திங்கள், 24 ஜூலை, 2017

பெ.சு.இலட்சுமணசாமி

விழுப்புரம் பிரமுகர்கள் – 10

பெ.சு.இலட்சுமணசாமி



1953 நவம்பர் மாத கல்கி இதழில் “அபூர்வமான அடக்கத்துடன் அற்புதமான கல்வித் தொண்டு நடத்திவருகிறார் விழுப்புரம் ஸ்ரீலட்சுமணசாமிஎனப் பாராட்டி எழுதப்பட்டு இருந்தது.

உண்மைதான். விழுப்புரம் சந்தான கோபாலபுரத்தில் 1930களில் இந்து உயர்தர பாடசாலையாக இருந்து, பின்னர் மகாத்மா காந்தி பாடசாலையாக மாற்றம் பெற்ற பள்ளியை யாராலும் மறக்க முடியாது.

இப்பள்ளியின் நிர்வாகிதான், திருவாளர் பெ.சு.இலட்சுமணசாமி அவர்கள்.

இவர், காந்தியின் மீதும் காங்கிரசின் மீதும் பற்று கொண்டவர். அதைவிட, தலைவர் காமராசர் மீது அளவற்றப் பற்றும் பாசமும் வைத்திருந்தவர்.

பெருந்தலைவர் வழிநின்று, இக்கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஏழை மக்களுக்கும் கல்வி சென்று சேரவேண்டும் என்பதில் இலட்சுமணசாமி அவர்கள் உறுதியாக இருந்தார்.

இடைநிற்றல், இடைநீக்கம் எனும் பேச்சுக்கெல்லாம் இப்பள்ளியில் இடம் கிடையாது.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தொடர்ந்துக் கல்வி பெற வேண்டும் என்பதுதான் இலட்சுமணசாமி அவர்களின் கனவாக இருந்தது. அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

50களின் தொடக்கத்தில் அவினாசி, வாலாஜா மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில்தான், பள்ளிக்கூடங்களில் அச்சுக்கலைப் பாடமாகக் கற்றுத்தரப்பட்டது. இதில், விழுப்புரத்தில் இப்பயிற்சிக் கொடுக்கப்பட்டக் கல்வி நிறுவனம், மகாத்மா காந்தி பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கப்பட்ட இப்பள்ளிக் கட்டடத்தை 03.12.1957இல் தமிழ்நாடு முதலமைச்சர் கே.காமராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

இலக்கிய வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இப்பள்ளியில், பாரதிதாசன், பாரதியின் மகளார் தங்கம்மாள் பாரதி, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இலக்கியக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன.

உண்மையில், விழுப்புரம் கல்வித்துறை வரலாற்றில் மகாத்மா காந்தி பாடசாலை ஒரு மைல் என்றால் மிகையாகாது. இதில் பயின்ற ஏராளமான மாணவர்கள் இப்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.

இதற்குக் காரணம், இதன் நிறுவனர் பெ.சு.இலட்சுணசாமியின் இடையறாத உழைப்புதான். 



தற்போது மகாத்மா காந்தி பாடசாலை, மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியை  அவரதுமகனார் இல.இரவீந்திரன் அவர்கள் சிறப்பாக நிர்வகித்து நடத்தி வருகிறார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக