சனி, 27 ஜூன், 2020

விழுப்புரம் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் காலமானார்

பி.கிருஷ்ணன்.
விழுப்புரத்தில் இவரை “சோடா கடை” கிருஷ்ணன் என்று அழைத்தால் தான் அனைவருக்கும் தெரியும்.

நேரு வீதியில் பல்லாண்டு காலம் இயங்கி வந்த இவரது சோடா கடை அந்தளவிற்கு பிரபலம்.

எம்.ஜி.ஆ.ரின் தீவிர விசுவாசி. விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மன்றத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் குறிப்பிடத்தகுந்தவர்.


1977இல் முதன் முதலாக ஏம்.ஜி.ஆர். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த போது, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தவர் பி.கிருஷ்ணன்.

ஆனால், இவரால் ஐந்தாண்டு காலம் அந்தப் பதவியைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. 1980இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் கிருஷ்ணனும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பணி என்பது மூன்று ஆண்டுகள் தான். ஆனாலும் அதுவும் இவருக்கு நிறைவாக இல்லை.

ஆமாம். 1978இல் நடந்த விழுப்புரம் கலவரமும் இதில் தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர் கொல்லப்பட்டதும் மாபெரும் வரலாற்றுச் சோகம்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரை சிலர், அந்தச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தினர்.

இந்தக் கலவரம் தொடர்பான விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான காலஞ்சென்ற வை.பாலசுந்தரம், “இக்கலவரத்தில் எம்எல்ஏவுக்கும் தொடர்பு இருப்பதாகத்"  தெரிவித்தார்.

ஆனால் குறுக்கு விசாரணையின் போது “தனது வாக்குமூலம் யூகத்தின் அடிப்படையிலானது” எனத் தெரிவித்தார். (மக்கள் குரல் 20.8.1978).


விழுப்புரம் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷனும் தனது அறிக்கையில், எம்எல்ஏவுக்குத் தொடர்பு என்பதை மறுத்தது.

2010ஆம் ஆண்டு, எனது “விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்” நூலுக்காக, கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது பழைய நினைவுகள் குறித்துப் பேசினேன்.

“கலவரம் நடந்த போது நான் புதுச்சேரியில் இருந்தேன். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அவருக்கு அருகிலேயே இருந்தேன். தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள்” என வருத்தப்பட்டார்.

மேலும், அந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பதிவு செய்யும் முயற்சியில் அண்மையில் நான் மீண்டும் ஈடுபட்டேன்.

ஊரடங்கு காலத்தில், ஏப்ரல் 23ஆம் தேதி, காலை 7 மணிக்கு, விழுப்புரம் நாலாயிரம் தெருவில் உள்ள திரு.கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றேன். “அவர் தூங்குகிறார்” என அவரது மனைவி சொன்னார். காலை 10 மணிக்கு மீண்டும் சென்றேன். அப்போதும் அதே பதில் தான்.

இப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.சோடா கடை கிருஷ்ணன் நிரந்தரமாக உறங்கி விட்டார்.

ஆமாம். நேற்றிரவு அவர் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கி விட்டார்!

செவ்வாய், 23 ஜூன், 2020

விழுப்புரம் காந்தி சிலைக்குக் கீழே...

விழுப்புரத்தில்

பொதுக் கிணறு இருந்த இடம்

எப்படியான மாற்றத்தைப் பெற்றுள்ளது?

"அப்புறம் விழுப்புரம்" சேனலின்
முதல் பதிவு,
பயணம் இனிதே
தொடங்குகிறது!

உங்களின் அன்பான
வாழ்த்துகளுடன்..!

பாருங்கள் நண்பர்களே...

https://youtu.be/vp4MOVMBJmc

ஞாயிறு, 21 ஜூன், 2020

அப்புறம் விழுப்புரம்


விழுப்புரத்தின், விழுப்புரம் மாவட்டத்தின் கலை, இலக்கியம்,  வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை எடுத்துச் சொல்ல இருக்கும் தளம் குறித்தான அறிமுகப் பதிவு இது:


https://youtu.be/O5ncnpJS_GU

வியாழன், 11 ஜூன், 2020

சமணர் கழுவேற்றம்

இன்றைய (11.06.2020) மதுரை பதிப்பு தினமலர் நாளிதழில்...

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்...

நூல் குறித்த அறிமுகம்...



புதன், 10 ஜூன், 2020

விழுப்புரம் இனி Vizhuppuram

விழுப்புரம் - Vizhuppuram
திண்டிவனம் - Thindivanam
செஞ்சி - Senji

ஊர்ப் பெயர்கள்: அரசாணை வெளியீடு!

ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!

இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருந்தோம்.


இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2018 டிசம்பரிலும் இரண்டாவது கூட்டம் 2019 ஜனவரியிலும் நடந்தன.


200க்கும் மேற்பட்ட ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதுபற்றிய பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார், அப்போதைய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.

இதன் மீது முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இதுபற்றிய அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.


இதில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 40 ஊர்கள் இடம்பெற்று உள்ளன.


இனி, இந்த ஊர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் அழைக்கப்படும்.

மகிழ்ச்சி. மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி!

இதற்கான முன்னெடுப்பில் நம்முடன் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், பாவரசு பாரதி சுகுமாரன், கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருக்கு நம் நன்றிகள்..!

வியாழன், 14 மே, 2020

விழுப்புரம் நவாப் தோப்பு தொடக்கப்பள்ளி

இணைப்பில் காணப்படும் இந்தக் கட்டடம், அப்போது விழல் வேயப்பட்டு, கூரைக் கட்டடமாக இருந்தது.


இதன் இன்னொரு பகுதி, வடக்கில், நகராட்சி ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தினுள் நீண்டிருந்தது.

கிழக்கு நோக்கிய திருமுகம். பரந்து விரிந்த மைதானத்தையும் ஓயாமல் இயங்கும் ரயில்களையும் முழுப் பார்வையால் பார்த்து மகிழ்வோம்.

“விழுப்புரம், நவாப் தோப்பு தொடக்கப் பள்ளி”

இங்கு தான் நமதுத் தொடக்கக் கல்வியும் கூட!

