‘பூட்ட கேஸ்’
இந்த வார்த்தைக்குப் பொருள் என்னவாக இருக்கும்?
அகராதிகளில் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
பூட்ட கேஸ் – ஒன்றுமில்லாதது அல்லது ஒன்றுக்கும் உபயோகப்படாதது -
என்பதாக நாமாகப் பொருள் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.
சரி, இப்போது இதற்கு என்ன அவசியம்? - நீங்கள் கேட்கக் கூடும்.
இருக்கிறது, அவசியம் இருக்கிறது.
கவிஞர் பேராசிரியர் த.பழமலய் அவர்கள் குறித்தான விமர்சனப் பதிவு,
அண்மையில் நண்பர் திரு.ஆ.இரவிகார்த்திகேயன் அவர்களால் முக நூலில்
இடப்பட்டிருந்தது.
இதன்மீது ஏராளமான நண்பர்கள் கருத்திட்டிருந்தனர். மகிழ்ச்சி.
குறிப்பாக, மனோன்மணி புதுஎழுத்து எனும் பெயரிலானப் பதிவும் அதில்
இடம் பெற்றிருந்தது. அதில், த.பழமலய் அவர்களை ‘பூட்ட கேஸ்’ எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனோன்மணி புதுஎழுத்து எனும் பெயரில் எழுதி வருபவர், மதிப்பிற்குரிய கல்வெட்டு
ஆய்வாளர்களில் ஒருவர் என்பது என்னுடைய அனுமானம்.
ஓராண்டுக்கு முன்பு என நினைக்கிறேன். ஒருமுறை என்னுடன் அவர்
செல்பேசியில் பேசியிருக்கிறார். ‘உங்களுடைய, வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள்’ நூலை அனுப்புங்கள். நான் எழுதிய நூல்களையும்
உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றார்.
அவருக்கு மதிப்பளித்து நானும் என்னுடைய நூலினை அனுப்பி வைத்தேன்
ஆனால், அவரிடமிருந்து இதுநாள்வரை எந்த நூலும் வரவில்லை.
இருக்கட்டும். பூட்ட கேசுக்கு வருவோம்.
வரலாற்றைப் பொருத்தவரை பூட்ட கேஸ் என்று எதுவும் இருப்பதாக எனக்குத்
தெரியவில்லை.
பல லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூட்ட
கேசுகளாகக் கருதப்பட்டு, மண் மூடியவைதான், இன்று மாபெரும் வரலாற்று ஆதாரங்களாக நம்
முன் நிற்கின்றன என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்வார்கள் என நம்புகிறேன்.
கவிஞர் பழமலய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் அவரதுக்
கருத்துக்களும் சமூகத்துக்குத் தேவையா?
இல்லையா? என்பதை வரலாறு முடிவு செய்யும்.
ஒருவர் குறித்து விமர்சனம் செய்யப்படுவது தவறு என்று சொல்ல முடியாது.
ஆனாலும், பொதுவெளியில் இத்தகைய விமர்சனங்கள் நயத்தக்க நாகரிகத்துடன்
இருக்க வேண்டும் எனக்கருதுகிறேன்.
‘அப்போ, பழமலயின் பேச்சு?’ எனக்கேட்கலாம். விவாதத்துக்கு உரியது,
விமர்சனத்துக்கு உரியதுதான்.
தொடர்ந்து விவாதிப்போம். விமர்சிப்போம். அதற்கான சகல விதமான
உரிமைகளும் நமக்குண்டு. அவரும் இதற்கு இடம்கொடுப்பார். அதற்கான விளக்கமமும் அளிப்பார்.
ஆனால்,
‘பூட்ட கேசு’ என்பதெல்லாம் என்ன மாதிரியான வார்த்தை?
எனக்குப் புரியவில்லை. என்னால் இரசிக்கவும் முடியவில்லை..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக