர்வ மிகுதியால் ஒருமுறை ஏரியில் இறங்கி நடந்து, மேடுப்பள்ளங்களைக் கடந்து, கன்னியாகுளம் சாலையை அடைந்திருக்கிறேன்.

மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்பு என்பது 1980களின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. அதன் மேற்குப் பகுதியில் அப்போதே வீடுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

1991ஆம் ஆண்டில், ஒரு பெருமழை. ஏரி நிரம்பியது. ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டியவர்களுக்குச் சிக்கல். வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்தது. ஒருநாள் இரவோடிரவாக, ஏரியின் கிழக்குக் கரையை உடைத்துவிட்டனர்.

இதனால் ஆர்ப்பரித்தத் தண்ணீர் விளைநிலங்களைச் சூழ்ந்தது. இதனை அடைப்பதற்குக் பாடுபட்ட மருதூர் விவசாயப் பெருமக்களுடன், செய்தியாளனாக ஏரிக்குள் இடுப்பளவுத் தண்ணீரில் நின்றிருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியல.

ஆண்டுகள் உருண்டோடின. ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன. மருதூர் ஏரியில் மேற்குப் பகுதி கட்டடங்களால் சுருங்கியது.


இந்த ஏரியைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் இன்றும் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது.

மருதூர் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் நல்ல நண்பர்கள் சிலர் இறங்கியுள்ளனர். பாராட்ட வேண்டும். இதன் விளைவாக, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் தலையிட்டுள்ளது.


நம் முன்னோர் சேகரித்து வைத்தச் சொத்துக்களில் ஒன்று, விழுப்புரம் மருதூர் ஏரி மீட்டெடுக்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்..!

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

தமிழ் வெளியீட்டுக் கழகம்...

அண்மையில், விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலைக்குச் சென்ற நான், அதன் தாளாளர் திரு.பெ.சு.இல.இரவீந்திரன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர், பள்ளியின் நூலக அறையினை எனக்குக் காண்பித்தார். அங்கு ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும், இரவீந்திரன் அவர்களின் தந்தையார் திருவாளர். பெ.சு.இலட்சுமணசுவாமி அவர்கள் இருபத்தைந்து,  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்தவை.

என் பார்வையில் பட்ட நூல்களில் ஒன்று, “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்–எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியது. ஏராளமானப் புகைப்படங்களுடன் 455 பக்கங்களில் வெளிவந்துள்ள அற்புதமான நூல்.

1966 மார்ச்-ல் முதற்பதிப்பைக் கண்ட இந்நூலின் விலை ரூ.9.


ஆனாலும், அதில் என் கவனத்தைக் கவர்ந்தது, “தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு–அரசாங்கம் என்றிருந்ததுதான். ஆமாம். தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் தான் இந்நிறுவனம் இயங்கியிருக்கிறது.   

1962இல் நிறுவப்பெற்ற தமிழ் வெளியீட்டுக் கழகம் 1966 வரை 136 நூல்களை வெளியிட்டுள்ளது.

1966ஆம் ஆண்டில் மட்டும், இந்த நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம், வரலாறு, அரசியல், உளவியல், தத்துவம், அறவியல், அளவையியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், புள்ளியியல், விலங்கியல், பௌதிகவியல், மருத்துவம்,  பொதுநூல்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் 72 நூல்கள் வெளியிடப்பட்டிருக் கின்றன.

இந்தியப் பொருளாதாரம் பற்றி மட்டுமல்லாமல், இங்கிலாந்து பொருளாதார வரலாறு, அமெரிக்காவின் நவீன பொருளாதார வளர்ச்சி, கிரேட் பிரிட்டனில் தொழில் வாணிபப் புரட்சி, கிரேக்க வரலாறு ஆகியவை குறித்தும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 101ஆவது வெளியீடான “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள, அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள், “தமிழை ஆட்சி மொழியாக அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழுக்கு ஆக்கம் தேடுகின்ற முறையில், இன்னும் மகத்தான அளவில் தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் வெளியீட்டுக் கழகம் நிறுவப்பெற்றது எனத் தெரிவித்திருக்கிறார்.

பரவாயில்லை நல்ல முயற்சிதான். இது எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது எனும் விவரம் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் காங்கிரசு அரசாங்கம், குறிப்பாக பக்தவச்சலனார் அரசாங்கம் என்றதுமே வேறு மாதிரியான பிம்பங்கள்தான் நம்முன் வந்து நிற்கின்றன. ஆனாலும் இதுபோன்ற நல்ல காரியங்களும் தமிழுக்கு நடந்துதான் இருக்கிறது..! 

வியாழன், 14 டிசம்பர், 2017

சமண மடாதிபதி அவர்களுடன் சந்திப்பு...

‘எண்ணாயிரம் சமணர் கழுவேற்றம் – இதுகுறித்து, பொதுத்தளத்தில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமயவாதிகள் என்ன நினைக்கின்றனர்? குறிப்பாக, சமண சமயத்தினர்?

1975இல் ‘தமிழகத்தில் ஜைனம் நூலினை வெளியிட்ட சமணப் பெரியவர் ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள், ‘அகச்சான்றற்ற புராணக் கதை எனக் கழுவேற்றக் கதையைப்  புறந்தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திகம்பரச் சமணர்களின் தலைமைப் பீடமாக விளங்கிக் கொண்டிருக்கும், மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடத்தின் மதிப்பிற்குரியத் தலைவர் அவர்களை, 24.09.2014 அன்று சந்தித்து உரையாடினேன்.

அப்போது ‘எண்ணாயிரம் சமணர் கழுவேற்றம் குறித்து அவர் தெரிவித்தக் கருத்துகளை, அண்மையில் வெளிவந்துள்ள ‘சமணர்
கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல் நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்.








இந்நூலினை, மரியாதைக்குரிய மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடாதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இன்று (14.12.17) காலை நண்பர் கோ.பாபு அவர்களுடன் மேல்சித்தாமூர் பயணம்.

‘சமணர் கழுவேற்றம் எனும் இந்த ஒற்றை விசயம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, நூலாகக் கொண்டுவந்துள்ளதை சாமிஜி அவர்கள் வெகுவாகவே பாராட்டினார். நூலாசிரியனான எனக்குச் சால்வைப் போர்த்தியும், நினைவுப் பரிசு வழங்கியும் மகிழ்ந்தார்.


நெகிழ்வானத் தருணம்.

நீண்ட உரையாடல், மடத்தில் உணவு உபசரிப்பு... பிற்பகல் விடைபெற்றோம்..! 



புகைப்படங்கள்: திரு.கோ.பாபு அவர்கள்.     

திங்கள், 11 டிசம்பர், 2017

மீண்டு(ம்) வருகிறதா சின்ன கடைத்தெரு?

சின்ன கடைத்தெரு.

இப்படியானக் கடைத்தெருக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. விழுப்புரமும் இதற்கு விதிவிலக்கல்ல.

சிறுவயதில், கண்ணப்பநாயனார் தெருவில் குடியிருந்தபோது, எதற்கெடுத்தாலும் நாங்கள் விரட்டப்பட்டது, சின்ன கடைத்தெருவுக்குத்தான்.

ஊருக்குப் பெரிய மார்க்கெட் என ஒன்று இருந்தாலும், எங்களுக்குப் பிரதானம் சின்ன கடைத்தெருதான்.

எல்லா காய்கறிகளும், பழங்களும், மளிகைப் பொருள்களும் இங்கு அடக்கம்.

நேரு வீதியில் உழவர் சந்தைத் தொடங்கப்பட்டது. சந்தானகோபாலபுரம் நெடுந்தெரு, தன் முகத்தை இழக்கத் தொடங்கியது. சின்ன கடைத்தெரு மெல்ல மெல்லக் கரைந்தே போனது.

எதிரிலேயே பிரம்மாண்டமாக எழுந்துநின்ற, உழவர் சந்தையை சின்ன கடைத் தெருவினால் தாக்குப் பிடிக்க முடியாதது வரலாற்றுச் சோகம்தான்!

இப்போது, உழவர் சந்தைக்கு எதிரே, வரிசையாக அமர்ந்து காய்கறி கீரைகளை விற்பவர்களைக் காணமுடிகிறது.


எல்லோரும் விழுப்புரம் சுற்றுவட்டக் கிராமங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள்.

இக்காட்சியைப் பார்க்கும்போது, சின்ன கடைத்தெரு மீண்டு(ம்) வருகிறதோ எனும் சந்தோசத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது..!


வெள்ளி, 8 டிசம்பர், 2017

விழுப்புரம் திமுக அலுவலகம் அகற்றம்

விழுப்புரம் நேரு வீதியைக் கடப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இங்கிருந்தக் கட்டடங்கள் எங்கே? அவர்களின் கண்கள் அகல விரிவதைப் பார்க்க முடிகிறது.

வரிசையாக, ஆண்டுக் கணக்கில் நின்று கொண்டிருந்த நகர திமுக அலுவலகம் உள்ளிட்ட

கட்டடங்கள், நீர்வழித் தட ஆக்கிரமிப்பு எனும் காரணத்தினால் அகற்றப்பட்டுள்ளன.  



நகரத்தின் மையப் பகுதியில் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு, இத்தனை நாள் அரசாங்கத்தின் பார்வையில் படாமல் போனது எப்படி? எனும் கேள்வி எழுகிறது.

ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களே ஆக்கிரமித்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? சரி, இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே... வரவேற்போம்.

மழைக் காலங்களில் நேரு வீதியில் இந்த இடத்தில் மட்டும் நாள் கணக்கில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. இப்போது இதற்குத் தீர்வு காணப்படும் என நம்புவோம்.


அதே நேரம் முக்கிய வடிகாலான ஊரல் குட்டை ஏறக்குறைய தூர்க்கப்பட்டுவிட்டது. சாலையைக் கடந்து எதிரே வழிந்தோடும் பாதையிலும் குடியிருப்புகளாக்கி, சிமெண்ட் ரோடும் போடப்பட்டாகிவிட்டது.

இந்த நிலையில், ஒரு தடத்தை மட்டும் மீட்டெடுத்தால் போதுமா? நீர்நிலையைப் புனரமைக்க என்ன செய்யப்போகிறார்கள்?

இதுபற்றிப் பேசும்போது, விழுப்புரம் புதிய பஸ் நிலையமும் நம் கண்முன் வருகிறது. இங்கிருந்து மழைநீர் வெளியேறும் வடிகால்கள் அனைத்தும் பிரம்மாண்டக் கட்டடங் களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவே.


இவற்றின் மீதும் அரசாங்கத்தின் பார்வை படுமா? பொறுத்திருந்துப் பார்க்கலாம்..! 

வியாழன், 7 டிசம்பர், 2017

எஸ்.டி.எஸ்.சுக்கு நினைவஞ்சலி...

நேற்று சென்னை சென்றிருந்த நான், அவ்வை சண்முகம் சாலையில், அதிமுக அலுவலகத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.

அப்போது, அங்குச் சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த அந்தப் போஸ்டர் என் கவனத்தைக் கவர்ந்தது.

அது, முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர். ‘சமூக நீதிக்காவலர் ‘தமிழ்நாடு உரிமைத் தளபதி எனும் அடைமுழக்கங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.


எஸ்.டி.எஸ். என்றதுமே காரில் தொங்கிக் கொண்டுச் சென்ற அந்த இளைஞர்தான் நம் நினைவுக்கு வருகிறார்.

அதிமுக ஆட்சியில் அவர்தான் நிரந்தர வருவாய்த்துறை அமைச்சர். தமிழ்நாட்டில் இருக்கும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் யாரும் இவரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

விழுப்புரம் பூந்தோட்டத்தில் அமைந்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர் சங்கக் கட்டடம்கூட, 1990களின் தொடக்கத்தில் அவரால்தான் திறந்துவைக்கப்பட்டது.   

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்துக்கான இடத்தேர்வின்போது, கப்பியாம்புலியரில் இருக்கும் விஜிபிக்குச் சொந்தமான இடத்தை ஒரு அதிகாலை நேரத்தில் ‘வாக்கிங் என்று சொல்லி எஸ்.டி.எஸ். பார்வையிட்டது, அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனிக்கட்சியையும் கண்டவர். ஒருமுறை அவர் சென்ற கார் திண்டிவனத்தில் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இப்படி பல நினைவுகள், அந்த முன்னாள் அமைச்சர் குறித்து என் முன் நிழலாடியது.


பரவாயில்லை, மறைந்து 16 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், நினைவில் வைத்து அவருக்கு, போஸ்டர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். பாராட்டிற்குரியதுதான்..! 

புதன், 6 டிசம்பர், 2017

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்...


“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்.” (855)

பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? 

எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.

இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.

பக்கங்கள்: 168 விலை: ரூ.150.

இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.

எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!

இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.

(ஏற்கனவே முகநூலில், திரு.ஜடாயு அவர்களும், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் விவாதத்தை தொடங்கிவிட்டார்கள்)

நன்றி:
திரு.ஜடாயு அவர்கள்.
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்.

வியாழன், 19 அக்டோபர், 2017

நடந்த சில நிகழ்வுகளும்... நடக்கப் போகும்...

சாலை விபத்துகளில் கொத்துக் கொத்தாய் மடியும் மனித உயிர்கள், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்... 
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் அதிகரித்துத்தான் இருக்கின்றன.

இவை, தொலைக்காட்சிகளில் சிலநிமிடச் செய்திகளாகவும், பத்திரிகைகளில் சிலமணி நேர செய்திகளாகவும் நம்முன் வந்து மறைந்துவிடுவதுதான் வேதனைக்குரியது!

இந்நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப்பெரிய சமூக அவலம் மறைந்திருக்கிறது. இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசும், சமூகமும் மௌனமாய்க் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இன்று (வெள்ளி) காலைகூட, நாகப்பட்டிணம் மாவட்டம், பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒருபகுதி இடிந்துவிழுந்து, போக்குவரத்துத் தொழிலாளர் எட்டுபேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மனசு வலிக்கிறது. இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?

அரசுக்கு வேண்டிய இலக்கணங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய அற இலக்கியங்கள் வற்புறுத்திச் சென்ற பிறகும், அவற்றை நமது அரசாங்கங்கள் பார்க்க மறுப்பது ஏன்?


இதோ பாருங்கள், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், பாழடைந்துக் கிடக்கும் கட்டடங்கள். 



இவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உரியவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

புதன், 11 அக்டோபர், 2017

கோலியனூரான் கால்வாய் எப்போது திறந்துவிடப்படும்?

விழுப்புரம் மேம்பாலப் பணி முடிவடைந்து எப்படியும் ஒரு மாதம் ஆகியிருக்கலாம். வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. மகிழ்ச்சி.

எப்படியே துரித கதியில் இந்தப் பணியை முடித்துவிட்டார்கள்.

ஆனால், கோலியனூரான் கால்வாய்..?

மேம்பாலத்துக்கு அடியில் புதியக் கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டது.


இரயில் பாதைக்கு அடியில் செல்லும் கால்வாய் முழுமையாகத் தூர் வாரப்பட வில்லை.

இரயில் நிலையத்தின் கிழக்கில், மூடப்பட்டுப் பின்னர்த் திறக்கப்பட்டக் கால்வாயும் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.


கண்ணன் தியேட்டர் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டக் கால்வாயும் அந்தப்படியே நிற்கிறது. போதாக்குறைக்கு, அதற்கு இரும்புக் வேலி வேறு! தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்க!


இரயில் பாதைக்கு அடியில் கால்வாய் எப்போது சீரமைக்கப் பெறும்? கிழக்குப் பகுதியில் கால்வாய் சீர் செய்யப்படுவது எப்போது? 

இவையெல்லாம் முடிந்து, பண்டிட் ஜவகர்லால் நேரு சந்துப் பகுதியில் கோலியனூரான் கால்வாய் எப்போது திறந்துவிடப்படும்?

பொதுப்பணித்துறைக்கே வெளிச்சம்..! 



திங்கள், 9 அக்டோபர், 2017

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில்...

குமுதம் ரிப்போர்ட்டரின் ஒவ்வொரு இதழிலும், தமிழகத்தின் அமைச்சர்களின் தொகுதி குறித்து ஆய்வு செய்து, ‘உங்கள் அமைச்சரை அரியும் தொடர் எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு என்னைத் தொடர்புக் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் திரு.பெ.கோவிந்தராஜு அவர்கள், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான திரு.சி.வி.சண்முகம் அவர்களது செயல்பாடுக் குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது, ‘விழுப்புரம் நகரில் பல பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது, முடங்கிப் போயிருக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், சீரமைக்கப்படாமல் இருக்கும் கோலியனூரான் கால்வாய், பாழடைந்துக் கிடக்கும் பழைய பஸ் நிலையம், தீர்க்கப்படாமல் இருக்கும் நடைபாதை வியாபாரிகள் பிரச்சனை ஆகியவற்றைப் பட்டியலிட்டேன்.

மேலும், ‘எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை நாங்கள் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க வேண்டும். இதற்கு, குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக ஏதாவது செய்யுங்களேன் என்று வேடிக்கையாகவும் (வேதனையுடனும் தான்!) குறிப்பிட்டேன். 

இன்று (10.10.17) வெளியாகியிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், விழுப்புரம் தொகுதி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. சிறப்பாகவே அலசி இருக்கிறார்கள்.

இதில், என்னுடைய பேட்டியும், படத்துடன் வெளியாகியிருக்கிறது.

16 வருடங்களுக்கு முன்பு நான் நிருபராகப் பணியாற்றிய பத்திரிகையில், இப்போது

என்னுடைய பேட்டி... மகிழ்ச்சிதான்..!


நன்றி, திரு.பெ.கோவிந்தராஜு அவர்களே..!

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தோழர் அமானுதீன் படத்திறப்பு...

திடீரென நிகழ்ந்துவிடும் சிலரது மரணங்கள் நம்மை நிலைகுலையச் செய்திடும். இப்படித்தான் தோழர் அமானுதீன் மரணமும்.

விழுப்புரம் மகாத்மா காந்தி வீதியில் இயங்கிவரும் பானு ஸ்டோர்ஸ் எனும் மளிகைக் கடையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைத்து விதமான பூசைப் பொருட்களும், நாட்டு மருந்துப் பொருள்களும் இங்குக் கிடைக்கும்!

இதன் உரிமையாளர்தான் எஸ்.அமானுதீன்.

வணிகராக இருந்தாலும், முற்போக்குச் சிந்தனையுடையவர். மார்க்சிய லெனினிய அமைப்பில் உள்ள தோழர்களுடன் தொடர்பில் இருப்பவர். தன்னுடையப் பணிகளுக்கு இடையே, உலக நடப்புகளை ஆராய்ந்துத் தெளிபவர்.

என்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டின்போதும், இடையிடையேயும் தோழரைச் சந்திப்பேன். நிறையச் சிந்திக்கும் அவர், இன்னும் எழுதுங்க... மக்களப் பத்தி எழுதுங்க... என்று ஊக்கம் கொடுப்பார்.

குறிப்பாக, ஜல்லிக் கட்டுப் போராட்டத்தின்போது. அதன் பின்னணியில் இருந்த அரசியல் குறித்தெல்லாம், விரிவாகவும், விசனத்துடனும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்தத் தோழர் அமானுதீன், கடந்த இருவாரங்களுக்கு முன்பு திடீரென மறைந்தார். மிகவும் அதிர்ந்தேன். மனதைத் தேற்ற முடியவில்லை!  

அவரதுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு விழுப்புரம் ஆசான் மண்டபத்தில் இன்று (சனி) காலை நடந்தது.

அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.த.வெள்ளையன் அவர்கள் பங்கேற்று, அமானுதீன் படத்தைத் திறந்து வைத்தார்.


முன்னதாக நானும் இந்நிகழ்வில் பங்கேற்று, தோழர் அமானுதீனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.



தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்று இருந்தனர்! 

சனி, 7 அக்டோபர், 2017

ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் சந்திப்பு...

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் ஒரு சந்திப்பு...

நேற்று (சனி) மாலை, சென்னை பல்லாவரத்தில் உள்ள ஐயாவின் அலுவலகத்தில், விழுப்புரம் தோழர் கோ.பாபு அவர்களுடன் இந்தச் சந்திப்பு நடந்தது.

என்னுடைய ‘பழைய பேப்பர் புத்தகத்தினைப் புரட்டிய ஐயா அவர்கள், காலஞ் சென்ற மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரை நினைவுகூர்ந்தார்.

குறிப்பாக, ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம் பற்றி விரிவாகவே பேசினார். மகாத்மா காந்தி வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வாரா? மாட்டாரா? என உலகமே எதிர்பார்த்திருந்த நேரத்தில், அதனை மோப்பம் பிடித்துச் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு நிருபரின் சாதுரியத்தையும் பாராட்டினார். கூடவே, தற்காலப் பத்திரிகையுலகின் நிலவரத்தையும் கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் குறித்தும் பேசினோம். ‘அவர் காலத்தில் தொல்காப்பியம் பதிப்புக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால், திராவிட மொழிக் குடும்பம் என்பதைவிடுத்து, தமிழிய மொழிக்குடும்பம் எனக் கால்டுவெல்  பெயர் சூட்டியிருப்பார் என்பது ஐயா அவர்களின் கருத்தாக இருந்தது.

திராவிட எனும் சொல்லாக்கம் தமிழக அரசியலில் எப்படியெல்லாம் பயன்படுத்தப் பட்டது என்பதை விளக்கிய அவர், அண்மைக்கால அரசியல் குறித்தும் பேசினார்.

ஐயாவின் அனுபவங்கள்.... ஆவணப்படுத்தப்பட வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது.

இந்தச் சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. என்ன, திடீர்னு ஐயாவை? நீங்கள் கேட்கலாம்...

என்னுடைய அடுத்தப் படைப்பு, ‘திணிக்கப்பட்டதா திராவிடம்? தயாராகிவிட்டது. இதற்கான அணிந்துரைக்காகத்தான் ஐயா அவர்களை அணுகியிருந்தோம்.

இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஐயா பழ.நெடுமாறன் அவர்கள், விரைவில் அணிந்துரை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.


காத்திருப்போம்..!