முருங்கப் பாளையத் தெருவில் வீடு. பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் போலீஸ் லைன் மட்டுமே.

பள்ளிக்கூடம் அருகில் இருந்தாலும் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்!

அடிக்கடி மட்டம் போடுவேன். அக்கா கலைச்செல்வி, தரத்தர என இழுத்துப் போவார். போலீஸ் லைனின் புழுதி, பல நேரங்களில் நம் கால் சட்டைகளில்.

நவாப் தோப்பு பள்ளியில் நம் படிப்பு, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு என இரண்டாண்டுகள் மட்டுமே!

வீடு, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதால், பள்ளிக்கூடமும் மாறியது.

படித்தது இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்றாலும் நவாப் தோப்பு பள்ளி பற்றிப் பேச நிறையவே இருக்கிறது.

பேசலாம்…

புதன், 13 மே, 2020

வாசிப்பை நேசிக்கும் விழுப்புரம் அண்ணாச்சி

“அண்ணாச்சி” என்று தான் அழைத்துப் பழக்கம். அதனால் இவரதுப் பெயர் சட்டென்று நினைவுக்கு வராது.

1990களின் தொடக்கத்தில், விழுப்புரம், மருதூர் பகுதியில் நாங்கள் வசித்த போது இவரும் இவரதுத் தம்பியும் பழக்கம். மளிகைக் கடை வைத்திருந்தனர்.

அப்புறம் இவர், கன்னியர்குளம் சாலையில் ஐஸ்கிரீம் கடை வைத்தார். நமக்கும் வீடு வெகு அருகில் தான்.

ஒவ்வொரு முறையும் கடையைக் கடக்கும் போதும் பார்ப்பேன்: டேபிளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். படித்துக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் சரித்திர நாவலாக இருக்கும். கடையில் அமர்ந்திருக்கும் இவர் மனைவியும் படித்துக்கொண்டு இருப்பார்.

அடிக்கடி என்னிடமும் புத்தகங்கள் குறித்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்.

சமணர் கழுவேற்றம் நூலாக்கத்தின் போது “அஞ்ஞாடி” நாவலை இவரிடமே பெற்றேன்.

லாக்டவுன்: மருதூரில் உள்ள இவர் வீட்டிற்குச் செல்ல வழிசெய்தது.

தமிழ்ச்செல்வம். “உங்களுக்கு வாசிப்பு வழக்கம் எப்படிங்க அண்ணாச்சி?” கேட்டேன்.

"90 களின் தொடக்கத்தில் என் முதல் மனைவி காலமாயிட்டாங்க. மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டு எனக்குள்ளேயே முடங்கிட்டேன் சார்.

அப்பதான் உலக.துரை வாத்தியார், மனசுக்கு ஓய்வா இருக்கும் ன்னு சில புத்தகங்களைக் குடுத்தாரு. அப்புறம் அரசு நூலகத்துக்குப் போனேன். புத்தகங்களே கதின்னு கிடந்தேன். எனக்குள் நிறைய மாற்றங்கள்.

அன்னிக்கி ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் படிக்கிறத விடல”.


இவரது சேகரிப்பில் எப்படியும் அறுநூறு எழுநூறு புத்தகங்கள் இருக்கும்.

ஆண்டு தோறும் நடக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குத் தவறாமல் போய்விடுவார். அள்ளி வருவார். பெரும்பாலும் நாவல்கள் தாம்.

நூல்கள் வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதற்கு இவர் தயங்குவதில்லை.

இவரது நடவடிக்கைக்கு இவர்தம் மனைவியும் மக்களும் துணையாக நிற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

அண்ணாச்சியின் சொந்த ஊர், சிவகாசி அருகாமையில் இருக்கிற, விளாம்பட்டி கிராமம். நாடார் உறவின் முறை.

இப்போதைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விளாம்பட்டிக்காரர் மட்டுமல்ல: அண்ணாச்சியுடன் 5ஆவது வரைக்கும் ஒன்றாகப் படித்தவராம்!

சரி, இவ்வளவு ஆர்வமா புத்தகங்களைப் படிக்கிற நம்ம அண்ணாச்சி எத்தனையாவது வரைக்கும் படிச்சிருக்காராம்?

“எட்டாவது வரைக்கும் தான் நம்ம படிப்பு” பெருமிதத்துடன் சொல்கிறார் தமிழ்ச்செல்வம்!

(இவரதுத் தொடர்பு எண்: 94439 87245)

செவ்வாய், 12 மே, 2020

விழுப்புரம் ரயில்வே குவார்ட்டரசில் மயில்

விழுப்புரத்தில் இன்று 12.05.2020 பிற்பகல் கொஞ்சம் மழை.

எப்படியும் சாலைகளை நனைத்திருக்கும்.

மாலையில் ஈரக் காற்று…
ஈரமானக் காற்று என்றதும், இதற்குச் சரியான இடம், ரயில்வே குவார்ட்டர்சு தான் நினைவுக்கு வந்தது.

மாலைநேர நடைப் பயிற்சி யாத்திரை, குவார்ட்டர்சு நோக்கி…

ஆமாம். சூழல் இதமாக இருந்தது.

லோகோ ஷெட் ஐ பார்த்து வர யோசனை. நடை சற்றே நீட்டிக்கப்பட்டது.

அந்த இடத்தை நெருங்கும் போது தான் பார்த்தேன்… அழகான ஆண் மயில் ஒன்று, மேய்ச்சலில் இருந்தது.


இந்த இடத்தில்.. மயில் எப்படி?

என யோசிக்கும் போதே, பறந்த மயில் லோக்கோ கட்டிடத்தின் மீதமர்ந்தது.


அங்கிருந்த ஒருவர் சொன்னார்: “இப்பதான். கொஞ்சம் நாளைக்கு முன்னாடி இருந்து தான். நிறைய மயிலு இங்க வந்திருக்குங்க” என்றார்.

அடடா.. இந்த லாக்டவுனில் எங்கிருந்தோ இவை இங்குப் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றன.

வாய்ப்புக் கிடைத்தால், மீண்டும் போய் பார்க்கணும்..!

