வியாழன், 1 ஆகஸ்ட், 2019

திருக்கோவிலூர் அகழ்வைப்பகம்

விழுப்புரத்தில் அருங்காட்சியகம்… இதற்காக நாம் அல்லல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே..!

இதே விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூரில் அகழ் வைப்பகம் இருப்பதை எத்தனைப் பேர் அறிவரோ… நாம் அறியோம்!

போய் பத்து வருசங்களாகி விட்டது. பார்த்து வருவோமே! நேற்று 01.08.2019 வியாழன் காலை திருக்கோவலூர் புறப்பட்டேன்.

கீழையூர்.
நான்குமுனைச் சந்திப்பில் இருந்து, கிழக்கு நோக்கி, கடலூர் சாலையில் நடைபோடலாம். சில நிமிடங்களில் அந்தக் கட்டடத்தை அடைந்து விடலாம்.

கீழே கடைகள். மாடி படிக்கட்டு ஏறிச் செல்ல வேண்டும். மிகப்பெரிய கற்பனை எல்லாம் வேண்டாம்.


“20” க்கு “35” எனும் அளவுள்ள அந்த அறையில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது தொல்லியல் துறையின் அகழ் வைப்பகம்.

உடைந்த தாழி மற்றும் ஜாடிகளின் துண்டுகள். ஒரு சில மட்கலன்கள், பீரங்கி குண்டுகள்.


விழுப்புரம் மாவட்டத்தில் தொன்மைச் சான்றுகள் குறித்த படங்கள் சுவற்றை அலங்கரிக்கின்றன.

இருப்பனவற்றில், திருக்கோவலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட, சங்ககால செங்கற்கள் குறிப்பிடத் தகுந்தன.

மிகவும் சிரத்தையுடனும் அக்கறையுடனும் இவற்றை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார், அகழ்வைப்பகத்தின் காப்பாட்சியர் திரு. ரஷீத் கான் அவர்கள்.



இவற்றில் பலவும் இவர் கண்டறிந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் இருக்கிறது. வைப்பதற்கு இடமில்லை.


இந்த இடத்திற்கு மாத வாடகை ரூ.5 ஆயிரம்.

சொந்த இடம் கேட்டு அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் தொடருகின்றன.

அருகில் வேறு இடத்திற்கு மாற்றவும் யோசனை.

மூன்று பேர் பணியில் இருக்கும் வேண்டிய இடத்தில், காப்பாட்சியர் ஒருவரே இருக்கிறார். எல்லா வேளைகளையும் பார்க்கிறார்.

இவர், விழுப்புரம் மாவட்டத்திற்கான தொல்லியல் துறையின் காப்பாட்சியரும் ஆவார்.

வரலாற்றிற்கு நம் ஆட்சியாளர்களின் பங்களிப்பு எத்தகையது என்பதற்கு, கீழையூர் அகழ் வைப்பகம் ஒரு உதாரணம்.

“உங்க மாவட்டத்துல இப்படி ஒரு “சைட் மியூசியம்” இருக்கும் போது, விழுப்புரத்தில் எதற்கு தனியே ஒரு மியூசியம்?” என,
அருங்காட்சியகங்கள் துறையில் இருக்கும் சிலர் கேட்பது வேடிக்கைதான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக