புதன், 19 ஜூலை, 2017

தோழர் எஸ்.பத்மநாபன்

விழுப்புரம் பிரமுகர்கள் – 9

தோழர் எஸ்.பத்மநாபன்



விழுப்புரம் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்றவர்.

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் வசித்து வந்த இவர், இரயில்வேயில் ஃபயர் மேனாக பணியாற்றினார்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் போர்க்குணம் மிக்கவர் பத்மநாபன். அகில இந்திய இரயில்வே வேலைநிறுத்தத்தில் உணர்வுடன் பங்கேற்ற இவர், தொழிலாளர்களைத் தட்டி எழுப்பினார்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத ஆளும் வர்க்கம் பத்மநாபனை பணிநீக்கம் செய்தது. ஆனாலும் சோர்ந்துவிடவில்லை இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரானார்.

கட்சி வழங்கிய சொற்ப ஊதியத்தில் தனதுக் குடும்பத்தை நடத்திய பத்மநாபன், பொதுவுடைமைத் தத்துவத்தை விடாமல் பற்றிக் கொண்டார்.

கட்சிக் கட்டளையிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற இவர், 11 முறை சிறை சென்றிருக்கிறார். ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட உறுப்பினராக இருந்து, நான்கைந்து தாலுகாக்களுக்கு பொறுப்பேற்று கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.

1964-69 காலக்கட்டத்தில் பத்மநாபனும் அவரது மனைவி சரஸ்வதியும் விழுப்புரம் நகரமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
வறுமை தங்களை வாட்டினாலும், யாரிடமும் கை நீட்டி பணம் வாங்கக் கூடாது எனும் கொள்கைப் பிடிப்புடன் இவர்கள் மக்கள் பணியாற்றினர்.

கீழ்வெண்மணி சம்பவத்தைக் கண்டித்தும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் (29.01.1964), பாவேந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் (29.06.1964),  விழுப்புரம் நகரமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் தோழர் எஸ்.பத்மநாபன் என்பது குறிப்பிடத்தக்கது.


மகாராஜபுரம் நகராட்சிப் பள்ளி தொடங்கப்படுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த இவர், தனது 54ஆவது வயதில் 16.04.1984இல் மறைந்தார்!     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக