சனி, 31 ஆகஸ்ட், 2019

கரைந்து வரும் நங்காத்தூர் மலை

பகலில் ஆடுமாடு மேய்ப்பது போல் வருவார்கள்; பாறைகளில் துளைபோட்டுப் போய்விடுவார்கள்.

இரவில் வந்து, வெடிவைத்துத் தகர்ப்பார்கள்.


வெட்டப்பட்ட பாறைகளை இரவோடு எடுத்துச் சென்று விடுவார்கள்...


என்கின்றனர், கல்யாணம்பூண்டி நண்பர்கள்.

விழுப்புரம் - செஞ்சி இடைப்பட்ட பகுதியில் உள்ள நங்காத்தூர் மலை இப்படித்தான்



கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.

இங்குக் குவாரிகள் எதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லையாம்!

பிறகு எப்படி, இவ்வளவு துணிச்சலாகச் செய்கிறார்கள்?

இப்படியே போனால் நங்காத்தூர் மலை இருந்த இடத்தில் நாம் மண்மேட்டினைத் தான் பார்க்க வேண்டும்!


இதை யார் தான் தடுப்பது?

"கனிமவளத் துறைக்குப் பொறுப்பானவர்
உங்க ஊர்தானே?"

நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..!

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பேரங்கியூர் - ஆச்சரிய ஐயனார்

பேரங்கியூரில் இருந்து இன்று காலை என்னைத் தொடர்பு கொண்ட, நண்பர் ராஜா அவர்கள், “ஐயா, எங்க ஊரில் சனி மூலையில், பொற்கலையுடன் காட்சிதரும் பழமையான ஐயனார் இருக்கிறார். வந்துப் பாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

 “பேரங்கியூர் உங்க ஊர் மட்டுமல்ல; எங்க ஊரும் கூடத்தான். என் அம்மா பிறந்து வளர்ந்த ஊராயிற்றே. இன்றே வருகிறேன்” என்று அவருக்குப் பதில் அளித்தேன்.

உடனடியாக திருவாமாத்தூரில் இருந்து நண்பர் சரவணகுமார் விழுப்புரம் வர, மாலை 4 மணிக்கு பேரங்கியூர் புறப்பட்டோம்.

பேரங்கியூரில் தேரடிக்கு அருகில், திறந்த வெளியில், சிறிய சிறிய யானைகள் புடைசூழ பலகைக் கல்லில் வீற்றிருக்கிறார் ஐயனார்.


பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எதிர் வீட்டில் இருந்து வந்த அந்த அம்மையார் என்னைச் சரியாக அடையாளம் கண்டார். “வாத்தியார் வீட்டுப் பேரன்” என்றார். (என் தாத்தா வீரபத்திர படையாட்சி ஆசிரியர் ஆவார்)

எனக்கு ஆச்சரியம் தான். “அதான் ஜாடை தெரியுதுங்களே” என்றார் சிரித்துக் கொண்டே!

ஐயனார் மீது ஏகப்பட்ட எண்ணெய் பூச்சு. குடத்தில் தண்ணீர் எடுத்து வந்த அம்மையார் சிற்பத்தின் மீது ஊற்றினார். சரவணக்குமாரும் ஓரளவு அழுத்தித் துடைத்தார்.



ஐயனார் தனித்த உருவமாகப் பார்த்து இருக்கிறோம்.

அப்புறம், பூரணி பொற்கலை சமேதராய் பார்த்து வருகிறோம்.

ஆனால், பேரங்கியூரில் இணையர் ஒருவரோடு இருக்கிறார், ஐயனார்!


ஒரு காலை தொங்கவிட்டும் மற்றொரு காலை மடக்கியும் அமர்ந்து இருக்கிறார்.

வலது கையில் ஏதோ ஏந்தி இருக்கிறார்.

தலைமுடி மகுடம் போல் இருக்கிறது. (பல்லவர் பாணியாக இருக்கலாமோ?)

அருகில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, ஆனால் ஒருகால் தெரியாத அளவிற்கு நளினமாக அமர்ந்து இருக்கிறார், இணையர்.

பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக காட்சிதரும் இந்த ஐயனார் ஆச்சரியம் ஊட்டுபவராகவே இருக்கிறார்.


இதற்கிடையில் வெளியூரில் இருக்கும் அவ்வூர் நண்பர்கள் ராஜா மற்றும் கலியபெருமாள் ஆகியோர் அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் உதவி வேண்டுமா? எனக் கேட்டபடி இருந்தனர்.

அவர்தம் கரிசனத்திற்கு நன்றி!
தக்க சமயத்தில் நம்மை இங்கு அழைத்து வந்த நண்பர் சரவணக்குமாருக்கும் நம் நன்றிகள்!

ஐயனாருக்குக் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் எப்படியாவது கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்கிறார் ராஜா.


இவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

பேரங்கியூரில் பல்லவர் கால மூத்த தேவி ஏற்கனவே கண்டறியப்பட்டு இருக்கிறார். பராந்தகச் சோழனின் திருமூலத்தானத்து தேவர் கோயில் கொண்டு இருக்கிறார்.

வரலாற்றை அசை போட்டுக்கொண்டு  இருக்கும் போது அம்மையார் அவர்கள்  சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்தார்.

ஏறக்குறைய, 19 வருடங்கள் கழித்து பேரங்கியூர் காபி குடிக்கிறேன்.


காபியுடன் இந்தக் கிராமத்தின் வரலாறும் எனக்குள் கலந்தது..!

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

செஞ்சி அருகே போத்தராஜா சிற்பம் கண்டுபிடிப்பு

தொண்டூர் பயணத்தின் போது கண்டறியப்பட்டவர்...

நண்பர் திருவாமாத்தூர் கண சரவணகுமார் - இன் ஆர்வம்.

"ஐயா, இது என்னன்னு பாக்கலாங்களா?"

காரானந்தல், சாலையோரம், துணி சுற்றியபடி நின்றிருந்த அந்தச் சிற்பத்தைப் பார்த்தவுடன் கேட்டார்.

"உம். பார்க்கலாமே" சிற்பத்தின் அருகே சென்றோம்.

சிற்பமாக நின்று இருப்பவர், போத்தராஜா. திரௌபதியின் பாதுகாவலர்.


இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு நண்பர் பார்த்தசாரதி எம்.கவுண்டர் துணையாக நின்றார்.

காரானந்தல் போத்தராஜா
இன்றைய தினமணி மற்றும் தினத்தந்தி நாளிதழ்களில் செய்தியாக இடம் பெற்று இருக்கிறார். ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

                           தினமணி 30.08.2019
                    தினத்தந்தி 30.08.2019

செய்தியாளர் நண்பர்கள்
தினமணி திரு.இல.அன்பரசன்,
தினத்தந்தி திரு.மாரியப்பன்

ஆகியோருக்கு நம் நன்றிகள்...

சனி, 24 ஆகஸ்ட், 2019

அண்ணமங்கலம் - ஒரு வரலாற்றுச் சுரங்கம்

“சொக்கப் பல்லவன் வாய் சொல்லும் வன்னிய மணாளன்”.


நீண்டு வளர்ந்தப் பாறை. அதன் ஒரு முனையில், ஆண் யானையின் பிடரியைக் கவ்வி இருக்கிறது, ஒரு ஆண் சிங்கம்.

சிங்கத்தின் கண்கள் உருண்டுத் திரண்டு இருக்கிறது.

அதன் ஒருபக்கப் புருவத்தின் மீதுதான் மேற்காணும் வாசகம் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளது. இதன் காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு!

செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலத்தில் செங்காட்டுக் குன்று என்றும் ஆனைமலை என்றும் அழைக்கப்படும் மலையின் மீதுதான் மேற்காணும் சிற்பமும் கல்வெட்டும் காணப்படுகின்றன.


யானை: மூன்றாம் ராஜராஜன்.
அதன் பிடரியைக் கவ்வி நிற்கும் சிங்கம்: கோப்பெருஞ்சிங்கன்.

ஆகா… அழகிய உவமை! அழகானச் சிற்பம்!

மாபெரும் வரலாறு இங்கே அமைதியாக காட்சி அளிக்கிறது!

பாண்டிய மன்னனிடம் தோற்ற சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜராஜன், குந்தள அரசனிடம் ஓடினான்.

தெள்ளாறு அருகே அவனை வழிமறித்த காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், சோழ வேந்தனையும் அவன் படையினரையும் சிறைபிடித்தான் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.


சிறைபிடிக்கப்பட்ட சோழ மன்னனும் அவனதுப் படை பரிவாரங்களும் அண்ணமங்கலம் மலைக் குகையில் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார், அண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் செஞ்சிக் கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்றச் செயலாளருமான திரு.நா.முனுசாமி அவர்கள்.

தன் சொந்த ஊரின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் இவருக்கு அவ்வளவு ஈடுபாடு: அக்கறை!


வரலாற்றுத் தடயங்களைத் தேடி ஊருக்கு வரும் ஒவ்வொருவரையும் சளைக்காமல் மலைக்கு அழைத்துச் சென்று காண்பிக்கிறார், திரு.முனுசாமி.


மலைமீது மட்டுமல்ல, நிலப்பரப்பிலும் ஏரியிலும் வரலாற்றுத் தடயங்கள் நிறைந்தச் சுரங்கமாக இருக்கிறது அண்ணமங்கலம்.


நீங்களும் ஒரு முறை இங்குப் போய் வரலாம்!

அண்ணமங்கலம்: செஞ்சியில் இருந்து வளத்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.


தலைமை ஆசிரியர் திரு.முனுசாமி அவர்களின் தொடர்பு எண்: 99949 43787

புகைப்படங்கள்: Vishnu Stark விஷ்ணு

(மலைமீது ஏறி வந்ததால் ஏற்பட்ட உடல்ரீதியான பிரச்சினைகள் இப்போது பரவாயில்லை. நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி)


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அண்ணமங்கலம் மலையில் ஒரு வரலாற்றுப் பயணம்

இரண்டு கால் முட்டிகளிலும் கடுமையான வலி!


மலையின் உயரம் அதிகமில்லை. குறைவுதான். ஆனால், போகும் பாதைதான் மிகவும் கரடுமுரடனானது.


நடுநடுவே நீட்டிக்கொண்டு இருக்கும் முள் செடிகள் சட்டையையும் அவ்வப்போது உடலையும் கூட பதம் பார்த்தன.

ஒரு இடத்தில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டும். இன்னொரு இடத்தில் செங்குத்தாக இறங்க வேண்டும்.


சில இடங்களில் மரக் கிளைகளும் சில இடங்களில் பாறைகளுமே நமக்கு ஆதாரங்கள்.

இப்படி ஏறும் போது தான், ஒரு இடத்தில், பாறையின் மீது வழுக்கி விட, கால் முட்டிகளில் பயங்கர உள்ளடி!


“ஐயா, வாங்கய்யா நான் பிடிச்சுக்கறேன்” இந்தாண்டு, ஓய்வுபெறப் போகும் தலைமை ஆசிரியர் ஐயா.முனுசாமி அவர்களின் ஆர்வமும் ஊக்கமும் என்னைத் தளரவிடவில்லை.


எப்படியோ மலை ஏறி, இறங்கினேன்.

தம்பி விஷ்ணுவுடன் செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலம் கிராமத்திற்கு இன்று (23.08.2019 வெள்ளி) பிற்பகல்  திடீர் பயணம்.

பின்னர் அங்கிருந்து தலைமை ஆசிரியர் ஐயா.முனுசாமி அவர்களுடன் நானும் விஷ்ணுவும் மலை ஏறினோம்.


அழகிய அனுபவம். மலைமீது இருக்கும் அந்தச் சரித்திரத்தை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.


அதுபற்றி பின்னர் விரிவாக எழுதலாம்.

இப்போதைக்கு, நமக்குத் தேவை சற்று ஓய்வும் கொஞ்சம் வலி நிவாரணியும்…

எல்லாம் சரியாகிவிடும்…!
வரலாறு எல்லாவற்றையும் சரியாக்கிவிடும் இல்லீங்களா..?

புகைப்படங்கள்: தம்பி விஷ்ணு.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

தாதாபுரம் தூண் சிற்பங்கள்
















குழலூத

மத்தளங்கொட்ட

அழகிய நாட்டியம்

இங்கே அரங்கேறுகிறது...!

தூண் சிற்பங்கள்:

குந்தவை பிராட்டியார் கட்டிய

கரிவரதப் பெருமாள் கோயில் என்றழைக்கப்படும்
"குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில்".

தாதாபுரம்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

காலம்: கி.பி.11ஆம் நூற்றாண்டு...

புதன், 21 ஆகஸ்ட், 2019

சென்னை தினம் இன்று

சென்னை தினம்
இன்று கொண்டாடப்படுகிறது...

மகிழ்ச்சி....

சென்னைக்கு என்று ஏராளமான அடையாளங்கள்!

ஆனாலும், நிரந்தர அடையாளங்களாக நான் கருதுவது:

கூவம் அடையாறு பக்கிங்காம்
நீர் நிலைகளைத் தான்!

சென்னையின் பண்பாடு, கலாச்சாரம், அரசியல், வரலாறு என அனைத்தும் இந்த நீர் நிலைகளுடன் பிண்ணிப் பிணைந்துள்ளன.

அவ்வளவு எளிதில் இவற்றை நாம் (மூக்கைப் பிடித்தபடி) கடந்துவிட முடியாது!

இந்நீர்வழித் தடங்கள் குறித்து தனியே ஆவணப்படுத்தியதில் எனக்குக் கூடுதல்  மகிழ்ச்சிதான்..!


கூவம் அடையாறு பக்கிங்காம்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

அம்மா

"நீங்க மராத்தியா?"

எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களை அண்மையில் சென்னையில் சந்தித்த போது நான் எழுதிய “சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்” நூலினைக் கொடுத்தேன்.

வாங்கிப் பிரித்த அவரிடமிருந்துதான்  இப்படியான கேள்வி வந்தது.

அவரது இந்தக் கேள்விக்குக் காரணம், அந்த நூலினை என் அம்மாவுக்கு அர்ப்பணித்து இருந்தேன். அம்மாவின் பெயர், விட்டோபாய்.


தாத்தா வீரபத்திர படையாட்சி, தீவிர வைணவர். பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது பற்று கொண்டவர். ஆண்டுக்கு ஒரு முறை, பேரங்கியூரில் இருந்து பஜனை கோஷ்டிகளை அழைத்துக் கொண்டு பண்டரிபுரம் சென்று வருவார்.

இந்தப் பற்றுதலின் காரணமாகத்தான் பாண்டுரங்கனின் திருவிளையாடலில் வரக்கூடிய, விட்டோபாய், விட்டல்தாஸ், துக்காராம், ராணிபாய் போன்றவர்களின் பெயர்களைத் தன் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்து இருக்கிறார்.

என் அம்மாவின் பெயர்க் காரணத்திற்கான சிறு விளக்கம், நண்பர்களுக்காக.

விடுமுறைக் காலங்களில் உறவுகளுடன் பேரங்கியூரில் கூடுவோம். அப்போது கிராமத்தில் இருப்பவர்கள் என்னைப் பார்த்துக் கேட்பார்கள்: “விட்டா பையனா நீ?”

திருமண மண்டபங்களிலும் இன்னபிற விழாக்கள் நடைபெற்ற இடங்களிலும் கூட “விட்டா” மகனாகத்தான் அறியப்பட்டேன்.

அந்த அடையாளம் எனக்குள் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது.


எங்களின் அடையாளமாய்த் திகழ்ந்த, எங்களுக்கு அடையாளத்தை வழங்கிய அம்மா,

கிராம மக்களால் விட்டா என்று அன்போடு அழைக்கப்பட்ட, விட்டோபாய், எங்களை விட்டு மறைந்து, காற்றோடு கலந்து,

இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

அம்மா… உன் நினைவுகளைச் சுமந்தபடி…

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

திருவக்கரை கல் மரம்

இது வரலாற்றுச் சோகம் தான்..!


மரமே
நீ கல்லானது
சாபமாக இருக்கலாம்!

ஆனால்
அறிவியலுக்குக் கிடைத்திட்ட
வரம்!

அட...
"வக்கரை"யில் மட்டுமா?

இதோ இக்கரையிலும்
இருக்கிறாயே!

ஆமாம்.
கனிமக் களவாணிகளுக்குத்
தெரியுமா
கல் எது? கல் மரம் எது?
என்று.

கருங்கற்களும்
முட்களும்
அப்படி என்னதான் பேசுகின்றன
உன் காதோடு?

இன்னும்
யார் கரங்கள் பட
காத்திருக்கிறாய்
இந்த இடத்தில்?

(இதுபற்றிய விரிவான விவரங்கள் விரைவில்…)

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

டெங்கு; பயம் வேண்டாம்...

கடந்த வாரத்தில் விடுமுறைக்கு விழுப்புரம் வந்த என் மகளுக்குத் தொடர் காய்ச்சல்!

மருத்துவரிடம் காண்பித்தும் குறையவில்லை.

சரி பார்த்துவிடலாம். நண்பர் குமரன் இரத்தப் பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவு வந்தது.

“எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றார். எனக்கோ தலைச்சுற்றியது.

உடனடியாக, சென்னையில் இருக்கும் சித்தர் திருத்தணிகாசலம் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

“பதட்டப்படாதீர்கள் ஐயா. இது டெங்குதான்” என்று சொன்னவர், “உடனடியாக என்னிடம் யாரையாவது அனுப்புங்கள். மருந்து தருகிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பாதிக்கப்பட்டவருக்குத் தர வேண்டும்” என விரைவு படுத்தினார்.

அடுத்த சில மணி நேரங்களில் சித்தர் கொடுத்தனுப்பிய மூலிகை மருந்து விழுப்புரம் வந்தது.

அன்றிரவே சிகிச்சையும் தொடங்கியது.

இதோ, ஐந்தாம் நாள், பூரண குணம் பெற்றுவிட்டார், என் மகள்.

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.


உரிய நேரத்தில், உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, என் மகளை குணப்படுத்திய  ஐயா சித்தர் அவர்களுக்கு நன்றிகள்…

(இன்று, சேந்தமங்கலம் வந்த சித்தர் அவர்களை நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.)

சனி, 17 ஆகஸ்ட், 2019

புதுச்சேரி ஓட்டலில் கல்மரம்

அண்மையில் புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகே உலவியபோது என் கண்ணில் பட்டது...

அங்கிருக்கும் "லே கபே" ஓட்டலின் திறந்தவெளி பூங்கா. அதன் நடுவே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும், கல் மரத் துண்டு..!



இன்று மீண்டும் புதுச்சேரி சென்ற போது தான் நேரம் கிடைத்தது. நண்பர் திரு.மேகநாதன் அவர்களுடன் மேற்காணும் ஓட்டலுக்குள் சென்றேன்.

கல் மரத்துண்டுடன் அதுபற்றிய குறிப்பும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கல்மரம், புதுச்சேரியில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறதாம்!

எந்த இடம் என்ற தகவல் இல்லை!

சரி, இந்தத் துண்டு, திருவக்கரையில் இருந்து இங்கு எப்படி வந்திருக்கும்?

உரியவர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.

குறிப்புகள்:



1. இந்த "லே கபே" உணவகம், முன்பு பிரெஞ்சுகாரர்களின் துறைமுகமாக இருந்தக் கட்டடம்.

2. இது போன்ற கல்மரத் துண்டுகள், சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒலக்கூர் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றிலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

பம்பை ஆற்றில் பழங்கால உறைகிணறு குறித்த விழிமிய பதிவு

பம்பை ஆற்றில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு குறித்த,

தம்பி விஷ்ணுவின் விழிமிய பதிவு...

https://youtu.be/ER7eDmJeyRM

சனி, 10 ஆகஸ்ட், 2019

பம்பை ஆற்றில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே
பம்பை ஆற்றில் உறைகிணறு கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் பம்பை ஆற்றில் பழங்கால உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

                                  தினமணி
                                   09.08.2019

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருவாமாத்தூர் கிராமம்.

இங்குள்ள அபிராமேசுரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். தேவார மூவரால் பாடல்பெற்ற தலமாகும். இங்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின்  ஜீவ சமாதியும் அவரால் நிறுவப் பெற்ற கௌமார மடமும் அமைந்துள்ளது.

இப்பகுதியில் ஓடும் பம்பை ஆறு இரட்டைப் புலவர்களால் பாடப்பெற்றதாகும். ஒரே நாள் இரவில் இந்த ஆறு தடம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

பம்பை ஆற்றில் பழைய கட்டுமானம் ஒன்று காணப்படுவதாக இப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கண.சரவணகுமார், விழுப்புரம் எழுத்தாளரும் அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கோ.செங்குட்டுவனுக்குத் தகவல் அளித்தார்.

தினத்தந்தி 
                              09.08.2019

இதனைத் தொடர்ந்து கோ.செங்குட்டுவன், கோ.பாபு, அ.அகிலன், ப.ரே.ம.கிருஷ்ண மூர்த்தி, சாம்சன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள், கண.சரவணகுமார் உள்ளிட்ட கிராமவாசிகளின் உதவியுடன் பம்பை ஆற்றில் வியாழக்கிழமை (08.08.19) களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுள் அளவில் பெரியதும் மிகவும் கனமானதுமாக இந்த உறைகிணறு அமைந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த இந்த உறைகிணறு, அண்மையில் இப்பகுதியில் மண் எடுக்கும்போது வெளிப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

இதனையறிந்த வரலாற்று ஆர்வலர் சரவணகுமார், இப்பகுதியில் மேலும் மண் எடுப்பதைத் தடுத்து, உறை கிணறு மேலும் சேதமடையாமல் பாதுகாத்திருக்கிறார். அவரை நாங்கள் பாராட்டுகிறோம்.

                                 மக்கள் குரல்
                                   09.08.2019

இந்த உறைகிணறு மிகப்பெரியதாக காணப்படுகிறது. தடித்த ஓடுகளால் வளையம் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

உறைகிணற்றின் 11 அடுக்குகள் மட்டும் (சுமார் 6 அடி) தற்போது தெரிகிறது. மேலும் பல அடுக்குகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

இப்பகுதியில், மேலும் பல உறைகிணறுகள் இருந்ததாகவும், அவை அழிக்கப்பட்டு விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகர்க்கப்பட்டவைகளின் சில பாகங்களை ஆற்றின் நெடுகிலும் பார்க்க முடிகிறது.

                              மாலை முரசு
                                09.08.2019

தற்போது பம்பை ஆற்றில் கண்டறியப்பட்டுள்ளது உறைகிணறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், மிகவும் பிற்காலத்தியது எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எப்படியானாலும் இது வரலாற்றுத் தடயம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

                          தினமலர் 11.08.2019
                            புதுச்சேரி பதிப்பு

               தினமலர், சென்னை பதிப்பு.

இதுபற்றி தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் தடயமுள்ள இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும். தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். உறை கிணற்றின் காலத்தைக் கணித்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

            The new Indian express 12.08.2019

புதன், 7 ஆகஸ்ட், 2019

பம்பை ஆற்றில் உறைகிணறு

விழுப்புரம் அருகே உள்ள திரு
ஆமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், நண்பர் சரவணகுமார். வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.


“சார் எங்க ஊருக்கு வாங்க” நேற்று முன்தினம் சரவணக் குமாரிடம் இருந்து அன்பு அழைப்பு.

இன்று (புதன்) நேரம் கிடைத்தது. விழுப்புரம் வந்த அவருடன் ஆமாத்தூர் பயணமானேன்.

ஆமாத்தூர் – எடப்பாளையம் எல்லையில் வண்டியை விட்டு இறங்கி, பம்பை ஆற்றில் நடக்கத் தொடங்கினோம்.

இரட்டைப் புலவர்களால் பாடப்பட்டப் பம்பை, ஒரே இரவில் தடம் மாறிய பம்பை..!

அடியெடுத்து வைத்ததும் இனம் புரியாத உணர்வு எனக்குள்!

எடப்பாளையம் – திருவாமாத்தூர் இடைப்பட்ட பகுதியில் தான் இப்படியான அகண்ட பம்பை ஆற்றைப் பார்க்க முடியும். மற்ற இடங்களில் எல்லாம் குறுகிய கால்வாயாகத் தெரியும்” – விளக்கிக் கொண்டு வந்தார், சரவணக்குமார்.

கொஞ்சம் தூரம் நடந்திருப்போம். “இதோ இங்கதான் சார்” சுட்டிக்காட்டினார்.

ஆற்றில் மண் எடுத்ததால் பிரம்மாண்ட பள்ளம்.

ஒரு பக்கம், மண்ணை அணைத்தபடி காட்சி அளிக்கிறது இந்தச் சுவடு.

மிகவும் கனமான, ஓடுகளால் வட்டமாக புதைந்து கிடக்கிறது.


“உறைகிணறு ஆக இருக்கலாம்..?” ஒருவாறு யூகிக்க முடிகிறது.
பொக்லைன் வைத்துத் தோண்டும் போது, எப்படியோ ஓரளவுக்கு தப்பிப் பிழைத்து இருக்கிறது.


மேலும் சிதைத்து விடாதவாறு நண்பர் சரவணகுமார் பாதுகாத்து வருகிறார்.

மகிழ்ச்சி. நண்பருக்கு நம் வாழ்த்துகள்.


மண்ணுக்குள் இருந்து இப்போது தான் வெளிப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை!

இது உறைகிணறு தானா? ஆம் எனில், இதன் காலம் என்னவாக இருக்கலாம்?

இதுபற்றி எல்லாம், அறிந்த நண்பர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்..!

இதுபற்றி, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையர் அவர்களுக்கும் இன்று மாலை மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.