திங்கள், 3 ஜூலை, 2017

டாக்டர் டி.தியாகராஜன்

விழுப்புரம் பிரமுகர்கள்-3

“... நான் டாக்டர் தியாகராஜன் வீட்டைத் தேடிக்கொண்டு சென்றேன். அவர் முன்பிருந்த வீட்டில் இல்லையென்றும், வேறு எங்கோ குடிபோய்விட்டதாகவும் சொன்னார்கள். என்னுடைய உடைகளடங்கிய பெட்டி மாத்திரம் என் கையில் இருந்தது.
ஒரு வண்டி பிடித்துக்கொண்டு அவர் வீட்டுக்குப் போகலாமென்றால், அந்த நேரத்தில் எந்த வண்டியும் கிடைக்கவில்லை. பெட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு நடந்தே விழுப்புரத்தின் பல தெருக்களைச் சுற்றிக் கடைசியாக டாக்டர் தியாகராஜன் வீட்டைக் கண்டுபிடித்தேன்.
அதற்குப் பிறகு அவர் சிரமம் எடுத்துக் கொண்டு நான் சேலம் போவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார்.
-தனது நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகத்தில் மேற்க்காணும் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் கலைஞர் அவர்கள்.
“விழுப்புரம் நகரமன்றத்தலைவர் டாக்டர்.திரு.தியாகராஜன் எங்களின் பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கப் பணிக்கு முனைப்பான முழு ஆதரவும் அளித்து வந்தார்என நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் புதுவை மக்கள் தலைவராக விளங்கிய வ.சுப்பையா அவர்கள்.
தன்னை நாடி வந்த திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்டுகள், கலைத்துறையினர் என அனைவருக்கும் உதவி செய்வதில் அட்சய பாத்திரமாகத் திகழ்ந்தவர் விழுப்புரம் டாக்டர் டி.தியாகராஜன் அவர்கள்.
ஆரோக்கிய மெடிக்கல் ஹால் இது டாக்டர் நடத்தி வந்த மருத்துவமனையின் பெயர். இங்கு சமூகத்தின் அடித்தட்டு மக்கள் எப்போதும் குவிந்திருப்பார்களாம். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக வைத்தியம் பார்த்திருக்கிறார்.
பெரியாரின் மீது பற்று கொண்டவர். தனது மருந்துச் சீட்டில் பெரியார் வாழ்க என அச்சிட்டு இருப்பாராம்.
பெரியார் எப்போது வந்தாலும் டாக்டர் வீட்டில்தான் தங்குவாராம். சுற்றுவட்டப் பகுதிகளில் அவர் பேசச் சென்றால் உணவு இங்கிருந்துதான் போகுமாம்.
முத்தமிழ் மன்றம் எனும் அமைப்பினை நடத்திவந்த டாக்டர், இதன் மூலம் நகரத்தில் கலை இலக்கியப் பணிகளைச் செய்திருக்கிறார்.

1955-59இல் விழுப்புரம் நகர்மன்றத்தின் துணைத்தலைவராக இருந்த இவர், 1964-69இல் நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
டாக்டர் அவர்கள் நகரமன்றத் தலைவராக இருந்த போதுதான், தென்பெண்ணை ஆற்றின் தண்ணீர், விழுப்புரம் வீடுகளுக்கு குடிநீராகக் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சிறப்புகளுடன் விழுப்புரத்துக்குப் பெருமை சேர்த்த டாக்டர் டி.தியாகராஜன் 19.06.1977இல் காலமானார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக