சனி, 29 ஜூலை, 2017

பி.ராமமூர்த்தியின் விடுதலை போரும் திராவிட இயக்கமும்

கம்யூ.கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி எம்.பி.யின் “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்”  எனும் நூலினை சமீபத்தில் வாசித்தேன்.

1983இல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ். 468 பக்கங்கள் உள்ள நூலின் விலை ரூ.10 தான். ஆச்சரியப்பட்டேன்.

மேலட்டையில், ஆரிய மாயையா? திராவிட மாயையா? எனும் சப் டைட்டிலும் கொடுத்திருக்கின்றனர்.

இந்நூல் இதுகுறித்தும் பேசுகிறது என்பதைத் தெரிவிக்கும் உத்தி.


விடுதலைப் போரின் போது தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகளையும், இதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் பேசும் இந்நூல், பின்னர் அதனையும் கடந்து எம்.ஜி.ஆர். ஆட்சிவரை தொடர்கிறது.

“இந்த நூலை நான் எழுதும்போது, பொதுவாழ்க்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கிருந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருகிற தலைவர்களையும், அவர்களுடைய இயக்கங்களையும் நான் அனுபவப்பூர்வமாக அறிவேன். அவர்களுடன் நெருங்கிப் பழகியவன் நான். சுதந்திர இயக்கத்தில் பல உப நதிகளில் நானும் இரண்டறக் கலந்தவன்.
இந்த நூல் முற்றிலும் என் ஞாபகத்திலிருந்தே எழுதப்பட்டுள்ளது. அதனால் சிற்சில சம்பவங்களின் ஆண்டுகள் தவறாக இருக்கலாம். ஆனால் நிகழ்ச்சிகள் ஒன்றும் தவறானதல்ல. இந்த நூலை வருங்கால தலைமுறையினருக்கு சமர்ப்பணமாக அளிக்கிறேன்எனும் நூலாசிரியரின் முன்னுரை முக்கியமானது.

“ஜஸ்டிஸ் கட்சியின் கதை அனேகமாக 1937-ம் ஆண்டோடு முடிந்துபோன ஒன்றாகும். இந்தக் கட்சி இருந்துவந்த காலம் பூராவிலும் இந்நாட்டின் தேசபக்தியும் சுதந்திர வாஞ்சையும் கொண்ட எந்தவொரு இந்தியனும் பெருமைப்படக் கூடியதாக இல்லை. மாறாக வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருந்தது.என ஜஸ்டிஸ் கட்சியை விமர்சிக்கும் நூலாசிரியர், இதற்கானக் காரணக் காரியங்களையும் விளக்கியிருக்கிறார்.

நாடே எதிர்த்த சைமன் கமிஷனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு, மாண்டேகு செம்ஸ்போர்டுக்கு வரவேற்பு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு ஆதரவாக ஜஸ்டிஸ் கட்சியினர் கொடுத்த அறிக்கை, என விவரித்துச் செல்கிறார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்கு, பதினாரரை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி தனது சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்று குற்றம்சாட்டும் நூலாசிரியர், “இதுதான் பிராமணல்லாதாரின் நலன் காத்த லட்சணம்!என்கிறார்.

“அரண்மனைக்காரர்கள் சீமான்கள். துரைமார்களின் செல்லப்பிள்ளைகள். சரிகைக் குல்லாக்காரர்கள்என்று அண்ணா அவர்களால் விமர்சிக்கப்பட்டவர்களைத் தான் தங்களது மூதாதையர்கள், தாங்கள் அவர்களின் வழித்தோன்றல்கள் பரம்பரையினர் என்று இன்றைய திராவிட இயக்கத்தினர் மார்தட்டிக் கொள்வதுதான் வியப்பானது–விந்தையானது – வேடிக்கைக்கு உரியதுஎன எள்ளி நகைக்கிறார்.

“திராவிடநாடு என்பது ஒரு கனவுதான் என்பதை திரு.அண்ணாதுரை உணர்ந்து அவரே 1962-ல் அதைக் கைவிட்டுவிட்டார்என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொண்ட கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் மலையாளி - கன்னடன் என மோதிக்கொண்டதையும் உரிய இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, “பெரியார் செய்துவந்த நாத்திகப் பிரச்சாரத்துக்கு, கடவுள் மறுப்பு பிரச்சாரத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம். அவரைக் கடவுளாக்கி சூடம் கொளுத்தி சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்வார்கள். அவருடைய கொள்கைகளை சவக்குழியில் புதைப்பார்கள். இதுதான் திராவிட இயக்கத்திற்கு நேர்ந்துள்ள கதிஎன்பதையும் குறிப்பிட்டுள்ளார்.


திராவிட இயக்கம் நூற்றாண்டுவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பி.ராமமூர்த்தி எம்.பி.யின் இந்த நூல் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்!  

செவ்வாய், 25 ஜூலை, 2017

கவிஞர் த .பழமலய் மீதான விமர்சனம்...

‘பூட்ட கேஸ்

இந்த வார்த்தைக்குப் பொருள் என்னவாக இருக்கும்?

அகராதிகளில் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

பூட்ட கேஸ் – ஒன்றுமில்லாதது அல்லது ஒன்றுக்கும் உபயோகப்படாதது - என்பதாக நாமாகப் பொருள் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

சரி, இப்போது இதற்கு என்ன அவசியம்? - நீங்கள் கேட்கக் கூடும். இருக்கிறது, அவசியம் இருக்கிறது.

கவிஞர் பேராசிரியர் த.பழமலய் அவர்கள் குறித்தான விமர்சனப் பதிவு, அண்மையில் நண்பர் திரு.ஆ.இரவிகார்த்திகேயன் அவர்களால் முக நூலில் இடப்பட்டிருந்தது.

இதன்மீது ஏராளமான நண்பர்கள் கருத்திட்டிருந்தனர். மகிழ்ச்சி.

குறிப்பாக, மனோன்மணி புதுஎழுத்து எனும் பெயரிலானப் பதிவும் அதில் இடம் பெற்றிருந்தது. அதில், த.பழமலய் அவர்களை ‘பூட்ட கேஸ் எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனோன்மணி புதுஎழுத்து எனும் பெயரில் எழுதி வருபவர், மதிப்பிற்குரிய கல்வெட்டு ஆய்வாளர்களில் ஒருவர் என்பது என்னுடைய அனுமானம்.

ஓராண்டுக்கு முன்பு என நினைக்கிறேன். ஒருமுறை என்னுடன் அவர் செல்பேசியில் பேசியிருக்கிறார். ‘உங்களுடைய, வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் நூலை அனுப்புங்கள். நான் எழுதிய நூல்களையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அவருக்கு மதிப்பளித்து நானும் என்னுடைய நூலினை அனுப்பி வைத்தேன் ஆனால், அவரிடமிருந்து இதுநாள்வரை எந்த நூலும் வரவில்லை.

இருக்கட்டும். பூட்ட கேசுக்கு வருவோம்.

வரலாற்றைப் பொருத்தவரை பூட்ட கேஸ் என்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பல லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூட்ட கேசுகளாகக் கருதப்பட்டு, மண் மூடியவைதான், இன்று மாபெரும் வரலாற்று ஆதாரங்களாக நம் முன் நிற்கின்றன என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.


கவிஞர் பழமலய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் அவரதுக் கருத்துக்களும் சமூகத்துக்குத் தேவையா? இல்லையா? என்பதை வரலாறு முடிவு செய்யும்.

ஒருவர் குறித்து விமர்சனம் செய்யப்படுவது தவறு என்று சொல்ல முடியாது.

ஆனாலும், பொதுவெளியில் இத்தகைய விமர்சனங்கள் நயத்தக்க நாகரிகத்துடன் இருக்க வேண்டும் எனக்கருதுகிறேன்.

‘அப்போ, பழமலயின் பேச்சு? எனக்கேட்கலாம். விவாதத்துக்கு உரியது, விமர்சனத்துக்கு உரியதுதான்.

தொடர்ந்து விவாதிப்போம். விமர்சிப்போம். அதற்கான சகல விதமான உரிமைகளும் நமக்குண்டு. அவரும் இதற்கு இடம்கொடுப்பார். அதற்கான விளக்கமமும் அளிப்பார்.

ஆனால்,
‘பூட்ட கேசு என்பதெல்லாம் என்ன மாதிரியான வார்த்தை?

எனக்குப் புரியவில்லை. என்னால் இரசிக்கவும் முடியவில்லை..!   

திங்கள், 24 ஜூலை, 2017

பெ.சு.இலட்சுமணசாமி

விழுப்புரம் பிரமுகர்கள் – 10

பெ.சு.இலட்சுமணசாமி



1953 நவம்பர் மாத கல்கி இதழில் “அபூர்வமான அடக்கத்துடன் அற்புதமான கல்வித் தொண்டு நடத்திவருகிறார் விழுப்புரம் ஸ்ரீலட்சுமணசாமிஎனப் பாராட்டி எழுதப்பட்டு இருந்தது.

உண்மைதான். விழுப்புரம் சந்தான கோபாலபுரத்தில் 1930களில் இந்து உயர்தர பாடசாலையாக இருந்து, பின்னர் மகாத்மா காந்தி பாடசாலையாக மாற்றம் பெற்ற பள்ளியை யாராலும் மறக்க முடியாது.

இப்பள்ளியின் நிர்வாகிதான், திருவாளர் பெ.சு.இலட்சுமணசாமி அவர்கள்.

இவர், காந்தியின் மீதும் காங்கிரசின் மீதும் பற்று கொண்டவர். அதைவிட, தலைவர் காமராசர் மீது அளவற்றப் பற்றும் பாசமும் வைத்திருந்தவர்.

பெருந்தலைவர் வழிநின்று, இக்கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஏழை மக்களுக்கும் கல்வி சென்று சேரவேண்டும் என்பதில் இலட்சுமணசாமி அவர்கள் உறுதியாக இருந்தார்.

இடைநிற்றல், இடைநீக்கம் எனும் பேச்சுக்கெல்லாம் இப்பள்ளியில் இடம் கிடையாது.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தொடர்ந்துக் கல்வி பெற வேண்டும் என்பதுதான் இலட்சுமணசாமி அவர்களின் கனவாக இருந்தது. அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

50களின் தொடக்கத்தில் அவினாசி, வாலாஜா மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில்தான், பள்ளிக்கூடங்களில் அச்சுக்கலைப் பாடமாகக் கற்றுத்தரப்பட்டது. இதில், விழுப்புரத்தில் இப்பயிற்சிக் கொடுக்கப்பட்டக் கல்வி நிறுவனம், மகாத்மா காந்தி பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கப்பட்ட இப்பள்ளிக் கட்டடத்தை 03.12.1957இல் தமிழ்நாடு முதலமைச்சர் கே.காமராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

இலக்கிய வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இப்பள்ளியில், பாரதிதாசன், பாரதியின் மகளார் தங்கம்மாள் பாரதி, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இலக்கியக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன.

உண்மையில், விழுப்புரம் கல்வித்துறை வரலாற்றில் மகாத்மா காந்தி பாடசாலை ஒரு மைல் என்றால் மிகையாகாது. இதில் பயின்ற ஏராளமான மாணவர்கள் இப்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.

இதற்குக் காரணம், இதன் நிறுவனர் பெ.சு.இலட்சுணசாமியின் இடையறாத உழைப்புதான். 



தற்போது மகாத்மா காந்தி பாடசாலை, மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியை  அவரதுமகனார் இல.இரவீந்திரன் அவர்கள் சிறப்பாக நிர்வகித்து நடத்தி வருகிறார்.    

புதன், 19 ஜூலை, 2017

தோழர் எஸ்.பத்மநாபன்

விழுப்புரம் பிரமுகர்கள் – 9

தோழர் எஸ்.பத்மநாபன்



விழுப்புரம் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்றவர்.

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் வசித்து வந்த இவர், இரயில்வேயில் ஃபயர் மேனாக பணியாற்றினார்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் போர்க்குணம் மிக்கவர் பத்மநாபன். அகில இந்திய இரயில்வே வேலைநிறுத்தத்தில் உணர்வுடன் பங்கேற்ற இவர், தொழிலாளர்களைத் தட்டி எழுப்பினார்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத ஆளும் வர்க்கம் பத்மநாபனை பணிநீக்கம் செய்தது. ஆனாலும் சோர்ந்துவிடவில்லை இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரானார்.

கட்சி வழங்கிய சொற்ப ஊதியத்தில் தனதுக் குடும்பத்தை நடத்திய பத்மநாபன், பொதுவுடைமைத் தத்துவத்தை விடாமல் பற்றிக் கொண்டார்.

கட்சிக் கட்டளையிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற இவர், 11 முறை சிறை சென்றிருக்கிறார். ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட உறுப்பினராக இருந்து, நான்கைந்து தாலுகாக்களுக்கு பொறுப்பேற்று கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.

1964-69 காலக்கட்டத்தில் பத்மநாபனும் அவரது மனைவி சரஸ்வதியும் விழுப்புரம் நகரமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
வறுமை தங்களை வாட்டினாலும், யாரிடமும் கை நீட்டி பணம் வாங்கக் கூடாது எனும் கொள்கைப் பிடிப்புடன் இவர்கள் மக்கள் பணியாற்றினர்.

கீழ்வெண்மணி சம்பவத்தைக் கண்டித்தும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் (29.01.1964), பாவேந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் (29.06.1964),  விழுப்புரம் நகரமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் தோழர் எஸ்.பத்மநாபன் என்பது குறிப்பிடத்தக்கது.


மகாராஜபுரம் நகராட்சிப் பள்ளி தொடங்கப்படுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த இவர், தனது 54ஆவது வயதில் 16.04.1984இல் மறைந்தார்!     

செவ்வாய், 18 ஜூலை, 2017

விழுப்புரம் நகராட்சியைப் பாராட்டலாம்

நல்ல விசயம்தான்... விழுப்புரம் நகராட்சியைப் பாராட்டலாம்..!

புதிய பஸ் நிலையச் சுவர்களைப் பார்க்கும்போது பல நேரங்களில் எரிச்சல்தான் ஏற்படும்.

கண்ணே மணியே தொடங்கி... எங்களை மறந்தாயா? என்பது வரையிலான விதவிதமான சுவரொட்டிகள் இவற்றை ஆக்கிரமித்திருக்கும்.

விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை. வடக்குப் புறத்தில் இருக்கும் சுவரை சுத்தம் செய்திருக்கிறார்கள்.

அப்புறம்...

வெறுமனே வெள்ளையடித்து விட்டுவிடாமல், அதில் சில ஓவியங்களையும் வரைந்து வைத்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான விளம்பரம்தான் இது. ஆனாலும் பரவாயில்லை, பொருத்தமான இடத்தில்தான் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

கழிவறையின் அவசியத்தை வலியுறுத்தும் விளம்பரப் படங்கள் இவை.

இவற்றினூடாக, செஞ்சிக் கோட்டை பல வண்ணங்களில் பளிச்சிடுகின்றது. அழகியப் பறவைகள் கீச்சிடுகின்றன. புள்ளி மான், விழிகள் மருளப் பார்க்கிறது.




























































ஓவியங்கள் அத்தனையும் அழகு!

இம்முயற்சிக்காக, விழுப்புரம் நகராட்சியைப் பாராட்டலாம்.

நிலையத்தின் மற்றப் பகுதிகளில் இருக்கும் சுவர்களும்கூட இப்படி மாற்றப்படும் என நம்புவோம்.

அப்படியே, 

பஸ் நிலையத்துக்குள் நுழையும்போது மூக்கைப் பொத்திக் கொள்ளும் நிலைமை இன்னும் இருக்கிறதே!

தூய்மை இந்தியா திட்டத்தில் இதனையும் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் இன்னும் சந்தோசம் தான்..! 

திங்கள், 17 ஜூலை, 2017

எழுத்தாளர் பனையபுரம் அதியமான் அவர்களுடன் சந்திப்பு...

எழுத்தாளர் 

பனையபுரம் அதியமான் 

அவர்களுடன் சந்திப்பு...

இவர் எழுதிய

பல கட்டுரைகளைத் தினந்தந்தியில் படித்திருக்கிறேன்.

வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நூல்களையும் படித்திருக்கிறேன்.

கோயில்கள் தொடர்பானத் தகவல்களை ஆன்மீகத்தோடு நிறுத்திவிடாமல், கல்வெட்டுகளின் துணையுடன் வரலாற்றுத் தகவல்களையும் இணைத்திருப்பார்.

புகழ்ப்பெற்ற பனையபுரத்தின் பனங்காட்டீசுவரர்க் கோயிலின் ஒருபகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறையால், சாலை விரிவாக்கத்துக்காகக் கையகப்படுத்தும் நடவடிக்கை 2011இல் உருவானது.

இதை அந்தக் கிராம மக்கள் எதிர்த்தனர். கோயில் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கான முயற்சியில் முழுமூச்சில் ஈடுபட்ட பனையபுரம் அதியமான், தனது வலிமைமிக்க எழுத்தை மிகச்சரியானத் திசையில் செலுத்தினார்.

விளைவு? அனைத்துக் கரங்களும் ஒன்றிணைந்ததால் பனையபுரம் கோயில் காப்பாற்றப்பட்டது.

திரு.அதியமான் அவர்களின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம். ஆனால் அவர் எனக்குப் பரிச்சயமில்லை.

இரண்டொரு மாதங்களுக்கு முன்புதான், தொலைப்பேசி வாயிலாகப் பரிச்சயமானார். ஆனாலும், நேரில் பார்க்கவில்லையே..?

அந்தக் குறையும் தீர்ந்தது. இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவரை நேரில் சந்தித்து அளவளாவினேன். மகிழ்ச்சியடைந்தேன்.


அப்போது, அவர் எழுதிய ‘ஒப்பற்ற வாழ்வுதரும் உன்னத ஆலயங்கள் நூலினையும் எனக்கு வழங்கினார்.


இந்நேரியப் படைப்பாளரின் தொடர்பு இன்னும் பல்லாண்டுக் காலம் தொடர வேண்டும்..!

ஞாயிறு, 16 ஜூலை, 2017

‘சேர்மன்’ எம்.சண்முகம்

விழுப்புரம் பிரமுகர்கள் – 8



‘சேர்மன் எம்.சண்முகம்

விழுப்புரத்தில் சேர்மன் எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஒரே பிரமுகர் எம்.சண்முகனார்தான்.

1926 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது நகரமன்றப் பயணமானது 55 ஆண்டுகளைத் தொட்டுச் சரித்திரம் படைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தந்தை பெரியாரின் தொடக்ககாலத் தொண்டர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எம்.சண்முகம்.

திமுக தொடங்கப்பட்டபோது அதன் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகித்தவர். கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு உள்ளிட்டப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.

அண்ணா அவர்களால் ‘தம்பி என்றும் அன்போடும், கலைஞரால் ‘பெரியவர் என்று மரியாதையோடும் அழைக்கப்பட்டவர்.

புதுவை விடுதலை இயக்கத்தின் முகமாக விழுப்புரம் திகழ்ந்தபோது, 1954 ஏப்ரலில் விழுப்புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமும், புதுவை விடுதலை மாநாடும் நடந்தது. இந்நிகழ்வுகளைத் தலைமையேற்று நடத்தியவர் எம்.சண்முகனார்.

நகரமன்ற உறுப்பினராகவும், 1947, 1952, 1969, 1986 ஆகிய காலக்கட்டங்களில் நான்குமுறை நகரமன்றத் தலைவராகவும், 1962, 1967, 1971 ஆகிய காலக்கட்டங் களில் மூன்று முறை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்திருக் கிறார்.

மாநில நிலவள வங்கித் தலைவர் பொறுப்பினையும் வகித்திருக்கிறார்.

1944இல் சாந்தா அல்லது பழனியப்பன் நாடகம் முதன்முதலில் விழுப்புரத்தில் அரங்கேற்றப்பட்டது. அப்போது இங்கு வந்து தங்கி, இதில் நடித்த கலைஞர், ‘சண்முக உடையாரின் மோட்டார் கொட்டகையில் குளித்துவிட்டுச்சென்ற நிகழ்வை எப்போதும் நினைவுகூர்வார்.

அரசு கலைக்கல்லூரி மற்றும் நிலவள வங்கிக் கட்டடம் ஆகியவை விழுப்புரத்தில் அமைவதற்குக் காரணமாகத் திகழ்ந்தவர் எம்.சண்முகனார்.

நகராட்சிப் பூங்காவிற்கு முன்பு ஒருமுறை இவரதுப் பெயர்தான் சூட்டப்பட்டிருந்தது.


இப்போதும்கூட நகரத்தில் உள்ள கிழக்கு ‘சண்முகபுரம் காலனி இப்பெரியவரின் நினைவைப் போற்றி வருகிறது.