களையிழந்த விழுப்புரம் கலையரங்கம்

எத்தனைத் தலைவர்களைத் தன் மீது ஏற்றி,
அழகுப் பார்த்திருக்கும் இந்தக் கலையரங்கம்!

எத்தனைக் கைத் தட்டல்களை வாங்கிக் கொடுத்திருக்கும்?

சில நேரங்களில் அவை மகத்தான வாக்குகளாகவும் மாறியிருக்கும்!

இப்போது அத்தனையையும் இழந்து… நினைவுகளை மட்டும் சுமந்து…

நகராட்சி மைதானமே பொலிவிழந்துப்  போன போது…

இந்தக் கலையரங்கம் மட்டும் கலையிழந்தது…

வியப்பிற்குரியது அல்லவே..?

கவர்னர் சென்னாரெட்டி மீது தாக்குதல்

அன்றைய தினம் திண்டிவனம் நகரம் கலவர பூமியாகக் காட்சியளித்தது.

இங்கு நடந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குத் தொடர, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமிக்கு கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கி இருந்தார்.

இதனால் சுப்பிரமணியசாமி மற்றும் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர்.

சு.சாமிக்கு சென்ற இடமெல்லாம் “சிறப்பு”.

இந்நிலையில், புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பொறுப்பு வகித்த ஆளுநர் சென்னா ரெட்டி, 10.4.1995 அன்று மாலை சென்னையில் இருந்து புதுவை பயணமானார்.

அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் திண்டிவனத்தில் திரண்டு இருந்தனர்.

அங்கிருக்கும் வீராணம் இல்லத்தில் ஆளுநர் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாகத் திட்டம்.

மாலை 4.30 மணிக்கு ஆளுநரின் கார் திண்டிவனத்திற்குள் நுழைந்தது. வீராணம் இல்லம் நோக்கி வந்த காரை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.

கற்கள், அழுகிய முட்டை, தேங்காய் மட்டை போன்றவை சரமாரியாக வீசப்பட்டன.

இன்னொரு பக்கம், அதிமுகவினரை அப்புறப்படுத்த விழுப்புரம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலிசார் கடும் பிரயத்தனம் செய்தனர்.

இந்த சம்பவங்கள் சுமார் அரைமணி நேரம் நீடித்தன.

இவ்வளவுக்கும், ஆளுநர் சென்னா ரெட்டி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.

பின்னர் அவர் புதுவை புறப்பட்டார். புதுவை சாலையில் கூட இந்த எதிர்ப்பு தொடர்ந்தது. இன்னும் சிறிது தூரத்தில் நின்றிருந்த திமுகவினர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து, பின்னாளில் திமுகவில் இணைந்த, எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் என்னிடம் அளித்த பேட்டியில், “ஒரு வேகத்தில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டோமே தவிர சிந்திக்கும் நிலையில் செயல்படவில்லை” என விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில் இவர் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

(இணைப்பில் உள்ள தினகரன் செய்தியில், 4 எம்.எல்.ஏ. தலைமையில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை. அப்போது சட்டசபை நடந்த நேரம். குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் தான் இருந்தனர். இந்த செய்தி குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக நினைவு)



ஞாயிறு, 3 மே, 2020

பெயர்ப் பலகை

பிரபல பத்திரிகையான தினகரனில் நாம் நிருபரானதும் தோழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!

இந்த மகிழ்ச்சியின் ஊடாகத்தான், நில அளவைத் துறையில் பணியாற்றிய தோழர் பழனி (இப்போதும் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்) அழகானப் பெயர்ப் பலகையை அப்போது (1993) செய்து கொடுத்தார்.


விழுப்புரம், மருதூர், குப்புசாமி நெடுந்தெருவில் வசித்து வந்த வீட்டை இந்த பெயர்ப் பலகை ஆண்டுகள் பல அலங்கரித்தது.

பெயர்ப் பலகை எனும் போது சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

குப்புசாமி நெடுந்தெருவைத் தொடர்ந்து, கன்னியர்குளம் சாலை, சிவராமன் லேஅவுட்டிற்குக் குடி பெயர்ந்தோம். திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தேன்.

ஆறு ஆண்டுகளைக் கடந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் நமக்கும் சின்ன சின்ன உரசல்கள்.

அதில் ஒன்று, பெயர்ப் பலகை.

நாம் இருந்தது வீட்டின் பக்கவாட்டில் உட்புறமாக. முன்புறம், உரிமையாளர் வீட்டின் முகப்பில் பெயர்ப் பலகையை மாட்டியிருந்தோம்.

தேடி வரும் பலரும், அங்கு வந்துதான் “நிருபர் இருக்கிறாரா?” என கேட்பார்கள். பிரச்சினை இல்லாத வரையில் வீட்டு உரிமையாளருக்கு இது பிரச்சினையாகத் தெரியவில்லை.

பிரச்சினை வந்தவுடன், இப்படி பலரும் விசாரிப்பது அவருக்குத் தலைவலியாகப் போய்விட்டது.

ஒருநாள், சத்தம் போடாமல் பெயர்ப் பலகையைக் கழட்டி அவர் வீட்டுக்குள் வைத்துக் கொண்டார். அவர் தான் கழட்டியிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவரிடம் கேட்கவில்லை.

நகர காவல் நிலையத்திற்குச் சென்றேன். “ரூ.150 மதிப்புள்ள என் பெயர்ப் பலகையைக் காணவில்லை. வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் இருக்கிறது” எனப் புகார் கொடுத்தேன்.

இதை சீரியசாக எடுத்துக் கொண்ட நம் நண்பர்களும், புகாரில் பேரில் உரிமையாளரை நிலையம் வரவழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், தான் தான் அந்தப் பலகையை கழட்டி வைத்து இருப்பதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர் உடனடியாக வீட்டுக்கு வந்து என்னிடம் எடுத்துக் கொடுத்தார்.

அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து காலி செய்துவிட்டோம் என்பது வேறு விஷயம்..!

செஞ்சியார்

வைகோ தலைமையில் அப்போது தனி அணி உருவாகவில்லை. அதற்கான அடிப்படை முகாந்திரங்கள் நடந்து வந்த நேரம் அது.

அப்போது தான் “விழுப்புரம் பகுதிக்கு நிருபர் தேவை” – எனும் விளம்பரத்தை தினகரன் நாளிதழில் பார்த்தேன். நிச்சயம் பெற்றே தீர வேண்டும். சிபாரிசு தேவை. குறிப்பாக, வைகோ ஆதரவாளர்களாக தினகரன் உரிமையாளர் கேபிகே மற்றும் செஞ்சியார் போன்றவர்கள் இருந்தனர். செஞ்சியார் அவர்களின் சிபாரிசு கிடைத்தால் போதும். 

திமுக பிரமுகர் மரகதபுரம் பன்னீர் அவர்களை அணுகினேன். அவரும் செஞ்சியாரிடம் நேரிடையாகப் பரிந்துரைத்தார்: “செங்குட்டுக்கு நீங்க வாங்கித் தரணும்.”

இதனையேற்றுக் கொண்ட செஞ்சியார் அவர்கள், “உங்களைத் தெரியும் என்று நம்ம அணியினர் கிட்ட கடிதங்களை வாங்கி வாங்க” என்று அனுப்பி விட்டார்.

கடிதங்கள் வாங்கும் படலம் தொடங்கியது.

விழுப்புரம் நகர கழக செயலாளர் வி.என்.வாசன், நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் தெ.பாண்டியன், தொண்டர்படை புல்லட் பி.மணி, வழக்கறிஞர்கள் உலகநாதன், பி.எஸ்.மன்னப்பன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் பாபு கோவிந்தராஜ் ஆகியோரிடம் கடிதங்கள் பெற்றேன்.

ஒருநாள் இரவு அரசூர் சென்றேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரசூர் பாலு அவர்களிடம் கடிதம் பெற்றேன். இதேபோல், இரவு நேரத்தில் கண்டமங்கலம் சென்று, முன்னாள் பெருந்தலைவர் தாமோதரன் அவர்களிடம் கடிதம் பெற்றேன். அப்போது மின்சாரம் இல்லாத சூழலில் லாந்தர் வெளிச்சத்தில் அவர் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

இத்தனைக் கடிதங்களுடன் ஒருநாள் சென்னை பயணம். மரகதபுரம் பன்னீர் அழைத்துச் சென்றார். செஞ்சியார் அவர்களுடன் நேரிடையாக கேபிகே அவர்களைச் சந்திக்கத் திட்டம்.

நாங்கள் போன நேரத்தில் தான் தனி அணிக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஒருநாள் முழுக்க எம்எல்ஏ ஹாஸ்டலில் தவமிருந்தேன்.

அடுத்த நாள் என்னை அழைத்த செஞ்சியார் அவர்கள், “என்னால் நேரில் வர இயலாது. கடிதம் கொடுக்கிறேன்” என லட்டர் பேடை எடுத்து கார் மீது வைத்து எழுதத் தொடங்கினார்.

“மதிப்பிற்குரிய அண்ணார் கேபிகே அவர்களுக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன் எழுதியது.
தினகரன் பத்திரிகை செய்தியாளராக விழுப்புரம் பகுதிக்கு கழகத் தோழர் நண்பர் செங்குட்டுவன் அவர்களை நியமிக்கக் கோருகிறேன். அவருக்கு எல்லா தகுதிகளும் நிரம்ப உண்டு. செய்தி சேகரிக்கும் அனுபவம் உள்ளவர். அவரை செய்தியாளராக நியமிக்க பரிந்துரை செய்யக் கோருகிறேன்.”


இதனைத் தொடர்ந்து 27.8.1993இல் தினகரன் அலுவலகத்தில் நேர்காணல். செய்தி ஆசிரியர் முத்துப்பாண்டியன், எடுத்துச் சென்ற கடிதங்களில் செஞ்சியார் கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்.

1993 செப்டம்பர் 17 முதல் ஏழு ஆண்டுகள், தினகரன் நிருபராக என் பணி தொடர்ந்தது! 

வெள்ளி, 1 மே, 2020

தமிழன்

முரசொலி குழுமத்தில் இருந்து “தமிழன்” என்றொரு நாளிதழ் வெளிவந்தது,  யாருக்கேனும் நினைவு இருக்கிறதா?

1992 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்தன.

விழுப்புரத்தில் இருந்து நிறைய பேர் அப்ளிகேஷன் போட்டு இருந்தனர். அதில் நானும் ஒருவன்!

இதில், எனக்கும் திமுகவில் இருக்கும் நண்பர் ஒருவருக்கும் தான் ‘இன்டர்வியூ’ அழைப்பு வந்தது.


14.3.1992 பிற்பகல் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அண்ணனுடன் ஆஜரானேன்.

 ஏறக்குறைய நமக்கு நினைவு தெரிந்து சென்னை முதல் பயணமும் அதுவாகத்தான் இருக்கும்!

நேர்காணல் நடத்தியது, எழுத்தாளர் சாவி என நினைவு!

“ஜெர்னலிசம், இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ன வேறுபாடு?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. முடிந்த வரை விடையளித்தேன்.

ஆனாலும் கூட, அந்தத் திமுக நண்பருக்குத்தான் ‘நிருபர்’ வாய்ப்பு வழங்கப்பட்டது.

எந்த ஒரு வேலையானாலும் திறமை மட்டும் இருந்தால் போதாது. சிபாரிசும் அவசியம் என்பதை “தமிழன்” உணர்த்தியது.

அப்புறம், இந்தப் பத்திரிகை எட்டு மாதங்கள் மட்டுமே வந்ததாகவும் நினைவு!

(இணைப்பு: நேர்காணலுக்காக அனுப்பப்பட்டிருந்த தந்தி)

வியாழன், 30 ஏப்ரல், 2020

விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்

முதல்முறை… தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநருடன் இவரது அலுவலகத்தில் சந்தித்தேன். முன்பின் அறிமுகமில்லை. ஆனால், என் “பழைய பேப்பர்” நூலினை  நினைவு கூர்ந்தார். ஆச்சரியமடைந்தேன்.

அப்புறம், மீண்டும் ஒருமுறை தனியாகச் சென்று சந்தித்தேன். அவரது நூலக முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

இடையில், நம்ம விழுப்புரம் குழுவினர் நிகழ்விலும், கரிகால சோழன் பசுமை மீட்புப்படை நண்பர்களின் மாரத்தான் நிகழ்விலும்கூடுதல் நேரங்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.


மற்றபடி, வெளியில் நிகழ்வுகளில் ஏதேனும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், “சார், நலமா இருக்கீங்களா” என பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களுடனான நமதுப் பழக்கம் இவ்வளவே.

ஆனாலும் இவர்தம் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை நண்பர்கள் வாயிலாக ஓரளவு அறிந்துள்ளேன்.

சத்தம் போடாமல் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்.

குறிப்பாக, இந்தப் பேரிடர் நேரத்தில் ஓடி ஓடிப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

இதில் சிலவே வெளியே தெரிந்துள்ளன. இன்னும் பல வெளியில் வராதவை. இதுதான்,  வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பார்கள்.

மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடரட்டும்… வாழ்த்துகள் சார்..!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

சன் டிவி நிருபர்

1997 – 99. விழுப்புரம் மாவட்ட சன் டிவி செய்தியாளர் பணி.

வடக்கே ஓங்கூரில் இருந்து தெற்கே சின்னசேலம் வி.கூட்ரோடு வரை நம் சாம்ராஜ்யம் விரிந்திருந்தது.

இந்த இடைப்பட்ட பகுதியில் எது நடந்தாலும், எந்த விபத்து நடந்தாலும் நாம் தான் போக வேண்டும். செல்போன் போன்ற தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம் அது!

சிதம்பரத்தில் வாண்டையார் சகோதரர்கள் கைது செய்யப்பட்டது, புதுவையில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டது, கூவாகம் திருவிழா, விழுப்புரத்தில் ஜானகிபுரம், காட்பாடி ரயில்வே கேட் பிரச்சனைகள் போன்றவற்றை பதிவு செய்தது மறக்க முடியாது!

இவற்றில், ரயில்வே கேட் தவிர்த்து மற்ற செய்திகளில் “சன் செய்திகளுக்காக கோ.செங்குட்டுவன்” என நம் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஆமாம், சிறப்பு செய்திகளில் நம் பெயர் வருவது பெரிய விஷயம்!

அப்போது, 24 மணி நேர செய்தி சேனல் கிடையாது. தினசரி மூன்று முறை தான் செய்தி. நாம் நினைத்த விரும்பிய செய்திகளை எல்லாம் அனுப்பவும், ஒளிபரப்பவும் முடியாது.

நிர்வாகத்தில் ஒன்மேன் ஆர்மி தான். எதை ஏற்பது எதை விடுப்பது எனும் முடிவுகள் செய்தி ஆசிரியர் மட்டுமே எடுப்பது. செய்தி எடுக்கப் போகும் முன்பு அவரிடம் அது எந்த நேரமாக இருந்தாலும் ஒப்புதல் பெற வேண்டும்.

ஒருமுறை, முக்கிய பிரமுகர் ஒருவரின் சாராய டேங்கர் பிடிபட்டது. எஸ்.பி.ரவி பார்வையிட்டார். இதுபற்றி கேட்ட போது, “உங்களுக்கு எஸ்.பி.தான் சம்பளம் தருகிறாரா?” எனத் துணைக் கேள்வி எழுப்பப்பட்டது.

இன்னோரு சமயம், செஞ்சியில் மேம்பாலத்தை அமைச்சர் தா.கி.திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், மேற்கண்ட இரண்டு செய்திகளும் என் மூலமாக அல்லாமல், வேறு வழிகளில் சென்று ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கன.

அது எப்படி என்பதை இதுநாள் வரை நான் அறியேன்.

குறைந்த சம்பளத்தில் நிறைவான பணி செய்தோம்.

சொந்தமாக கேமரா வாங்குங்கள் என ஆலோசனை வழங்கப்பட்டு, கடன்காரனானோம்.

பேருதான் பெத்த பேரு. வேறு வழியில்லை. இரண்டே ஆண்டுகளில் அந்த நிர்வாகத்தில் இருந்து தானாக வெளியே வந்தோம்.

இப்போது தகவல் அறிகிறேன்: அந்த ஒன்மேன் ஆர்மி வெளியேற்றப்பட்டார் (அ) வெளியேறினார் என்று. இந்த நிர்வாகத்தில் ஏறக்குறைய28 ஆண்டு காலம் அவரதுப் பணி என்கிறார்கள்.

அவர் வெளியேறியது, வெளியேற்றப்பட்டது காரணம் யாது தெரியவில்லை?

----------------

சன் டிவியில், விழுப்புரம் மாவட்ட செய்தியாளரான எனக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.1000.

இது, முதன்முதலில் எனக்கு வழங்கப்பட்ட காசோலை.

அப்போதெல்லாம் வங்கிக் கணக்கு எதுவும் கிடையாது.

அதோ ஆரம்பிப்போம்.. அதோ ஆரம்பிப்போம் என்று மாதங்கள் செல்ல...

காலாவதியான இந்தக் காசோலையும் என்னுடனேயே தங்கிவிட்டது!

வியாழன், 23 ஏப்ரல், 2020

விழுப்புரம் கோ.செங்குட்டுவன் - முகநூல் நேரலையில்



நேரலை… முதல் முயற்சி… கன்னி முயற்சி…

பொதுக்கூட்டங்களில் மேடைகளில் பேசி இருக்கிறோம். அந்த அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், இணையத்தில் நேரலை என்பது நமக்கு இதுதான் முதல்முறை. 45இல் இருந்து ஒருமணி நேரம் வரை இருக்கலாம் என்பது நெறியாளர்களின் கருத்து.

ஆனாலும் நீண்ட நேரம் இழுக்காமல் சுருக்க வேண்டும் என நான் கருதினேன்.

வளவள வென்று இருக்கக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒருமணி நேரத்தில் சொல்லிவிட முடியாது.

அதேநேரம், முக்கியமான வரலாற்றுத் தடயங்களைப் பதிவு செய்தாக வேண்டும்!

கடந்த இரண்டு நாள்களாக கடுமையான மன அழுத்தம்.

வெறுமனே ஸ்கிரீன் முழுக்க நம் முகத்தைக் காட்டுவது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு சலிப்பைத் தரும்.

தொடர்புடைய இடங்களின் புகைப்படங்களைக் காட்டினால்? தீடீர் யோசனை தலைகாட்டியது.

உரையைத் தொகுப்பது மிகப்பெரிய காரியமாக இருந்தாலும், உரையின் ஊடாக பொருத்தமானப் படங்கள் வர வேண்டும்.

இதற்காக, 104 புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டன. பின்னர் அவை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தும் பணி.

அப்புறம், ஷீட்டிங்கிற்கு நமது வசந்த மாளிகை சரிப்பட்டு வருமா? வேறு இடத்தைத் தேடலாமா?

அப்புறம், லைட்டிங் போன்ற தொழில்நுட்பப் பிரச்சனைகள் தலைகாட்டின.

என் மனைவி, மகள், மகன் எல்லோருமே ஒருவழி ஆகிவிட்டார்கள். அந்தளவுக்கு நான் கொடுத்த நெருக்கடி!

பக்கத்து வீட்டில் இருந்து சில பொருள்கள் இரவலாகப் பெறப்பட்டன. நண்பர் பாரதாதாசன் கொடுத்த லேப்டாப் உரிய நேரத்தில் கை கொடுத்தது.

மகள் புனிதவதி, மகன் சித்தார்த்தன் – இந்தப் பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

சரியான நேரத்தில் எல்லாம் ஓரளவு சரியாக அமைந்துவிட நேற்றைய (23.4.2020 வியாழன்) நேரலை ஓரளவு சிறப்பாகவே அமைந்ததாகக் கருதுகிறேன்.

மாவட்டம் முழுவதும் வரலாற்றுத் தடயங்கள். எல்லாவற்றையும் சொல்வது சாத்தியமல்ல. இதனால் பல பகுதிகள் விடுபட்டு இருக்கலாம்.

இரவு 10 மணி. ஏராளமான நண்பர்கள் தங்கள் தூக்கத்தைத் தியாகம் செய்து கண்டு, கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி!

குறிப்பாக, இந்த இணையவழி உரைத் தொடருக்கு ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுபாஷினி அவர்களுக்கும் இவற்றை நெறிப்படுத்தி வரும் தேன்மொழி, விவேகானந்தன் ஆகியோர் மிகவும் நன்றிக்கு உரியவர்கள்..!

இந்த நேரலையைத் தவறவிட்டவர்களுக்காக யுடியூப் இணைப்பு...

https://youtu.be/sUoC_JzbLKE


ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

விழுப்புரம் கலவரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

Villupuram riot not communal at outset
Official failed to curb
Aunti – socials, says panel

மே 1, 1979 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைப்பு செய்தி இது!

1978 ஜுலை 25 – 28 . கலவர பூமியானது, விழுப்புரம்.

மிகப்பெரிய வகுப்பு மோதல். தாழ்த்தப்பட்டவர் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சதாசிவம் நியமிக்கப்பட்டார்.

விழுப்புரம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் அறிக்கை 1979 மார்ச் இறுதியில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் விவரங்களைச் சொல்கிறது, மேற்காணும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.


விழுப்புரம் கலவரம்: தினமணி செய்தி

பழைய பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு இருந்தேன்.

தினமணி, 1.5.1979 நாளிதழ் கண்ணில்பட்டது.

முதல் பக்கத்தில் உள்ள 5 கால செய்தியின் தலைப்பு இப்படியாக இருக்கிறது:

“விழுப்புரம் கலவரங்கள்: “சமூக விரோதிகள் துவக்கியதே”
சதாசிவம் கமிஷன் அறிக்கை தாக்கல்
ரெவினியூ, போலிஸ் அதிகாரிகள் செயல்பாடுக்குக் கண்டனம்”

செய்தியின் உள்ளே, ‘சதாசிவம் கமிஷன் அறிக்கை’ பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.


திங்கள், 13 ஏப்ரல், 2020

விழுப்புரம்: இந்த ஆண்டு இலட்ச தீபம் இல்லை

“என் வாழ்க்கையில் இலட்ச தீபம் இல்லாமல் நான் பார்த்ததில்லை” மிக நீண்ட அனுபவசாலி மாதிரி பேசினான், என் 14 வயது மகன் சித்தார்த்தன். நான் சொன்னேன், “தம்பி என் அனுபவத்திலேயே நான் இப்படி பார்த்தது இல்லை.”

விழுப்புரத்தின் ஒட்டுமொத்த அனுபவமே இப்படி இருந்திருக்காது தான்.

இந்த ஊரின் ஒரே விழா, ஆஞ்சநேயர் கோயில் சார்ந்து நடைபெறும் இந்த இலட்ச தீபத் திருவிழா தான்.

திருவிழா என்னவோ பத்து நாள் தான். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் களைகட்டும் திரு.வி.க. வீதி.

கூடவே, தேர்வுகள் அனைத்தும் முடிந்து, கோடை விடுமுறையும் சேர்ந்து கொள்ளும். கொண்டாட்டத்திற்குக் கேட்கவே வேண்டாம்!

பத்திரிகையாளராக இருந்த போது, அல்சர் எனப் பொய் சொல்லி, ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் விடிய விடிய திருவிழாவில் சுற்றி வந்து இருக்கிறேன்.

 இப்படியான ஏராளமான அனுபவங்கள் உங்களில் பலருக்கும் இருக்கும்.

கொரோனோ அத்தனையையும் முடக்கிப் போட்டு விட்டது.  இந்த ஆண்டு இலட்ச தீபம் இல்லை. வெறிச்சோடி கிடக்கிறது திரு.வி.க.  வீதி!


வருடப்பிறப்பு,
வழக்கத்தை விட முடியாத பலரும் வந்து  கோயிலுக்கு வெளியே விளக்கேற்றி செல்கின்றனர்.



(இன்று 14.04.2020 செவ்வாய் காலையில் எடுத்தப் புகைப்படங்கள்)

சனி, 4 ஏப்ரல், 2020

விழுப்புரத்தில் மயான அமைதி

காதைக் கிழிக்கும் டிரம்ஸ் சத்தங்கள் இல்லை…

அச்சுறுத்தி மிரள வைக்கும் ஆ ஊ ஆர்ப்பாட்டங்கள் இல்லை…

ஒப்பாரிப் பாடல்களுடன் செல்லும் “இரதங்கள்” இல்லை…

முகத்துக்கு நேராக வீசப்படும் பிண மாலைகள் இல்லை…

தலைதெறிக்க ஓட வைக்கும் பட்டாசுகள் இல்லை…

ஒன்றிரண்டு சடலங்களும் கூட கண நேரத்தில் கடந்து சென்று விடுகின்றன…


மயானம் அமைந்துள்ள, விழுப்புரம் கன்னியர்குளம் சாலையில்,
இப்போது தான் மயான அமைதியைப் பார்க்கிறேன்..!



செவ்வாய், 31 மார்ச், 2020

அக்ராஹாரத்து அதிசயப் பிறவி திருலோக சீதாராம்

கவிஞர் திருலோக சீதாராம்...


பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டமான்துறையில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாளுக்கும் 1917இல் மகனாகப் பிறந்தவர்.

பாரதியின் மீது தீவிரப் பற்றுடையவர். செல்லும் இடங்களில் எல்லாம் பாரதிப் பாடல்களைப் பாடியவர். பாரதியின் குடும்பத்தோடு நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்.

பாரதியின் மனைவி செல்லம்மாள் இறுதிக் காலத்தில் அவருடன் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தவர். திருலோக சீதாராம் மடியில்தான் செல்லம்மாள் பாரதியின் உயிர் பிரிந்தது.

சிறுவயதிலேயே எழுத்தாற்றல் கொண்டிருந்த திருலோக சீதாராம், இந்திய வாலிபன், ஆற்காடு தூதன், கிராம ஊழியன், சிவாஜி, பால பாரதம் ஆகிய பத்திரிகைகளை நடத்தி இருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன்  ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு, இலக்கியப் படகு உள்ளிட்ட நூல்களை எழுதி இருக்கிறார்.

பாரதி குடும்பத்தினரோடு நெருங்கியத் தொடர்பில் இருந்த திருலோக சீதாராம், கவிஞர் பாரதிதாசனோடும் நட்புக் கொண்டு இருந்தார். திருச்சியில் பாவேந்தர் குறித்து இவர் ஆற்றிய உரையைக் கேட்ட அண்ணா, “அக்ரஹாரத்து அதியசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்” எனப் பாராட்டி இருக்கிறார்.

திருலோக சீதாராமுக்கும் விழுப்புரத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அவரது எழுத்துப் பணி, ஏறக்குறைய இந்த மண்ணில்தான் தொடங்கியிருக்க வேண்டும். அருகிலுள்ள பரிக்கலில், இராம சடகோபன் என்பவர் நடத்திவந்த “தியாகி” எனும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.

1938இல், விழுப்புரத்தில் “பால பாரதம்” எனும் இதழை நடத்தி இருக்கிறார். இதே காலக்கட்டத்தில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை இவர் முதன் முதன் முதலில் விழுப்புரத்தில் சந்தித்து இருக்கிறார்.

1952இல் விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையில் நடந்த விழாவில், பாரதியின் மகள் தங்கம்மாள் பாரதியுடன், திருலோக சீதாராமும் பங்கேற்றுச் சிறப்பித்து இருக்கிறார்.

விழுப்புரத்துக்கும் இவருக்குமான மேலதிகத் தொடர்புகள் விரிவாக ஆய்வும் பதிவும்  செய்யப்பட வேண்டும். 

இவர் தனது 56ஆம் வயதில் 1973இல் காலமானார்.

திருலோக சீதாராமன் குறித்து கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்ரமணியன் ”திருலோகம் என்றொரு கவி ஆளுமை” எனும் ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவிஞர், பத்திகையாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் திறன்கொண்ட திருலோக சீதாராமன் அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப் 1)! 

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தஞ்சை பெரிய கோயிலுக்குப் போக வேண்டியவர்

இவரை அண்ணாந்து தான் பார்க்க முடிகிறது..!


அவ்வளவு பிரம்மாண்டம்: இன்னமும் கூட பல அடிகள் கீழே, மண்ணில் புதைந்து இருக்கிறாராம்!

திருவக்கரைப் பகுதியில் இருந்து பணிகள் முற்றுபெறுவதற்கு முன்னமேயே, தஞ்சை பெரிய கோயிலுக்குத் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் இந்த நந்தீசர்.


ஆனால், சிறிது தூரத்திலேயே சங்கராபரணி ஆற்றைக் கடந்தும் வண்டியில் இருந்து கீழே விழ, பின்ன மானவர் அதே இடத்தில் கைவிடப்பட்டார்.

தஞ்சை பெருவுடையார் கோயில் மூலவரான பெரிய இலிங்கத்திற்கானக் கல், விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை.

ஆனால் அங்கிருக்க வேண்டிய நந்தீசர், இங்கேயே தங்கி விட்டார்.

இதற்குப் பிறகு இராஜராஜன் சிறிய நந்தியை வைத்து வழிபட்டதாகவும் தற்போதுள்ள பெரிய நந்தி, நாயக்கர் காலத்தில் வைக்கப்பட்டதாகவும் ஆய்வாளர் பேராசிரியர் சு.இராஜவேலு அவர்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, தஞ்சை பெரிய கோயிலில் இருந்து இங்கு வந்த சிவாசாரியார்கள்  கைவிடப்பட்ட இந்த நந்தீசருக்கு வழிபாடு நடத்திச் சென்று இருக்கின்றனர்.

விழுப்புரத்தின் அருகாமையில் இருந்தும் இன்றைய பயணத்தின் போது தான் நாங்களே இவரைச் சந்தித்தோம்.


நீங்களும் இவரை சந்திக்க வேண்டுமா..?

சாராயக் கடை அருகில்,
சன்னியாசிக்குப்பம்,
வழி: திருபுவனை, புதுச்சேரி மாநிலம்…

எனும் முகவரியில் அணுகவும்..!

திங்கள், 27 ஜனவரி, 2020

ஐயா கோ.விஜய வேணுகோபால் அவர்களுடன்

"எழுதறதுக்கு முன்னாடி, நீங்க யாருக்காக எழுதறீங்க? அப்டிங்கறத உள்வாங்கிக்கிட்டு எழுதுங்க"


புதுச்சேரியில் இன்று27.01.2020, மூத்தத் தொல்லியல் ஆய்வாளர் ஐயா கோ.விஜய வேணுகோபால் அவர்களை சந்தித்த போது, அவர் சொன்னது.


நிகழ்ச்சிகளில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவ்வளவாகப் பரிச்சயமில்லை.

இப்போது தான் முதன் முறையாக ஐயா அவர்களை நேரில் சந்திக்கிறேன். பேசுகிறேன்.


நேரமில்லை. கலந்துரையாடல் ஒன்றிற்கு அவர் போக வேண்டும். இப்போதும் பிரெஞ்சுக்காரர் ஒருவர் சைவ சித்தாந்தம் குறித்து, ஐயாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் இடைப்பட்ட நேரத்தில் ஐயா அவர்கள் நம்மிடம் நிறைய பேசினார். தொல்லியல், அரசியல் உள்ளிட்ட விசயங்களைப் பேசினோம்.


இன்னும் நிறைய பேச வேண்டும். இவரிடமிருந்து தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

விரைவில் மீண்டும் சந்திக்கிறோம்.


இப்போதைக்கு விடைபெற்றோம்..!

புதுவைக்கு அழைத்துச் சென்ற, இந்த சந்திப்புக்கு துணைநின்ற தம்பி விஷ்ணு Vishnu Stark வுக்கு நன்றி..!

புதன், 15 ஜனவரி, 2020

ஏழுசெம்பொன் சிவாலயம்

ஏழுசெம்பொன்...

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமம், “தம் அடித்தால் தர்ம அடி” என சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் பரபரப்பாக அடிபட்ட ஊர் இது. புகைப்பதற்கு எதிரான ஊர்க்கட்டுப்பாடு அந்தளவுக்கு!

கல்வெட்டுகள் இந்த ஊரை ஏழிசைமோகன் எனக் குறிப்பிடுகின்றன. காடவராய கோப்பெருஞ்சிங்கனின் பட்டப்பெயர்களில் ஒன்றுதான் ஏழிசை மோகன் என்பது.

இவரது ஆட்சிக் காலத்தில் இங்குள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களும் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சிவாலயம், திருக்காளத்தி உடைய நாயனார் கோயில் எனவும் வைணவ ஆலயம் தென்திருவேங்கட பெருமாய் கோயில் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரிசா மன்னன் குமாரஹம்வீரர் என்பவரின் தமிழகப் படையெடுப்பின் போது (கி.பி.1463) இக்கோயில்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. பின்னர் விஜயநகரர் ஆட்சியில் சீரமைக்கப்பட்டன.

ஆனாலும் பிற்காலத்தில் சிவன் கோயில் மிகவும் சிதலமடைந்தது. நூற்றாண்டுகளைக் கடந்து அப்படியே காட்சியளித்து வந்தது.

கடந்த மாதம் போயிருந்தோம். மழைப் பெய்த பிற்பகல் வேளையில், கோயிலின் பழைய அமைப்பை நாங்கள் தரிசித்தது அதுதான் கடைசிக் காட்சி!


இந்த நிலையில் இக்கோயிலை சீரமைப்பது எனும் முடிவு செய்த ஊர்ப்பொது மக்கள் தற்போது அதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளனர்.




கடந்த வாரம் தொடங்கியப் பணியில், கோயில் முழுக்கப் பிரிக்கப்பட்டுவிட்டது.

ஓரிரு தினங்களில் புதிய கோயிலுக்கானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.



“கோயிலின் பழமை மாறாமல் அதே பாணியில் கட்டப்படும்” என உறுதியாகத் தெரிவிக்கிறார், இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு.ரமேஷ்.

கோயில் திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள் இவரை, 7708463779 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புகைப்படங்கள்:
கண சரவணகுமார் திருவாமாத்தூர்

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வீரப்பாண்டி கிராமத்தில்

திருக்கோவலூர் அருகே உள்ள வீரப்பாண்டி, தொல்லியல் தடயங்கள் நிறைந்தக் கிராமம்.

இப்பகுதியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிலம்பரசன், தொல்லியலில் மிகுந்த ஆர்வம் உடையவர். தொடர்ந்துத் தேடலில் இருப்பவர்.

தொல்லியல் பொருள்கள் பலவற்றைத் தன் சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

நேற்று12.01.2020 ஞாயிறு, திருக்கோவலூர் வந்த ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு, பேராசிரியர் செல்லபெருமாள் ஆகியோருடன் என்னையும் தமது சொந்தக் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஊரின் புறத்தே பரந்து விரிந்து காணப்படுகிறது பெரிய ஏரி.

ஏரிக்குள் அங்கும் இங்கும் ஆக பெரியதும் சிறியதுமாக பாறைக் குன்றுகள் முளைத்துக் காணப்படுகின்றன.


அதில் ஒன்றை அடையாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் சிலம்பரசன்.

குன்றின் மீது ஏறினோம். இடையில் அழகான குகைத் தளம். கீழ்வாலையில் பார்க்கிறோமே, அந்த மாதிரி!


அருகில் உள்ள ஓரு பாறை. வழவழப்பானது. சிரமப்பட்டு தான் ஏறினோம்.


இதில் தான் அந்தத் தொல்லியல் அடையாளங்கள் நிறைத்துள்ளன.


இன்னும் ஆவணப்படுத்தப் படாதவை என்றே கருதுகிறோம்.
விரைவில் ஆவணப்படுத்துவோம்.

ஆசிரியர் சிலம்பரசன் அவர்களுக்கு நம் நன்றி!