ஞாயிறு, 16 ஜூலை, 2017

‘சேர்மன்’ எம்.சண்முகம்

விழுப்புரம் பிரமுகர்கள் – 8



‘சேர்மன் எம்.சண்முகம்

விழுப்புரத்தில் சேர்மன் எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஒரே பிரமுகர் எம்.சண்முகனார்தான்.

1926 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது நகரமன்றப் பயணமானது 55 ஆண்டுகளைத் தொட்டுச் சரித்திரம் படைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தந்தை பெரியாரின் தொடக்ககாலத் தொண்டர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எம்.சண்முகம்.

திமுக தொடங்கப்பட்டபோது அதன் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகித்தவர். கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு உள்ளிட்டப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.

அண்ணா அவர்களால் ‘தம்பி என்றும் அன்போடும், கலைஞரால் ‘பெரியவர் என்று மரியாதையோடும் அழைக்கப்பட்டவர்.

புதுவை விடுதலை இயக்கத்தின் முகமாக விழுப்புரம் திகழ்ந்தபோது, 1954 ஏப்ரலில் விழுப்புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமும், புதுவை விடுதலை மாநாடும் நடந்தது. இந்நிகழ்வுகளைத் தலைமையேற்று நடத்தியவர் எம்.சண்முகனார்.

நகரமன்ற உறுப்பினராகவும், 1947, 1952, 1969, 1986 ஆகிய காலக்கட்டங்களில் நான்குமுறை நகரமன்றத் தலைவராகவும், 1962, 1967, 1971 ஆகிய காலக்கட்டங் களில் மூன்று முறை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்திருக் கிறார்.

மாநில நிலவள வங்கித் தலைவர் பொறுப்பினையும் வகித்திருக்கிறார்.

1944இல் சாந்தா அல்லது பழனியப்பன் நாடகம் முதன்முதலில் விழுப்புரத்தில் அரங்கேற்றப்பட்டது. அப்போது இங்கு வந்து தங்கி, இதில் நடித்த கலைஞர், ‘சண்முக உடையாரின் மோட்டார் கொட்டகையில் குளித்துவிட்டுச்சென்ற நிகழ்வை எப்போதும் நினைவுகூர்வார்.

அரசு கலைக்கல்லூரி மற்றும் நிலவள வங்கிக் கட்டடம் ஆகியவை விழுப்புரத்தில் அமைவதற்குக் காரணமாகத் திகழ்ந்தவர் எம்.சண்முகனார்.

நகராட்சிப் பூங்காவிற்கு முன்பு ஒருமுறை இவரதுப் பெயர்தான் சூட்டப்பட்டிருந்தது.


இப்போதும்கூட நகரத்தில் உள்ள கிழக்கு ‘சண்முகபுரம் காலனி இப்பெரியவரின் நினைவைப் போற்றி வருகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக