திங்கள், 30 செப்டம்பர், 2019

நூற்றாண்டு காணும் விழுப்புரம் நகராட்சி

இன்று நூற்றாண்டு காண்கிறது விழுப்புரம் நகராட்சி…


இந்த மண்ணின் வரலாற்றை  “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்” நூலாக ஆவணப்படுத்தியவன் எனும் வகையில் நானும்

மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம்!

1919 – இதே நாளில் தான் கீழ்ப்பெரும்பாக்கம், மருதூர், மகாராஜபுரம், பூந்தோட்டம் ஆகிய கிராமங்களை ஒருங்கிணைத்து விழுப்புரம், நகராட்சி ஆனது.


இன்று இதன் எல்லைகள் நாலா பக்கமும் விரிவடைந்து உள்ளன.

ஆனால், நகரத்தின் வளர்ச்சி?

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்…

இதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்.

அப்புறம், மாநகராட்சி ஆகணும். இதுபற்றியும் யோசிக்கலாம்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

பனை சதீஷ்

சென்னை, பல்லாவரத்தில் இன்றும் 30.09.2019  ஒருஇனிய சந்திப்பு…

சூழலியல் ஆர்வலர், நண்பர் “பனை” சதீஷ் அவர்களின் வருகை!

ஓராண்டுக்குப் பின் மீண்டும் இப்போது தான் சந்திக்கிறோம்.

சுமார் ஒரு மணி நேர உரையாடல்.

வழக்கம் போல் விழுப்புரத்தின் தொன்மைகள் குறித்து நான் பேசிக் கொண்டே போக…


தமிழ்ப் பண்பாட்டில் பனை குறித்து சதீஷும் அவ்வப்போது விளக்கிக் கொண்டு இருந்தார்.


அழகான கலந்துரையாடல். மகிழ்ச்சியாக இருந்தது.

பண்பாடும் வரலாறும் இணைந்துப் பயணிப்பவை. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.

இவ்விசயங்களை மக்களை நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும்.

தொடர்ந்து நாம் பயணிப்போம். இதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.

பனை, பனை சார்ந்த அத்தனை விசயங்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வு செய்ய இருப்பதாக சதீஷ் தெரிவித்தார்.


அவரது ஆய்வும் தொடர் பயணமும் வெற்றி பெற நமது வாழ்த்துகள்..!

கவிஞர் பச்சியப்பன்

“ ஏ வேலாயி வேலாயி
விறகொடிக்கும் வேலாயி
நீ வீரப்பனை பார்த்ததுண்டா
அவன் வீரக்கதை கேட்டதுண்டா?”

… கண்ணான தேசத்துல காவேரி ஓரத்துல
காட்டுச் சிங்கம் பொறந்ததடி…

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சந்தனக் காடு” தொடரின் டைட்டில் சாங்.

இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வீரமிக்க வரிகளுக்குச் சொந்தக்காரர், இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர், பேராசிரியர் கவிஞர்.பச்சியப்பன்
அவர்கள்.


தாம்பரம், சானடோரியத்தில் 29.09.2019 ஞாயிறு காலை சந்திப்பு. நீண்ட நேரம் பேசினோம். பின்னர், குரோம்பேட்டை சுப்புராயர் நகரிலும் பேசினோம்.

குறிப்பாக, வரும் 6ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள “மக்கள் கவிஞர் பழமலய் படைப்புலகம்” ஒரு நாள் கருத்தரங்கம் குறித்து விரிவாகப் பேசினோம்.

இந்நிகழ்வினை கவிஞர்கள் பச்சியப்பன், கண்மணி குணசேகரன், நண்பர் சுபாஷ் ஆகியோர் முன்னின்று நடத்துகின்றனர். இவர்களுடன் நானும்...

“கவிஞர் பழமலயின் எழுத்துகளை வாசிப்பதும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதும் வரலாற்றுத் தேவை” என்கிறார் கவிஞர் பச்சியப்பன்.

தங்களின் முன்னெடுப்புகள்
வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா…

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கல்யாணம்பூண்டி - பாறை ஓவியங்கள்


கல்யாணம்பூண்டி மக்கள் இந்தப் பாறையை எழுத்துப் பாறை என்று அழைக்கின்றனர்... உண்மையில் ஓவியப் பாறை என்றழைக்க வேண்டும்!

கீழ்வாலையில் ஓவியத் தொகுப்பு அடங்கியிருக்கும் பாறையை அப்பகுதியினர் இப்படித்தான் அழைக்கின்றனர்.

கல்யாணம்பூண்டியில் இருக்கும் பாறையையும் ஏன் இப்படி அழைக்க வேண்டும்?

இங்கும் ஓவியங்கள... அதுவும் பெருங்கற்கால ஓவியங்கள் இருக்கின்றனவே!



பறவை, பறவை முகம் கொண்ட மனிதன், குறியீடு என கீழ்வாலையில் இருப்பதுப் போன்ற ஓவியங்கள். ஆனால், வெண் சாந்து நிறத்தில்!

இன்னும் இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அழிந்துவிட்டன.

கல்யாணம்பூண்டி கிராமத்திற்கு நாம் மேற்கொண்ட தொடர்ச்சியானக் கள ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட ஓவியங்கள்.


இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சௌந்தர் மற்றும் மணி, இதுபற்றிய விவரங்களைத் தந்துதவிய ஐயா சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு நம் நன்றிகள் உரித்தாவதாக.

3000 ஆண்டுகள்பழமைவாய்ந்த ஓவியங்கள் கல்யாணம்பூண்டி கிராமத்திற்குப் புதிய வரலாறைத் தந்துள்ளன.

நாம் அறிந்த வரையில் இந்த ஓவியங்கள் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.

இல்லை, ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றால் விவரமறிந்த நண்பர்கள் தெரிவிக்கவும்..!

கல்யாணம்பூண்டி - சண்டிகேசுவரர்

வெயில் மண்டையைப் பிளக்கிறது…

ஆனாலும், அண்மையில் பெய்த மழை நீர், மலை மீதிருந்து கீழே இறங்கும் சலசலப்பு மனதுக்கு இதமாக இருக்கிறது.

மண்ணின் மைந்தர் மணி வழிகாட்ட, நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணு துணை வர, கல்யாணம்பூண்டி வனப் பகுதிக்குள் நம் தேடல் தொடர்கிறது.

“இதோ இங்கு ஐயனார் கோயில் இருக்கிறது” புதர்கள் அடர்ந்த அந்தப் பகுதியை மணி சுட்டிக்காட்டினார்.

செடிகளை விலக்கி உள்ளே சென்றோம்.

திறந்த வெளியில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய கோயில்.

சிறியதும் பெரியதுமாக கருங்கல் யானைகள்.


புதிய ஐயனார், “கேட்” போடப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்.

தெற்கில் பின்னமான சிற்பம்; தலை இல்லை. சிற்றிடை. பெண்ணாக இருக்க வேண்டும்!

ஐயனாருக்கும் மேற்காணும் சிற்பத்திற்கும் நடுவே ஒருவர் கால்களை மடக்கி அமர்ந்து இருக்கிறார்.


இவரும் ஐயனார் என்றே வழிபடப்பட்டு வருகிறார் போலும்!

இவர் யாராக இருக்கும்?

காஞ்சியில் இருக்கும் பேராசிரியர் திரு.சங்கர நாராயணன் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

“சண்டிகேசுவரர்” என்று சொன்ன பேராசிரியர் அவர்கள், “இவரதுக் காலம் 11-12ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்”  என்றார்.

அடடா… கல்யாணம்பூண்டி வரலாற்றுப் புதையலில் சண்டிகேசுவரரும் ஒருவர்.

கல்யாணம்பூண்டி சண்டிகேசுவரர் வரலாற்றில் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்றே கருதுகிறோம்.

வனப் பகுதியில் இருக்கும் இவரை வெளிப்படுத்துவதில் நமக்கு மகிழ்ச்சியே..!

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அதனூர் சிவாலயம்

விழுப்புரம் அருகே உள்ள அதனூர் கிராமம்.


கி.பி.12ஆம் நூற்றாண்டு சிவாலயம் இருந்து சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறது.


இக்கோயில் முற்றிலும் பிரிக்கப்பட்டு, புதிதாகக் கட்டும் பணியில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 20.09.2019 மாலை அதனூர் கிராமத்திற்கு நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணு ஆகியோருடன் திடீர் பயணம்.


அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் சீனு அவர்களுக்கு அளித்தத் தகவலின் பேரில் அதனூரில் நமக்கு நல்ல வரவேற்பு.


சிற்பங்கள் நிறைந்தத் தூண்கள்.
அழகிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.

ஓரிரு கல்வெட்டுத் துண்டுகள்.


நாகலிங்கம் உள்ளிட்ட சில சிற்பங்கள் மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப்பட்டுள்ளது. பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

“நிதி தட்டுப்பாட்டில் பணிகள் அப்படியே நிற்கிறது. போதிய நிதி கிடைத்தால் பணிகள் விரைவில் முடிந்துவிடும்” என்கின்றனர் பெரியவர்களும் இளைஞர்களும்.


அதனூர் மண்ணில் இந்த அழகியக் கலைக்கோயில் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். நிற்கும் என நம்புவோம்! எழுந்து நிற்க வேண்டும் என வாழ்த்துவோம்..!


அதனூர்: விழுப்புரம் – திருவண்ணாமலை சாலையில், சூரப்பட்டு அருகே அமைந்துள்ள கிராமம்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அன்னியூர் - மும்மூர்த்திகள்

கோயில் என்றால் பிரம்மாண்ட கட்டடம் கிடையாது. உள் பிரகாரம், வெளி பிரகாரம் என்றெல்லாம் இல்லை.

ஒரே பிரகாரம் தான். ஆமாம். வெட்டவெளிதான்!

ஓரளவுக்கு மரங்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் தான் இந்த மும்மூர்த்திகளும் நின்றிருக்கின்றனர்.


பிரம்மா – சிவன் – விஷ்ணு மும்மூர்த்திகளுக்குக் கோயில் எடுப்பது, பல்லவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. நம்ம மாவட்டத்தில் இருக்கிற, மண்டகப்பட்டு குடைவரை!

அப்புறம், நம்ம ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற, திருவாமாத்தூர். பலகைக் கல்லில் மும்மூர்த்திகள். பல்லவர் காலம்.

அன்னியூரில் அழகிய கருங்கல்லில் மும்மூர்த்திகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர்.

அருகிலேயே, இடம்புரி விநாயகர்.



இன்றும் வழிபாட்டில் இருக்கும் இந்தச் சிற்பங்கள் சோழர் காலத்தியதாக இருக்கலாம்! வல்லோர் விளக்க வேண்டும்.

இவை தவிர, அன்னியூரில் பிரம்மாண்ட சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன.

நேற்று 17.09.2019 மாலை திடீர் பயணமாக நண்பர்கள் சரவணகுமார், விஷ்ணுவும் இங்குச் சென்றிருந்தோம்.

நல்ல மழை! நனைந்தபடி இரவு விழுப்புரம் வந்து சேர்ந்தோம்.

மும்மூர்த்திகள் மற்றும் அன்னியூர் ஆலயங்களை தரிசிக்க வாய்ப்பு வழங்கிய நண்பர் திரு. அன்னியூர் சிவா
 அவர்களுக்கும், வழித்துணையாக வந்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நம் நன்றிகள்..!

திங்கள், 16 செப்டம்பர், 2019

கல்யாணம்பூண்டி - பானை ஓடுகள்

“எங்கெங்கு காணினும் பானை ஓடுகளடா”


பாரதி இன்றிருந்தால்,
கல்யாணம்பூண்டி கிராமத்திற்கு வந்திருந்தால்
இப்படித்தான் பாடியிருப்பான்!


ஆமாம். கல்யாணம்பூண்டி கிராமம் முழுக்க பானை ஓடுகளின் சிதறல்கள்!

வாய் அகன்ற, குறுகிய
தடித்த, மெல்லிய ஓடுகள் ஏராளம், ஏராளம்.


எப்படியும் 2000 ஆண்டுகள் பழமையானதாகத்தான் தெரிகிறது.

மிகப் பெரிய வரலாறு கல்யாணம்பூண்டிக்குள் புதைந்துள்ளது.

வெளிக்கொணர வேண்டும்! கொண்டு வருவோம்!


கல்யாணம்பூண்டி: விழுப்புரம் – செஞ்சி சாலையில் அமைந்துள்ளது.

புதன், 11 செப்டம்பர், 2019

பரிக்கல் - முதுமக்கள் தாழிகள்

“ஊரே சுடுகாடாகத்தான் இருந்திருக்கு!” ஆச்சரியப்பட்டார், உடன் வந்த நண்பர் திருவாமாத்தூர் சரணவணக்குமார்.

ஆமாம். எங்கெங்கு காணினும் உடைந்தத் தாழியின் ஓடுகள் நம்மை இப்படித்தான் நினைக்க வைக்கின்றன.


உளுந்தூர்ப்பேட்டை அருகில் உள்ள பரிக்கல் (நத்தம்) கிராமத்தில்தான் இந்த நிலை.

பரிக்கல் கிராமத்தின் வடக்கே மிகவும் பிரம்மாண்டமாக பரந்துவிரிந்துக் காட்சியளிக்கிறது, பரிக்கல் ஏரி.


ஏரியின் களிங்கல் பகுதியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இன்னமும் முழுமையாகக் காட்சியளிக்கின்றன முதுமக்கள் தாழிகள்.


களிங்களுக்கு எதிரே சில அடி தூரத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று பிளாட் போட்டு இருக்கிறது.


அதிலும்கூட ஐந்தாறு முதுமக்கள் தாழிகள் இருக்கின்றன.

நத்தம் பகுதி மிகப்பெரிய புதைவிடமாக, ஈமச்சின்னங்கள் நிறைந்தப் பகுதியாக இருந்திருக்கிறது.

தமிழர்களின், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரலாற்றுத் தடத்தினைக் கொண்டப் பகுதி!

இந்தப் பகுதியில் எப்படி அரசாங்கம் பட்டா கொடுத்தது? நமக்குப் புரியவில்லை!

நல்லவேளை, யாரும் இங்க இடம் வாங்க இதுவரை முன்வரவில்லை. சில அடி தூரத்தில் அமைந்துள்ள ஏரி களிங்கல்தான் வருகிறவர்களை யோசிக்க வைத்திருக்க வேண்டும்!


அந்த வகையில் பரிக்கல் ஏரிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!

நத்தம் பகுதியில்தான் அப்போதை கிராமம் இருந்திருக்க வேண்டும் என அழகாக விவரிக்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி (வயது75).


ஒருகட்டத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வெளிப்பட, பரிக்கல் பெரிய கிராமமாக உருவெடுத்துள்ளது.

பண்டையத் தமிழர்களின் வாழ்வியற் தடயங்கள் நிறைந்த பரிக்கல் - நத்தம் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும்! இதற்கான முன்முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்..!


நன்றி:
திருவாமாத்தூர் கண சரவணகுமார்
Vishnu Stark

கல்யாணம்பூண்டி கல்தூண்கள்



பேராசிரியர் த.பழமலய் கூட இதுபற்றி கவிதை எழுதியிருக்கிறார்.

செஞ்சி வேங்கட ரமணர் கோயிலுக்கு எழில் சேர்க்கும் அழகிய சிற்பங்கள் அடங்கியத் தூண்கள் கல்யாணம்பூண்டியில் இருந்து தான் கொண்டு செல்லப்பட்டனவாம்.

இதன் மிச்ச சொச்சங்களை இப்போதும் நாம் இங்குப் பார்க்கலாம்!

இதிலும் கூட சில தூண்கள் அண்மைக் காலத்தில் காணாமல் போய் இருக்கின்றன!

இருப்பவற்றை யாவது பாதுகாக்க வேண்டும். "ஒவ்வொன்றிலும் எண் போட்டு வையுங்கள்" உள்ளூர் நண்பர்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.

2005ஆம் ஆண்டில் அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுடன் சென்றிருந்தேன்.


14 ஆண்டுகளுக்குப் பின்பு, அண்மையில் கல்யாணம்பூண்டி சென்றிருந்தேன்.

கல் தூண்கள் குறித்து உங்களுடன் ஒரு பகிர்வு...

திங்கள், 9 செப்டம்பர், 2019

களப்பயணங்கள் குறித்த பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நாம் மேற்கொண்டு வரும் களப் பயணங்கள் குறித்த ஒரு பதிவு...

இன்றைய 10.09.2019 The new Indian express நாளிதழில்...


நன்றி:
செல்வி.கிருத்திகா சீனிவாசன்.
சிறப்பு செய்தியாளர்.


வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மரக்காணம் - கழுவெளி

கிழக்கு கடற்கரை சாலையில், பக்கிங்காம் கால்வாய்…

கால்வாயின் வடகரை காஞ்சிபுரம் மாவட்டம். தென்கரை விழுப்புரம் மாவட்டம்.

பக்கிங்காம் கால்வாய் கரைகளில் இயற்கையாகவே உருவாகி இருக்கும் சதுப்பு நிலப் பகுதிகள். அதனெயொட்டி அடந்து வளர்ந்து இருக்கும் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகள்.


இந்த அலையாத்திக் காடுகளுக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை சட்டவிரோத இறால் பண்ணைகள்!

விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓரளவு அகற்றப்பட்டு விட்டன.

அலையாத்திக் காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.

இந்த இடத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை?

இயற்கையின் கொடையாகத் திகழும் இந்த சதுப்பு நிலப் பகுதியையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் நிஜமாவே அக்கறை காட்டுகிறார் நண்பர் சர்வேஷ் குமார்.


அவருக்கு நம் வாழ்த்துகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கும் இருக்கிறது!


லையாத்திக் காடுகள் நோக்கிய இந்தப் பயணத்தில் துணையாக நின்ற நண்பர்கள் திரு.சர்வேஷ் குமார், வழக்கறிஞர் திரு.சாரதி, தம்பி விஷ்ணு ஆகியோருக்கு நன்றிகள்..

வியாழன், 5 செப்டம்பர், 2019

பொம்மையார் பாளையம் ஓடை

விஜயகாந்த் முதல் விஷால் வரை நடித்த ஏராளமான திரைப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடந்து இருக்கிறதாம்!

வடிவேலுவின் 23ஆம் புலிகேசியின் பல்வேறு காட்சிகள் இந்தப் பகுதியில் தான் படமாக்கப்பட்டுள்ளனவாம்.

நடந்த படப்பிடிப்புகள் குறித்து  கதைகதையாகச் சொல்லும் உள்ளூர் மக்கள்,

இந்த ஓடைப் பகுதிக்கு "ஷீட்டிங் ஓடை" என்றே பெயர் வைத்துவிட்டார்கள்!

நண்பர்கள் சாரதி, விஷ்ணு ஆகியோருடன்

பொம்மையார் பாளையம் ஓடைப் பகுதியை இன்று 05.09.2019 பார்வையிட்டேன்.


பெய்த மழையில் செம்மண் குழம்பாகவும்


காலங்களைக் கடந்து செம்மண் குன்றுகளாகவும்

இயற்கையின் அதிசயமாய்
காட்சி அளிக்கும்


விழுப்புரம் மாவட்டம்,
பொம்மையார் பாளையம் ஓடை குறித்து பேச வேண்டிய பல விசயங்கள் இருக்கு!

பேசுவோம்..!

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தொண்டூர் - தமிழிக் கல்வெட்டு

“(இ)ளங்காயிபன் ஏவ அகழ்ஊறரம்
மோசி செய்த அதிடானம்”

தொண்டூர், பஞ்சனார்படி மலைக் குன்றில் காணப்படும் கல்லெழுத்து வாசகம்.

இதன் காலம் கி.மு.2ஆம் நூற்றாண்டு!


இக்கல்வெட்டினை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பதிவு அதிகாரியாக இருந்த திரு.மா.சந்திர மூர்த்தி அவர்கள், 17.10.1991இல் கண்டறிந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளத் தொன்மை வாய்ந்தக் கல்வெட்டு, தொண்டூர் கல்வெட்டு ஆகும்.

தமிழ் எழுத்தின் வளர்ச்சியைக் காட்டும் கல்லெழுத்துக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது தொண்டூர் கல்வெட்டு!

பஞ்சனார்படி மலையில் சமணக் கற்படுக்கைகள் காணப்படுகின்றன.


இவற்றிற்கு அருகில் தான் மேற்காணும் கல்லெழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.


கற்படுக்கைகளுக்கு அருகில் உள்ள பாறையில், பார்சுவநாதர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தின் தொன்மையைச் சொல்லும் தொண்டூர் கல்வெட்டு, தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இல்லை என்பதையும் இங்குச் சொல்லியாக வேண்டும்!


தொண்டூர்: செஞ்சியில் இருந்து 16 ஆவது கி.மீ.இல் பென்னகர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

புகைப்படங்கள்: நண்பர்
திருவாமாத்தூர் கண.சரவணக்குமார்

திங்கள், 2 செப்டம்பர், 2019

பேரங்கியூர் ஐயனார் - பத்திரிகை செய்திகள்

விழுப்புரம் அருகே உள்ள
பேரங்கியூர்

ஐயனார் சிற்பம் குறித்து

இன்றைய தினமணி, தினத்தந்தி  நாளிதழ்களில்...

                    தினமணி 03.09.2019

                      தினத்தந்தி 03.09.2019
நன்றி:
செய்தியாளர்கள்
திரு.இல.அன்பரசு
திரு.சா.வி.தமிழ்மறை

பேராசிரியர் சங்கர நாராயணன் ஜி

திரு. ராஜா, திரு. கலியபெருமாள் பேரங்கியூர்

மற்றும்
நண்பர் திருவாமாத்தூர் கண.சரவணக்குமார்
ஆகியோருக்கு...

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஆலகிராமம் பிள்ளையார்

ஆதிவிநாயகர், சோமவிநாயகர், பாலகணபதி, ஹேரம்ப கணபதி… இன்னும் எத்தனை எத்தனை பேர்கள்.

விழுப்புரத்தில் கூட “கோட்டை விநாயகர்” வீற்றிருக்கிறார்.

இவர் குறித்து, குறிப்பாக இவர் பிறப்பு குறித்து எத்தனை எத்தனை கதைகள்!

ஆனால், "பிள்ளையார் பிறந்தது கலைஞனது சிந்தனையில்" என்பார், எழுத்தாளர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

அதுவும், "இந்தக் கடவுள் தமிழனின் கண்டுபிடிப்பு" என்றும் சொல்வார் அவர்.

கணபதி, வாதாபியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்று வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில்,

இந்த வரலாற்றுக் கதையை முறியடித்து இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம், ஆல கிராமத்துப் பிள்ளையார்!


இவரதுக் காலம் கி.பி.4-5 நூற்றாண்டு!

இந்த வகையில், சிற்பத்தின் இடம்பெற்றுள்ள கல்லெழுத்தின் அடிப்படையில்,

தமிழ்நாட்டுப் பிள்ளையார் சிற்பங்களில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார், ஆலகிராமத்தார்…