விழுப்புரம்
பிரமுகர்கள் – 6
காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர்
1894ஆம்
ஆண்டு. மே மாதம். 20ஆம் நாள். விழுப்புரம் கிழக்கு அனுமார் கோயில் தெருவில்
வசித்து வந்த சுப்ரமணிய சாஸ்திரிகள்–மகாலட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப்
பிறந்தார் சுவாமிநாதன்.
சுப்ரமணிய
சாஸ்திரிகள் அப்போது திண்டிவனத்தில் கல்விச்சாலைகளின் மேற்பார்வையாளராகப்
பணியாற்றிக் கொண்டிருந்தார். இதனால், சுவாமிநாதன், அங்கிருந்த ஆற்காடு அமெரிக்கன்
மிஷன் ஹைஸ்கூலில் சேர்க்கப்பட்டார்.
இரண்டாவது
பாரத்தில் முதன் முதலாக பள்ளிப் படிப்பில் சேர்க்கப்பட்ட சுவாமிநாதன் ஒவ்வொரு
வகுப்பிலும் முதல் மாணவராக விளங்கினார்.
வருட
இறுதி பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் முதல் பரிசுகளைத் தாமே பெற்றார். பைபிள்
தொடர்பானப் போட்டிகளில் இவர் முதல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1906இல்
நடந்த பள்ளி ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியரின் “ஜார் மன்னர்” நாடகத்தில் ஆர்தர் இளவரசராக சுவாமிநாதன் நடித்தது
அனைவராலும் பாராட்டப்பட்டது.
1906ஆம் ஆண்டு அன்றைய காமகோடி பீடாதிபதி திண்டிவனம் அருகே உள்ள
பெருமுக்கல் மலையில் சாதுர்யமாஸ்யம் அனுட்டித்து வந்தார்.
அப்போது தன் குடும்பத்தினருடன் அங்குச் சென்ற சுப்ரமணிய சாஸ்திரிகள்
பீடாதிபதியைச் சந்தித்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவரது மனதில் நீங்கா
இடத்தைப் பிடித்தார் சுவாமி நாதன்.
இதனைத் தொடர்ந்து 13.02.1907இல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது
பீடாதிபதியாகப் பதவியேற்றார் சுவாமிநாதன். அப்போது அவருக்கு வயது பதிமூன்று.
ஐந்தாம் ஃபாரம் படித்து வந்த மாணவர்.
லோககுருவான ஸ்ரீசந்திரசேகரேந்திரர் (சுவாமிநாதன்) தன்னுடைய தவ
வலிமையி னாலும், தன்னை இழந்த நலம் எனும் உயர்ந்த இலட்சியத்தாலும் மனிதருள்
தெய்வமாக உயர்ந்தார்.
திருவிடைமருதூரில் திருப்பாவை திருவெம்பாவை மாநாட்டை முன்னின்று
நடத்தினார். பக்திக்கு ஆதாரமான பரதக் கலைகளும், ஆகம சிற்பச் சாத்திரங்களும்
தழைத்தோங்க வேண்டுமென்று இளையாற்றங்குடியில் மாநாடு நடத்தினார்.
தெய்வீகப் பேரவையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆன்மீக
விழிப்புணர்விற்கானப் பணிகளைச் செய்தார்.
ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க பிடி அரிசித் திட்டத்தையும்
செயல்படுத்தினார்.
தேச விடுதலையின்போது, சுதேசியத்தை ஆதரித்த இந்தக் காவியுடை
சன்னியாசி, கதராடை அணிய வலியுறுத்தினார்.
விழுப்புரம் கிழக்கு அனுமார் கோயில் தெருவில் இவர் பிறந்த இடம் அவதார
ஸ்தலமாக்கப்பட்டு, அங்கு வேத பாடசாலை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக