வெள்ளி, 7 ஜூலை, 2017

வழக்கறிஞர் வி.ஆர்.நாகராஜன்

விழுப்புரம் பிரமுகர்கள்-4


வழக்கறிஞர் வி.ஆர்.நாகராஜன்


1952.

நாடு விடுதலைப் பெற்று முதல் சட்டமன்றத் தேர்தல் அந்தாண்டுதான் நடந்தது. 21 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கும் உரிமைப் பெற்றிருந்தனர்.

சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்தத் தேர்தலில், எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிப் போட்டியிட்டது. இக்கட்சி, தென்னார்க்காடு, வடார்க்காடு மாவட்டங்களில் தன் வேட்பாளர்களைக் களமிறக்கியது.

தேர்தலின் முடிவில் 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி.

அதில் ஒரு தொகுதிதான், விழுப்புரம் (பொது) தொகுதி. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் வி.ஆர்.நாகராஜன் அவர்கள். விழுப்புரத்தின் மூத்த வழக்கறிஞர்களுள் ஒருவர்.

மக்களுடன் நெருக்கமாக இருந்த வி.ஆர்.நாகராஜன், தனது சட்டமன்ற உறுப்பினர் பணியைத் திறம்படச் செய்தார்.


அதே காலக்கட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினராகவும் செயலாற்றினார்.

அப்பணியிலும்கூட, ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் சிறிதும் இடம் கொடுக்காமல் அவர் நேர்மையுடன் பணியாற்றியிருக்கிறார்.

தனக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சிபாரிசுடன் வந்தபோது, அதனையேற்க நாகராஜன் மறுத்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

வழக்கறிஞர் வி.ஆர்.நாகராஜன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, நகரத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலுக்கான முன்மண்டபப் பணிகளுக்கான அஸ்திவாரக் கல் நாட்டும் விழா 1953 செப்டம்பரில் துவங்கின. இதற்கான வரவேற்பு கமிட்டியின் தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார்.

வழக்கறிஞர் வி.ஆர்.நாகராஜன் அவர்கள் சிறந்தப் படிப்பாளி. சதா படித்துக் கொண்டே இருப்பார். முருங்கப்பாளையத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சிறுவயதில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.


(புகைப்பட உதவி: திரு.இல.இரவீந்திரன் அவர்கள், நிர்வாகி, மகாத்மா காந்தி பாடசாலை, விழுப்புரம்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக