சனி, 3 ஆகஸ்ட், 2019

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

நண்பர், படைவீடு முனைவர் அமுல்ராஜ்-அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்…

நேற்று, சென்னை, தரமணியில் இருப்பதை அறிந்த அவர், சில நிமிடங்களில் என்னைத் தொடர்பு கொண்டார்.

“சார், ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்து அப்படியே கொஞ்ச தூரம் போனீங்கன்னா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வரும். அங்க, பேராசிரியர் மணவழகன் ஐயாவப் பாருங்க. அங்க இருக்கற பழந்தமிழரின் வாழ்வியல் காட்சிக் கூடத்தை அவசியம் பாருங்க” எனப் படபடத்தார்.

அமுல்ராஜ் குரலில் வெளிப்பட்ட ஆர்வம், என் கால்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றது.


பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர், இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அன்புடன் வரவேற்றார். தேநீர் கொடுத்து உபசரித்தார்.


முதலில், ‘தமிழ்த் தாய் ஊடக அரங்'கிற்கு அழைத்துச் சென்றார். 56 பேர் அமரும் வகையிலான, குளிரூட்டப்பட்ட அழகான அரங்கம்.

காட்சிக் கூடத்தைப் பார்வையிட வருபவர்களை முதலில் இந்த அரங்கிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

பழந்தமிழர் வாழ்வியல், மருத்துவம், நீர் மேலாண்மை, ஆட்சித் திறன், போரியல் போன்றவை காட்சிப் படங்களாக, நம் கண் முன் அகண்ட திரையில் விரிகின்றன. சிறப்பான ஓலி ஒளி அமைப்பு. வாழ்த்துகள்!

இப்போது, நாம் காட்சிக் கூட அரங்குகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். அரங்குகளுக்கு என்று சொல்வதைவிட, கடந்த காலத்திற்கே என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்!

பழந்தமிழரின் வாழ்வியலின் அனைத்து அம்சங்களும் அங்கே இடம்பெற்றுள்ளன. காட்சிப் பொருட்கள் மட்டுமல்லாமல், அதற்கேற்ப தீட்டப்பட்ட ஓவியங்கள். சங்க இலக்கியங்களின் வரிகள்.


சங்கப் பாடல் வரிகளுக்கு ஏற்ப தான் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அருங்காட்சியகங்களில் பொருட்கள் இருக்கும். ஆனால் உயிர் இருக்காது. இங்கே போலச் செய்தப் பொருட்கள் இருக்கின்றன. அனைத்திலும் உயிர் இருக்கிறது.

அரங்குகள் அனைத்தையும் சுற்றிப் பார்க்க எப்படியும் அரை நாள் வேண்டும்.

தமிழக அரசு செய்த உருப்படியான வேளைகளில் இதுவும் ஒன்று. போதுமான நிதியை ஒதுக்கிப் பராமரித்து வருகின்றனர்.

புதிதாகத் தொடங்கப்படும் அருங்காட்சியகங்களுக்கு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் முன்மாதிரியானது.

தன் சிந்தனையில் தோன்றியவற்றை, இந்த அழகிய காட்சிக் கூடமாக உருப்பெற வைத்து, சிறப்பாக நடத்தி வரும், காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர், முனைவர் மணவழகன் பாராட்டப்பட வேண்டியவர்.


குறிப்பாக, இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல், தேவையானவற்றை உரிய நேரத்தில் அரசிடம் பெற்றுத் தருவதிலும் உறுதியாக இருப்பவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு.கோ.விஜயராகவன் அவர்களும் பாராட்டிற்கு உரியவர்.

இருவருக்கும் நம் வாழ்த்துகள்..!

சென்னை போறவங்க, தரமணிப் பக்கம் அவசியம் போய்ட்டு வாங்க..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக