வியாழன், 13 ஜூலை, 2017

திருக்குறளார் வீ.முனிசாமி

விழுப்புரம் பிரமுகர்கள் – 7

திருக்குறளார் வீ.முனிசாமி
வானொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய "ஏ மனிதா" என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் நம் திருக்குறளார் வீ.முனிசாமி.
விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை-வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
1935ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி, அரை நூற்றாண்டையும் கடந்தது.
1941ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர் அ.கி.பரந் தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார்.
தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் இரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப் பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தந்தை பெரியார் 1948இல் சென்னை இராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திரு.வி.க.,தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், "கல்விக் கடல்" சக்ரவர்த்தி நயினார்,"நாவலர்" நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
புராண, இதிகாச நூல்களை சோறு, குழம்பு போலவும், திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்துக்கொண்டிருந்த அக்காலத்தில், திருக்குறளை சோறாகவும் குழம்பாகவும் வைத்துக்கொண்டு, புராண இதிகாசங்களை ஊறுகாயாக வைத்துக்கொள்வதுதான் முறையான செயல் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையே தனது வாழ்வின் அடிப்படை நோக்கமாகக் கொண்டார் திருக்குறளார் வீ.முனிசாமி.
பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.
பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது. அதே நேரம், சிரித்து மறக்கப்படாது சிந்திக்க வேண்டும்" என வலியுறுத்தினார் திருக்குறளார். வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. 
1949ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், "குறள் மலர்" இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லியிலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் திருக்குறளாரின் திருக்குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.
நாடாளுமன்ற உறுப்பினராக (1952 - 1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளு மன்றப் பதிவேடுகளில் தனதுபெயருக்கு முன்பு "திருக்குறளார்" என்பதை இடம்பெறச் செய்தார். 
1981ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.
23.1.1951இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர்  கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்"  எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், திருக்குறள் வகுப்புகள் நடத்தியும்தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்துவள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி  இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அன்னாரது பூதவுடல் விழுப்புரம் கன்னியாகுளம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

2 கருத்துகள்:

  1. தமிழறிஞர் திருக்குறளார் முன்னெடுத்த திருக்குறளை பரப்புரை பணியாற்றும் அறிஞர்கள் இல்லாத வெற்றிடம் உள்ளது துயரம் தான்

    பதிலளிநீக்கு